Posts

Showing posts from July, 2017

விடியல்

புதிய விடியலில் பிறக்கின்ற பொழுதில் பொழிகின்றது மகிழ்ச்சி மழை... ஆசைதீர அள்ளிப்பருகி ஆரம்பியுங்கள் இன்றைய தினத்தை...

இரவு...

உழைத்த களைப்பில் உறங்கத் தவிக்கும் கண்கள்... இமைகளை இறுக மூடாதீர்கள்... பாவம் கனவுகள்... நசுங்கக் கூடும்...

விடியல்

விண்ணில் கிளம்பி வெற்றிடம் கடந்து பூமி தழுவ புறப்பட்ட ஒளியில் வெளிச்சமாய் விடிகிறது வியாழன்...

இரவு...

விண்மீன்களின் வெளிச்சத்தில் நெடுவானில் விளையாடும் நிலவு மழலையின் நெற்றி வருடிச் செல்கிறது இரவு...

விடியல்...

ஓளிமுகம் கண்டு மலர உள்ளிருந்து ஏங்கும் இளம் மொட்டுகள் மலராக பனித்திரைக்கு பின்னிருந்து பார்க்கும் பகலவன்... அழகாக ஆரம்பமாகிறது மார்கழி...

விடியல்

இரவு உறக்கத்தின் எச்சம் இமைகளின் மீது... கைநிறைய ஒளி அள்ளிக் கழுவிவிட்டு களிப்புடனே தொடங்குவோம் இன்றைய பொழுதை...

இரவு...

சிரிக்கும் நிலவில் தெறிக்கும் முத்துக்களைப் பொறுக்கும் இருளைப் பொறுத்துக்கொள்ளும் இரவு....

விடியல்

கண்களிலிருந்து கனவுகள் கன்னங்கள் வழியிறங்கி காத்திருக்கும் காலை... நனவாக்குவோம் நாமென்ற நம்பிக்கையுடன்...

இரவு...

கருவானில் இருள் கயிற்றில் முகில் ஊஞ்சலில் நிலவிருக்க நிதானமாய் ஆடுகிறது இரவு...

விடியல்...

விழிநிரம்பிய இருள் விடைபெற்றுச் செல்ல ஒளிநிரம்பிய பகல் உங்களுக்காக காத்திருக்க வழித்திறந்து வைத்து வாய்ப்புகள் அணிவகுக்க செழிப்பாகத் தொடங்கிடும் சீரிய நாள் இன்று...

இரவு...

மேலை மலைத்தொடரில் மாலையில் இடறிய பரிதி இன்னும் எழவில்லையோ என எட்டிப்பார்க்க விரையும் நிலவுக்கு இடம்கொடுத்து விரியும் இரவு...

விடியல்

இருள் மூடி உறங்கிய ஒளிக்கூட்டத்தை கை தொட்டு எழுப்புகிறது காலம்... கதிரவன் கண்விழிக்க காலை தொடங்குகிறது...

இரவு...

வங்கக் கடற்பரப்பில் வாரியெடுத்த தண்ணீரை வறண்ட மண்ணில் சிந்த தயங்கி நிற்கும் மேகங்களை தாங்கி நிற்கும் இரவு...

சூரியன்

வேலைக்குச் செல்லும் பெண் விடுமுறைநாளில் உறங்குவதைப்போல விடிந்தபின்னும் மேகங்களுக்குள் சூரியன்...

இரவு...

இருள்கடலில் எழும் மேகஅலைகளுக்கு இடையே காலைக் கரையை நோக்கி களைப்பின்றி நீந்துகிறது இரவு....

விடியல்

அன்புஓளி அலையலையாய் அகவானில் பரவ அழகாய் விடிந்து ஆரம்பமாகும் காலை...

இரவு...

ஒளிப்பூக்களும் இல்லை ஒற்றை விளக்கும் இல்லை விடியலுக்கு வழிதேடி இருளுக்குள் நடக்கும் இரவு...

சூரியன்

உரக்கக் கத்தும் பறவைகளின் ஒலியில் உறக்கம் கலைந்து இருள் நீக்கி எழும் சூரியன்...

இரவு...

அந்தியில் அரும்பி இருளுக்கும் ஒளிக்கும் இடைப்பட்ட பொழுதில் மொட்டாகி கருப்பு பூக்களால் மலர்ந்தது இரவு...

இரவு...

மெல்ல வீசும் காற்றில் சொல்ல ஏதுமில்லையென்று சும்மா நகரும் மேகங்கள்... நல்லசெய்தி சொல்லுங்கள் என்று வறண்ட மண்ணிலிருந்து வான்நோக்கி கேட்பதைக் கேட்காமலேயே நகர்கிறது இரவு...

விடியல்

கண்விழித்து எழுந்த கதிரவன் காதில் காலம் சொல்கிறது காலை தொடங்குகிறதென்று...

இரவு...

இமைகளின் மேல் ஏறி அமர்ந்து உறங்கென்று கெஞ்சும் கனவுகளின் ஆசைகளுக்கு வழிவிட்டு நகர்கிறது இரவு...

பகல்...

சிவந்த விழிகளோடு விழித்த சூரியன் சினத்தோடு எழுந்து செவ்வானம் கடந்து ஒளியோடு வெயில் அள்ளி உக்கிரமாய் வீச வெப்பத்தில் தகிக்கிறது பகல்...

இரவு...

தகித்த வெயிலுக்குப் பின்வந்த சாயங்கால மேகங்கள் பொழிவதா வேண்டாமா என்று விண்மீன் சோழிஉருட்ட விடைக்காக காத்திருக்கும் இரவு...

விடியல்

மேகச் சிறுபெண்கள் தூறல் பூக்கள் தூவ நனைந்தபடியே நடக்கத் தொடங்குகிறது காலை...

இரவு...

மேக வீணையின் தூறல் தந்திகளை மெல்லிய காற்று மீட்ட இசையாய் பெருக்கெடுக்கும் இருளை ரசித்தபடி நகர்கிறது இரவு...

விடியல்...

உறக்கம் வழிந்துவிடுமென்று திறக்கத் தயங்கும் இமைகளை வலிந்து திறக்கின்றன வரிசையில் நிற்கும் கடமைகள்...

இரவு...

வெயிலோடும் நிழலோடும் விளையாடிக் களைத்த பகல் விலகி நகர்ந்தபின் இருதிசை தொட்டு இருள்இறக்கை விரிக்கிறது இரவு...

விடியல்

புத்துணர்வு கமழ வரும் பூந்தென்றல் வருட புல்லரித்தது புலரும் பொழுதில் புன்னகையோடு தொடங்குகிறது நாள்...

இரவு...

அடர்ந்து விரிந்த வான்மரத்தின் உதிராத பூக்களை உற்றுப் பார்த்தபடி இருளில் கூடு தேடும் இரவு...

விடியல்

அதிகாலை துயிலெழுந்து ஆதவன் கிளம்பிவிட்டான் அந்திவரை அரசாள நல்ல வெளிச்சத்தோடு நன்மைகளையும் கொடையாக்கி...

இரவு...

இமைகள் மூடும் நேரத்தை எதிர்பார்த்து கண்களோடு விளையாடக் காத்திருக்கும் கனவுகளை கவனித்தபடி நகர்கிறது இரவு...

விடியல்

சூரிய ஓவியன் தூரிகை ஒளியால் வானப் பரப்பெங்கும் வண்ணம் தீட்ட ஓவியமாய் ஆரம்பமாகிறது ஒரு நாள்...

முகம் கருக்கும் வானம்...

உண்மையும் உழைப்பும் ஓரமாய் திண்டாட சூழ்ச்சியும் துரோகமும் ஆனந்தமாய் கொண்டாட நீதியும் நேர்மையும் காற்றோடு கரைந்துபோக முகம் கருக்கும் வானம்...

விடியல்

அலைவாயில் ஆர்த்தெழும் கதிரொளியில் அஞ்சிய இருளெல்லாம் மலைவாயில் மறைந்திட கம்பீரமாய் தொடங்குகிறது காலை....

இரவு...

இமைத்தொட்டிலில் ஏறிப் படுக்கின்றது உழைப்பின் களைப்பு உறக்கம் தாலாட்ட...

அப்பா

நெடிதுயர்ந்து வளர்ந்து நீள்கிளைகள் பரப்பி அடுக்கடுக்காய் தழைத்து அழகாய் பூத்துச் சிரிக்கும் மரத்தின் கீழ் மண்ணுக்குள் ஆழ்ந்து புழுக்கமின்றி புதைந்திருக்கும் வேர்...

பகல்...

இரவுத் தாலாட்டில் உறங்கி இப்போது எழுந்த பூமிக் குழந்தையை நிலவு அன்னை சூரியத் தந்தையின் தோள்களில் சாய்க்க பகல் தொடங்குகிறது...

இரவு...

ஏழாம்பிறை நிலவும் எண்ணில்லா விண்மீன்களும் விண்ணிறைந்து விழித்திருக்க இருள்திரை விலக்கி மெல்லிய ஒளியில் வழிபார்த்து நடக்கும் இரவு...

அப்பா

உச்சந்தலை தகிக்கிறது உள்ளங்கால் சுடுகிறது உடம்பெல்லாம் வேர்க்கிறது என்றெல்லாம் எரிச்சலான எனக்கு இருளுக்குள் நிற்கும்போதுதான் உறைக்கிறது 'வெளிச்சம்' இல்லையென்று...

விடியல்

முந்தைய இரவு பனியில் மொத்தமாய் நனைந்த மொட்டுகளின் இதழ்களை தொட்டு வருடி சூரியஒளி திறக்க மலர்கிறது காலை...

இரவு...

இலைகளின் வழி வழிந்தது நிலவொளி மண்ணில் தெரியும் வானத்தை கண்ணில் தேக்கியபடி கடக்கிறது இரவு...

அப்பா...

தலைவருடும் விரல்களின் சுகத்தில் தூங்கிப் போனதால்தானோ வலித்த கால்களைப் பிடித்த கரங்கள் கவனத்தில் வரவில்லை...

ஞாயிறு

இரவெல்லாம் இளைப்பாறி இப்போது எழுந்த ஞாயிறு பொன்னொளி வீசி புறப்பட பொழுது விடிகிறது...

இரவு...

மேகமில்லா வானில் மொய்க்கும் விண்மீன்கள் ஒன்பதாம்பிறை ஒளியில் உலகை ரசிப்பதை பார்த்தபடி பறக்கிறது இரவு...

அப்பா...

பள்ளிப் பருவத்தில் ஒரே ஆண்டில் எனக்கு வாங்கிய மூன்றாம் இணை செருப்புகளுக்கு அருகே கிடந்த மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய அப்பாவின் தேய்ந்த செருப்புகள் எனக்கும் உறக்கத்திற்கும் இடையில் இப்போது வந்து நிற்கின்றது...

காலை...

கனவுகளின் மழையில் நனைந்த இமைகளை ஒளி கொண்டு துடைத்து விழி திறக்க வைத்து விடிகிறது காலை...

இரவு...

பாலுக்குத் துடிக்கும் பச்சிளம் குழந்தையாய் நீரின்றி வெடித்த நிலம் மீது நிலவு காய மண் மருகுவதை கண்ணீரோடு கடக்கிறது இரவு...

இரவு..பகல்...

இருளோடு நடந்த இரவு முடிந்தது... ஒளியோடு வந்த பகல் விடிந்தது... பகலோடு பயணிக்கட்டும் மகிழ்ச்சி...

இரவு...

கொஞ்சம் பனியும் கொஞ்சம் நிலவும் வீட்டிற்கு வெளியில் நிற்க இமைகளின் மேல் ஏராளமாய் இருக்கிறது தூக்கம்...

அன்னை...தந்தை...

கரடு முரடான பாதைகளைக் கடக்கும்போது கையில் தூக்கினாள் அன்னை... செருப்பைத் தந்தார் தந்தை...

கதிரவன்

வெண்ணிலவு வைத்துச் சென்ற விண்மீன் புள்ளிகளில் காலையில் கோலமிட கதிரவன் வந்து பார்க்க புள்ளிகளைக் காணாமல் தேடிச் செல்கிறது கிழக்கிலிருந்து மேற்காக...

இரவு...

தமிழென்று ஒரு மொழி தனித்து இயங்குவதைச் சகிக்க மாட்டாதவரிடம் ஏறு தழுவ இடம் கொடுங்களென்று அறம் அழித்த மறம் தொலைத்த ஒரு கூட்டம் மண்டியிட்டு மன்றாடுவதை விரக்தியாய் பார்த்தபடி வேகமாய் நகர்கிறது இரவு...

இரவு...

இமைகளை வட்டமிடும் கவலைகளை கண்களுக்குள் புகவிடாமல் கதவடையுங்கள்... குறைந்த பட்சம் உறக்கமேனும் கவலைகளும் காயங்களுமின்றி உறக்கமாக மட்டும் இருக்கட்டும்...

விடியல்

கனவுகளின் ஏணியில் கால் வைத்து மேலேறி இமைகள் தொட்டு திறந்த போது விடிந்தது பொழுது...

இரவு...

வீறுகொண்ட போராட்டங்கள் ஏறு தழுவலை கொண்டுவருமா..? இரண்டு விழிகளும் இருண்டு போனவரிடம் எனது ஓவியத்தைப் பாரென்று சொல்லிப் பயனென்ன என்று பயந்தபடி கேட்டு நகர்கிறது இரவு...

இரவு...

இமைகளுக்குள் பூட்டி வைத்த கனவுகள் களவு போகாமல் காவல் இருக்கிறது இரவு...

காளைகள்

சிங்கத்தோடு விளையாடுவார்களா எனக்கேட்ட அன்பர்களுக்கு சிறு புன்னகையோடு விடையிறுக்கிறோம்... வாடிவாசல் தாண்டி ஓடிவருவது சிங்கமே என்றாலும் சிறிதும் தயங்காது பிடரி பிடிக்கக் காத்திருக்கின்றன காளைகள்...

மாடுபிடி...

கால்பிடித்து வாழ்வோரும் வால்பிடித்து வாழ்வோரும் பெருகிவிட்ட காரணத்தால் திமில்பிடித்து வாழ்வோர் தேவையில்லை என்று சட்டம் போட்டாலும் திட்டம் போட்டாலும் மானமும் மறமும் வாழும்வரை மாடுபிடி வாழும்...

இரவு...

உறக்க தேசத்தின் விழிக்கோட்டையில் இமைக்கதவுகள் மூடியபின் விழித்துக்கொள்கிறது கட்டுப்பாடுகள் இல்லாத கனவுகளின் அரசாங்கம்...

இரவு...

வானவாசல் திறக்கவில்லை நீரும் இல்லை... வாடிவாசல் திறக்கவில்லை ஏறும் இல்லை... வயல்வாசலும் திறக்காமல் போனால் சோறும் இல்லை என்று சொல்லி நகர்கிறது இரவு...

சூரியன்...

கடந்து சென்ற இரவின் காலடித் தடங்கள் இன்னும் இருக்கின்றன இமைகளின் மேல்... இன்னும் என்ன உறக்கமென்று முகத்தில் சுடும் சூரியன்...

இரவு...

வெண்ணிலவைப் பின்தொடரும் விடலை மேகங்களை கருப்பு விழிகள் உருட்டிக் கண்டித்துச் செல்கிறது இரவு...

இரவு...

கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் மானம் மீட்கப் போராடும் 'மனிதர்களை' மனதார வாழ்த்தி நகர்கிறது இரவு...

வேங்கைகள்

விளக்குகளை அணைத்துவிட்டால் விலகிஓடலாம் விட்டில் பூச்சிகள்... ஆனால் வேங்கைகள் ஒருபோதும் விளக்குகளை நம்பிக் களம் காண்பதில்லை...

வலைகளுக்கு வெளியில்...

சிலரின் சிந்தனைகளுக்கு குடும்பம் இறக்கைகளாகிறது... சிலருக்கு கூண்டுகளாகிறது... வலைகளுக்கு வெளியில் பறப்பவர்களுக்கு வணக்கங்கள்...

அறப்போர்...

கடும் குளிர் இரவில்... சுடும் வெயில் பகலில்... சோர்ந்து விடாமல் போராடும் இளைஞர் கூட்டம்... உடல்நலம் பாராமல் சுயநலம் இல்லாமல் துள்ளி எழுந்தனர் எம் தோழர்கள்... கனவுகள் மிதக்கும் கண்களில் கனல் தெறிக்கிறது... பாடம் சொல்லும் உதடுகளில் இடி முழங்குகிறது... எழுதுகோல் ஏந்தும் கரங்களில் மின்னல் ஒளிர்கிறது... பார்த்து நடக்கும் பாதங்களில் பாறைகள் பொடிபடுகின்றன... பால்பேதம் இங்கில்லை... இனபேதம் இங்கில்லை... அறிந்த முகங்கள் அருகில் இல்லை... ஆனாலும் அச்சமில்லை... கூடுவார்கள்... கூச்சலிடுவார்கள்... வந்த சுவடு தெரியாமல் வீடு திரும்புவார்கள் என்றே எண்ணிய எண்ணங்களில் மண்தூவி எண்ணம் செயல் எல்லாம் ஒன்றே... ஏறு தழுவல் என்று சொல்லிக்காட்டிய சுடர் விளக்குகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... இனமும் மொழியும் இனிய பண்பாடும் இனி பகைவர் சதியில் அழிந்துபோகாதென்று அறைகூவிச் சொல்கிறோம்... வெல்லட்டும் அறப்போர்...                

வீர மகளிர்...

புலியை முறத்தாலடித்து பெண்ணொருத்தி விரட்டினாள் என்பதையும் போர்க்களத்தில் மார்பில் வேல்வாங்கி வீழ்ந்தான் கணவன் என்றபின்னும் தயக்கமேயின்றி தனயன் கையில் வாள் கொடுத்து களம் அனுப்பிய தாயையும் பதிவுசெய்த எங்கள் இலக்கியங்களைப் பொய்யென்றும் புனைவென்றும் பேசியவர் வாயடைக்க திருத்தணி தொடங்கி தென்குமரி வரை களமாடும் வீர மகளிரை வணங்குகிறேன் ஈர விழிகளோடு...

இரவு..

விரல்களுக்கு வெளியே நீளும் நகங்களென இமைகளுக்குள் துருத்தும் கனவுகள் நறுக்கி கடந்து செல்கிறது இரவு...

இரவு...

ஒலிகள் நிறைந்த பொழுதொன்று ஒதுங்கிச் செல்ல அமைதியான இருளின் மேல் பூனையென பாதம் பதிக்கிறது இரவு...

இரவு...

நினைவுக் காற்றில் நிலவுப் பாய் விரித்து இருள் கடலில் நகர்கிறது இரவுக் கப்பல் கனவுகளின் வழியே...

அவசரச் சட்டம்

எங்கள் பண்பாடுகள் பாதுகாக்கப் படவேண்டுமென்றோம்... ஏறுதழுவல் எங்களுக்கு வேண்டுமென்றோம்... உச்சியில் இருந்தோரின் செவிகள் செவிடாகவே இருந்தன... காளைகள் காக்கப்பட வேண்டுமென்று கதறிய எங்கள் குரல் அவர்களின் காதுகளில் விழவேயில்லை... குரலின் தொணி கொஞ்சம் மாறியது... ஜெர்சி பசும்பாலின் தீமைகள் சொன்னோம்... பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை எந்நாளும் வாங்காதீர் என்றோம்... பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்போம் என்றோம்... பதறிக் கூடினர்... பலவாறு பேசினர்... கடைசியில் தென்னாடு தேடி ஓடி வந்தது ஒரு அவசரச் சட்டம்... அதுவும் ஒரே நாளில்... உங்கள் செவித்திரை கிழித்தது எதுவென்று எங்களுக்குத் தெரியும்... இனி எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ் படுத்தும் எதையும் இங்கே அனுமதிக்க இளைஞர்கள் தயாரில்லை... நீங்கள் வித்தைகள் காட்ட வேறிடம் தேடுங்கள்...

இரவு...

ஒளிரும் நிலவு ஒளிந்துகொள்ள விரட்டுவது யாரென்று தெரியாமல் விண்மீன்கள் விலகி ஓடி மேகத்துக்குள் பதுங்க இருளில் கவிழ்கிறது இரவு...

இரவு...

வங்கக்கடல் மடியில் வளர்ந்த ஒளிக்கீற்றில் நீண்ட இரவு நிறைவடைந்து விடியும் என்றே தோன்றுகிறது...

கண்ணாடி

மஞ்சள் கண்ணாடி அணிந்து பச்சை இலைகள் பார்த்தேன் கருப்பாக தெரிந்தது...

இரவு...

விண்ணில் எரியும் விளக்கில்லை என்றால் வீதிகளெங்கும் விளக்கெரிந்தாலும் இருட்டாகவே இருக்கிறது இரவு...

இரவு...

காய்ந்து கிடந்த கழனிகள் நனைய நீர் தெளிக்கும் கார்முகில்கள் கடந்து விடுமோ என்று இருளால் வழிமறிக்கும் இரவு...

இரவு...

நனைந்து கடந்த பகலின் கரையில் நடக்கத் தொடங்கும் இரவு...

இரவு...

தேய்ந்தும் வளர்ந்தும் திரியும் சந்திரன்... தேயாமல் காயும் சூரியன்... வேடிக்கை பார்க்கும் விண்மீன்கள்... விண்உலா போகும் வெண்மேகங்கள்... திறந்தேதான் கிடக்கிறது வானம்...

இரவு...

விண்மீன்கள் பூத்த வீதிவழி இறங்கி கண்களை இமைமூடக் காத்திருக்கும் கனவுகளால் நிரம்புகிறது இரவு...

இரவு...

இதயத்தில் கவலைகள் களைந்து இமைகளுக்குள் கனவுகள் நிறைத்து குழந்தைகள் போல் நாம் உறங்க வேண்டுமென்றே உலா வருகிறது இரவு...

இரவு...

ஒளிரும் விண்மீன்கள் வெளிச்சத்தில் குளிரும் தென்றல் போர்த்தி நொடிகளில் படியேறி துடிப்பாக நகரும் இரவு..

இரவு...

வளர்பிறை நிலவின் பொழிவில் தளரட்டும் மனதின் இறுக்கம்... மலரும் இனிய இரவில் மணமாய் பரவட்டும் உறக்கம்...

இரவு...

கொள்ளை நிலவொளி மெல்ல வழிந்து வெள்ளை ஓடையில் வெள்ளமாய் நிறைந்தோட துள்ளும் மீன்களின் வெள்ளிச் சிதறலில் உயிர்க்கிறது இரவு...

இரவு...

இருட்பந்தல் அமைத்து இரவென்று விளித்து ஒளியென்று ஒன்று உண்மையல்ல என்று ஒருவர்மாற்றி ஒருவர் உரைத்தாலும் இருளின் விளிம்பில் ஒளிக்கீற்று விடியும்... இருள் அங்கு மடியும்... உயரக் கிளம்பும் ஒளிக் கோளத்தில் கிளம்பும் கிரணங்களில் உண்மை சுடும்...

இரவு...

பனிப்போர்வை ஊடுருவி பாதி நிலவொளி உள்ளிறங்கி இருள் விலக்கி எட்டிப் பார்க்கையில் வெடவெடக்கும் குளிரில் வீதிவழி நடக்கிறது இரவு...

இரவு...

நெஞ்சக்கடலில் நினைவலைகளின் மேல் அசைந்து மிதக்கும் கனவுக் கப்பலை உறக்கத்தின் மீது நடந்து கடக்கிறது இரவு...

இரவு...

இருண்ட பொழுதில் வறண்ட குளிரில் நடுங்கும் நிலவோடு நகர்கிறது இரவு...

இரவு...

வளரும் நிலவின் ஒளியில் குளிரும் இரவின் மடியில் விழிகள் செருகும் நொடியில் விழுவோம் உறக்கத்தின் பிடியில்...

இருளும் ஒளியும்

இருளுக்கும் ஒளிக்கும் இடையே நிகழும் முடிவில்லாப் போரில் இப்போது உயர்கிறது இருளின் கரம்... எனினும் விரைவில் வெல்லும் ஒளி... குறிப்பு : இதில் அரசியல் சூசகம் ஏதும் இல்லை...

இரவு...

விடிவது யாருக்கு..? அடைவது யாருக்கு..? விடைதெரியா வினாக்களை இருளுக்குள் புதைத்தபடி நொடிகளைக் கடக்கிறது இரவு...

இரவு...

இமைகள் கவிழ்ந்ததும் இறக்கைகள் விரித்து வலசை போகும் கனவுகளின் வரிசை எண்ணி நடக்கிறது இரவு...

நீதி

இருண்ட குடிசையில் ஒற்றை அகலில் ஒளிர்ந்த நீதியின் வெளிச்சம் மங்கிப் போகிறது ஊடக ஒளிவெள்ளத்தில்...

இரவு...

கடக்கும் இரவு நொடிகளால் நகர்கிறதா..? மணிகளால் நகர்கிறதா..? தீர்மானிக்கக் காத்திருக்கின்றன கனவுகள்...

அப்பா...

ஏனோ தெரியவில்லை எல்லா அப்பாக்களும் கனிவு முகத்தில் கண்டிப்பு முகமூடி அணிந்து கொள்கின்றனர்... கண்களில் வழியும் கண்ணீர் துடைக்காத விரல்கள் கன்னத்தில் கண்ணீர்த்தடம் வருடும்... உறங்கிய பின்... காயத்தில் செந்நீர் வழிய வலித்து நிற்கையில் திட்டிய உதடுகள் ஒட்டி முத்தமிடும்... உறங்கிய பின்... இப்போதும் கன்னங்களில் கண்ணீர்த்தடம் இருக்கிறது... காயங்களில் செங்குருதி சிந்துகிறது... வருடும் விரல்களும் வாஞ்சையாய் முத்தமிடும் உதடுகளும் வரட்டுமென்றே உறங்குகிறேன்... கனவுகளிலேனும்...

இரவு...

பாடிப் பறந்த பறவைகள் தேடி அடைந்தன கூடுகளை... ஓடிக் களைத்த உடல் நாடி நிற்கிறது உறக்கத்தை கோடிக் கனவுகள் சுமந்து ஆடி அசைந்து நகரும் இரவில்...

ஞாயிறு..

திறந்த பலகணிக்கு வெளியே ஒற்றை ரோஜாவின் பின்னால் வட்டமாக எழுகிறது ஞாயிறு... என்னைப் போலவே சோம்பலாக...

இருள் விடியல்

இருளுக்குப் பின் விடியும் என்றே எல்லோரையும் போல் நானும் நம்பினேன்... இப்போது சொல்கிறார்கள் இருளேதான் விடியலென்று...

இரவு...

இரவின் விதிமுறைகள் எப்போதும் விநோதமானவை... இமைக்கதவுகள் அடைத்த பின்னரே கனவுகளின் வாசல் திறக்கிறது..

பல்வலி...

இரவில் நிலவில் எழுந்த குளிரில் மாத்திரை மயக்கத்தில் மங்கிய வெளிச்சத்தில் உறங்கென்று சொல்லி இமைகள் இழுத்தாலும் கொட்டக் கொட்ட விழித்திருக்கிறது பல்வலி...

இரவு..

கனவுகளின் கூடாரத்தில் ஒழுங்கற்று உருளும் காட்சிகளின் இடையே வழிந்து நகர்கிறது இரவு...

மனசாட்சி...

மாட்டு மந்தைகளுக்கு மனசாட்சி அவசியமில்லை... புண்ணாக்கும் புல்லுக்கட்டும் பருத்திக்கொட்டையும் பானையில் கழுநீரும் பாங்காய் வைத்துவிட்டு பாலோடு ரத்தமும் கறப்பவர் கைகளில் கறை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன... எனவே மாட்டு மந்தைகளுக்கு மனசாட்சி அவசியமில்லை...

இரவு...

உறக்கம் தொலைத்த இரவுகளில் கடக்கும் நொடிகள் சுமக்கும் மவுனம் கனமானது...

இரவு...

இருளோடு பனி சேர்ந்து எட்டுத் திசைகளையும் கட்டிப் போட்டதை எட்டி நின்று பார்க்கும் விண்மீன் திரளின் சன்னமான ஒளியில் சத்தமின்றி நகர்கிறது இரவு...

இரவு...

அடர் மூங்கில் நெடுவனத்தில் அசைந்து செல்லும் யானை போல மெல்ல நகர்கிறது இரவு...

இரவு...

இருளில் கரைந்த நிலவைத் தேடி நிற்காமல் நகர்கிறது இரவு....

இரவு...

கனத்த மேகங்கள் கடந்து செல்லும் கருத்த வானின் இருட்டுக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறது இரவு...

எப்போது கேட்பது...

மணல் தின்று ஆறுகள் கொன்றார்கள்... அப்போதும் கேட்கவில்லை ஏரி குளங்கள் உருமாற்றி ஏதேதோ செய்தார்கள்... அப்போதும் கேட்கவில்லை வாய்க்கால் வழிகளைச் சாக்கடை ஆக்கினார்கள்... அப்போதும் கேட்கவில்லை விளைநிலங்களை விளையாத் தரிசாக்குவார்கள்... அப்போதும் கேட்காதீர்கள் எதுவும் குறைந்து போகாது ஒன்றைத் தவிர... அது அடுத்த தலைமுறை...

இரவு...

கழை தின்னும் யானையின் காதுகளைப் போல கனவுகளை விசிறியபடி கண்களைக் கடக்கிறது இரவு...

இரவு...

கடற்கரை மணலில் கால்கள் புதைய தகப்பனின் விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல இருள் பிடித்து நடக்கிறது இரவு...

இரவு...

சுண்ணக்கட்டியால் சுவரில் வரையும் சுட்டிக் குழந்தையின் ஓவியம் போல இமைகளுக்குள் கனவுகள் வரைந்து கடந்து செல்கிறது இரவு...

இரவு...

ஈசல்கள் உதிர்த்த இறகுகள் காற்றின் போக்கில் கலந்து பறப்பதுபோல் நினைவுகள் உதிர்த்த கனவுகள் இரவோடு கலந்து இமைகளுக்குள் பறக்க வேடிக்கை பார்க்கிறது இருள்...

இரவு...

பகல் சட்டை உரித்த பின் இரை எடுத்த கருஞ்சாரை போல புரண்டு நகர்கிறது இரவு...

இரவு...

ஞாயிறிலிருந்து திங்களை நோக்கி நாளைச் சுமந்து நடக்கிறது இரவு... திங்களின் வெளிச்சத்தில்...

அப்பா...

அப்பா... திரும்பாப் பயணம் நீங்கள் சென்று நீண்ட ஆண்டு ஒன்று நீங்கி விட்டது... ஆண்டொன்று கடந்த பின்னும் அருகில் நீங்கள் இல்லையென்பதை ஏற்க அஞ்சி நிற்கிறது நெஞ்சு... புழுதிப் பெருங்காற்று புயலென வீசியபோது எனது இமைகள் விழிகளை மூடும்முன் உங்களின் இரு கைகள் என் கண்களை மூடிய கணங்கள் கனவிலும் துரத்துகின்றன... சேற்றை நான் தாண்டுகையில் என் செருப்புகூட அழுக்காக கூடாதென்று தங்களின் கரங்கள் என்னைத் தூக்கி விட்ட கணங்கள் என்னைத் தூங்கவே விடுவதில்லை... கடும் காய்ச்சலில் உடல் சோர்ந்து உள்ளம் நொந்து உதடுகள் காய்ந்து விழிமூடிக் நான் கிடக்கையில் உங்கள் கண்ணீரால் என் கன்னங்கள் ஈரமான கணங்கள் இப்போது என் கண்களை ஈரமாக்குகின்றன... என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்னோடு நீங்கள் இல்லையென்பதை...                               ராஜ்குமார்

ஒரு நாள்...

மெல்லிய பனியில் மிதந்த தென்றலில் தொடங்கிய காலை சுள்ளென்று அடித்த வெயிலில் சூடான பகலாகி சிறுதூறல் சிதறிய மஞ்சள் மாலை கடந்து முகில் பந்தலில் நிலவொளி தோரணத்தில் ஊஞ்சலாடும் இரவோடு நிறைகிறது இன்றைய பொழுது...

வலி...

ஓடியபோது வலிக்காத கால்கள் ஓய்வின்போது வலிக்கின்றன...

காதல்...

காதல் நிரம்பி வழிந்த தருணங்கள் கடந்தபின் எடுத்துப் பார்க்கிறேன் கோப்பையை...

இரவு...

ஓடும் தொடர்வண்டியின் ஜன்னலுக்கு வெளியே அசையும் மரங்களுக்கு அப்பால் அலுக்காமல் தொடரும் நிலவால் அழகாகிறது இரவு...

நிலவு...

சிறு குட்டையில் தேங்கிய நீரில் தவளையொன்று தாவிக் குதித்தபோது அலைகளில் மிதந்தது நிலவு...

இரவு...

இரண்டு இறக்கைகளிலும் இருள் பூசிக்கொண்டு விண்மீன்கள் ஒளிப்புள்ளிகள் தெளித்து காலவெளியில் பறக்கிறது வண்ணத்துப்பூச்சி இரவு...

இரவு...

அயர்ந்த விழிகளுக்குள் அடர்ந்த கனவுகள் ஆர்வமாய் காத்திருக்கின்றன... அணைக்க வரும் இமைகளுக்காக...

நிலவு...

இருள் மழை பொழிகையில் வெள்ளிக்குடை விரித்து விண்ணைக் கடக்கிறது நிலவு...

நிலவு...

பரந்த வானின் இருள் நீக்க வந்தது பாதி நிலவு... அதனாலென்ன... கொஞ்சமாய் சிரித்தாலும் குழந்தையின் சிரிப்பு அழகுதான்...

இரவு...

ஒளிநீரில் வளர்ந்த ஒருநாள் செடியில் கருப்பு மொட்டு இதழ்கள் விரிக்க மலர்கிறது இரவு...

இரவு...

அமைதி இழந்து நிம்மதி தேடும் நெஞ்சம் போல் இருளுக்குள் அமிழ்ந்து நிலவு தேடும் இரவு...

உறவுகள்...

உறவுகளுக்கிடையே குறையும் புரிதலில் அதிகமாகும் உள்ளத்தின் பாரம்...

இரவு...

உடைந்த இதயத்தில் உறையும் மௌனத்தில் இருள் தாண்ட எத்தனிக்கிறது இரவு...

குருவியும்தான்...

ஆற்றங்கரை ஓரத்தில் அடர்ந்துநிற்கும் தூங்குமூஞ்சி மரத்தின் நெடுங்கிளையில் பிரிந்த சிறுகிளையின் நுனியில் கூடுகட்டிய தூக்கணாங்குருவி நான்... பாம்பு ஊர வழியின்றி பருந்து அமர இடமின்றி பார்த்துப் பார்த்துக் கட்டிய கூடு... கல்லால் அடித்தாலும் எட்டாத உயரமென்று இருமார்ந்து இருந்தபோது சொல்லால் அடித்ததில் சுக்குநூறானது... நொறுங்கிப் போனது கூடு மட்டுமல்ல குருவியும்தான்...

இரவு...

தீப்பிடித்த தென்றல் தேகம் தீண்ட அனலடிக்கும் இரவின் நீட்சியில் சுவாசமின்றித் தவிக்கிறது என் பகலின் மீட்சி...

மகிழ்வதில்லை...

வண்ணமயமான கனவுகளின் நடுவே வாழ்ந்து கொண்டிருந்தபோது வெந்நீர் சொற்களை வெடுக்கென்று வீசிய உதடுகளும் என் கனவுகளில் அமிழ்தம் தடவி இனிமை சேர்த்த உதடுகளும் வேறு வேறு அல்ல... என் பாதங்களுக்கு கீழே பள்ளம் பறித்தவர்களுக்கும் என் பாதைகளெங்கும் முட்கள் பரப்பியவர்களுக்கும் என்னைத் தோற்கடித்தவர்களுக்கும் என்னிடம் தோற்றவர்களுக்கும்கூட நன்றாகவே தெரியும் கெட்ட எண்ணங்களால் நான் கட்டமைக்கப் படவில்லையென்று... இதனை ஏனோ அந்த உதடுகள் உணரவில்லை... இனி நான் எப்போதும் எழுதப்போவதில்லை... ஈரமில்லா நிலத்தில் எந்த விதையும் முளைப்பதில்லை... ஈரமில்லா இதயத்தில் எழுத்துக்கள் விளைவதில்லை... என் இதயத்தில் இப்போது ஈரமில்லை ஏனெனில் இரத்தம் இல்லா இதயம் ஈரமாக இருப்பதில்லை... உடையவரே உடைப்பதால் உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஒருபோதும் மகிழ்வதில்லை...

காட்சிகள்

கண்கள் திறந்தால் காட்சிகள் தெரியும்... கண்கள் மூடினால் காட்சிகள் விரியும்...

இரவு...

ஈரமில்லாக் காற்றில் வியர்வை தெளிக்கிறது எரியும் இரவு...

இரவு...

ஈரமில்லா இரவு இருள் பூசிக்கொள்ள வியர்வை பூசி உறங்க விழையும் உடல்...

இரவு...

கழுத்தின் வியர்வை பிடரி தொட்டபோது கண்விழித்துப் பார்த்தேன்... நகரவேயில்லை இரவு...

இரவு...

உடலில் வழியும் வியர்வை நிலம் தொடும்முன் நீராவியாகிப் போக அனலில் நடக்கிறது இரவு...

இரவு...

வீசாத காற்று... பேசாத மரங்கள்... வியர்வையால் நிரம்புகிறது இரவு...

இரவு...

தகித்த பகலின் வெப்ப வெள்ளம் இரவு வடிநிலத்தில் வடிகிறது வியர்வையாக...

இரவு...

வெள்ளிகள் பூத்த வீதியில் வெண்ணிலவு விரல் பிடித்து விடியல் நோக்கி நடக்கையில் வியர்வையால் நீள்கிறது இரவு....

இரவு...

விழிகள் நிரப்பவரும் உறக்கத்தின் வழியை மறிக்கும் வியர்வையால் சேறாகிறது இரவு...

இரவு...

வெள்ளைக் கனவுகள் வியர்வைப் பிசுக்கில் விழிகளுக்குள் ஒட்டிக்கொள்ள இமைகள் திறந்து இழுத்துச் செல்கிறது இரவு....

இரவு...

வெப்பத்தால் விரிவடைந்த பகல் விலகிச் சென்றபின் சுருக்கமான இரவினை எதிர்பார்த்துக் காத்திருந்தால் விலையில்லா வெப்பம் வாங்கி முடிவில்லாமல் நீள்கிறது உப்புக்கரிக்கும் இரவு...

ஞாயிறு

சோம்பலான ஞாயிறில் சுட்டெரித்த ஞாயிறுக்குப்பின் திங்கள் வருமென்று திசை பார்த்திருக்க திங்களே ஞாயிறானது...

இரவு...

அனல் அள்ளி வீசிய ஆதவன் மறைந்தாலும் நெருப்பனைந்த பின்னரும் சுடுகின்ற அடுப்பு போல கிடக்கிறது இரவு...

இரவு...

உதித்தபோது தொடங்கிய அனல் உச்சி கடந்து உச்சம் அடைந்து சாயுங்காலம் சூரியன் சாய்ந்த பின்னும் சாயாமல் வியர்வையில் வேகிறது இரவு...

இரவு...

நீரில் நனைய அடம் பிடிக்கும் சிறுபிள்ளை போல வியர்வையில் நனைய அடம்பிடிக்கிறது இரவு...

சூரியன்...

கீழ்வானில் சூரியன் அழகு... நடுவானில் சூரியன் நரகம்... மேல்வானில் சூரியன் நிம்மதி...

இரவு...

முன்னிரவு வியர்வை ஊற பின்னிரவு வியர்வையில் ஊற வடிகால்கள் இன்றி விடிகாலை வரை காத்திருக்கிறேன் கண்களை இமைகள் மூடுவதற்காக....

பகல்...

இரவுகள் இல்லா நாட்கள் கேட்டவனின் பொழுதுகள் எல்லாம் எரியும் பகல்களால் நிரம்புகின்றன....

நிலவு...

வியர்வைத் துளிகளின் மேல் விரித்த சிறு தென்றலில் மொத்த இரவையும் தூக்கிச் சுமக்கிறது ஒற்றை நிலவு...

இரவு...

நீண்டுகொண்டே செல்லும் நெருப்பு இரவினை எரியும் இமைகளால் இறுக மூடிட கருப்பானது...

இரவு...

மேக இலை விரித்து தூரல்கள் பரிமாறுகிறது மின்னல்... விருந்தில் நனைகிறது இரவு...

இரவு...

அலைகளில் அல்லாடும் துடுப்பிழந்த தோணியாய் கவலைகளில் தள்ளாடும் மனதைக் கடக்கிறது இரவு...

இரவு...

புரண்டு படுக்கையில் நீளும் கைகள் உணரும் வெறுமையில் மரணிக்கிறது இரவு...

விழிகள்

ஒளி இல்லா இரவுகள் ஒருபோதும் அச்சமூட்டுவதில்லை விழிகளை இழந்தபின்....

பாதங்கள்

இலைகள் மேல் மட்டுமே நடக்கின்ற பாதங்கள் எவருக்கும் இங்கில்லை... முட்கள் மேல் மட்டுமே நடக்கின்ற பாதங்கள் முழுவதும் உனக்கில்லை... நட...

இரவு...

வட்ட இரவின் விளிம்புகள் விலக விலக நிறைகிறது இருள்...

இரவு...

கனவுகளின் வெளியில் கரைந்திடும் இருளில் நிறைந்திடும் வண்ணங்களில் நீளட்டும் இரவு...

இரவு...

விழிகள் இரண்டையும் விட்டு விட்டு இமைகளை மட்டும் எடுத்துச் செல்கிறேன்... இதயத்தை இங்கே வைத்துவிட்டு இரத்தம் மட்டும் கொண்டு செல்கிறேன்...

இரவு...

தவிப்புகளால் நிறைந்த இரவில் உறக்கம் உலவுகிறது இமைகளுக்கு வெளியே...

இரவு...

விழிகளை விட்டு வெளியேறிச் சென்று இருளில் தொலைந்த உறக்கத்தைத் தேடி தவிப்புடன் அலைகிறது இரவு...

இரவு...

இமைகளின் மேல் அழுத்தும் கவலைகளின் சுமையில் நசுங்கிப் போவது தூக்கம்தான்...

இரவு...

இதயத்தின் சுமைகளை இரவின் மேல் வைத்துவிட்டு இமைகள் மூட விழைகையில் இழுத்துப் பிடிக்கிறது புது வரவு...

இரவு...

அகன்ற வானின் அத்தனை பகுதியிலும் ஏதோ ஒரு மேகம் இருள் பூசிச் செல்ல கருமையில் கவலைகள் மறைக்கிறது இரவு...

இரவு...

இதயத்தின் பாரத்தை இருள் தின்று செரிக்குமென்று காத்திருக்க உறக்கம் தின்று ஒன்றுமே பேசாமல் நடக்கிறது இரவு...

இரவு...

சோகங்கள் ததும்பும் உள்ளத்தின் சுமைகள் தூக்கிச் சென்று இமைகள் மூட வரும் தூக்கத்தை வழிமறிக்கும் இருளில் தடுமாறுகிறது இரவு...

இரவு...

எரியும் பகல் கடந்து இருளின் வாயில் எட்டி உறக்கம் தொடப் பார்க்கையில் வியர்வையால் உடல் போர்த்திச் செல்கிறது இரவு...

இரவு...

நீளும் கைகளால் நிலவு தொட முயல்கையில் புறங்கை தட்டிவிட்டு இருளுக்குள் ஒளிகிறது இரவு...

இரவு...

பூக்களுக்கும் வலிக்காமல் புற்களுக்கும் வலிக்காமல் இதமான பூஞ்சாரல் இளங்காற்றில் அசைந்தாடி நிலம் வருட இருளில் சிலிர்க்கிறது இரவுபூக்களுக்கும் வலிக்காமல் புற்களுக்கும் வலிக்காமல் இதமான பூஞ்சாரல் இளங்காற்றில் அசைந்தாடி நிலம் வருட இருளில் சிலிர்க்கிறது இரவு.....

இரவு...

சிகரங்கள் அணைக்கும் மேகங்கள் சிறிது கீழிறங்க சில்லென்று விழும் தூரல்களின் சிதறலில் விழிக்கிறது இரவு...

இரவு...

மூடிய இமைகளுக்குள் முற்றி வளர்ந்த கனவுப் பயிர் கடித்துவிட்டுப் போகிறது வெள்ளாடு இரவு...

பனங்காய்க் குருவிகள்...

உச்சந்தலையில் உட்கார்ந்த சுமைகள் நிச்சயமாய் நிறுத்திவிடும் மூச்சையென்று அறிந்த பின்னும் பறக்கவே முயல்கின்றன பனங்காய் சுமக்கும் குருவிகள்...

இரவு...

மேகங்களின் உரசலை மின்னல் வெளிச்சத்தில் கண்டபின் கண்கள் மூடும் இரவு....

இரவு...

விண்மீன்களின் அந்தப்புரத்தை வெண்ணிலவு வெளிச்சத்தில் காண மேகத்திரை விலக்கும் காற்றினைக் கடிந்தபடி கடக்கிறது இரவு...

இரவு...

தூரத்தில் எங்கோ தூரல்கள் நிலம் நனைக்க கண் விழித்த மண் வாசம் காற்றின் மீதேற முகர்ந்தபடி நகரும் இரவு...

இரவு...

யதார்த்தக் கல்லடியில் சிதறிக் கிடக்கும் கண்ணாடிக் கனவுகளில் கால்கள் படாமல் கவனமாகக் கடக்கிறது இரவு...

இரவு...

விடியும் வரையில் தொடரும் இருளில் சுழலும் நினைவுகளில் சுற்றித் தடுமாறும் இரவு...

சிவன்...சிறுவன்...தமிழ்...

கவிதைகள் அழகெனில் அத்துணை சிறப்பும் அன்னைத் தமிழிற்கு... கற்பனை அழகெனில் சிறப்பெல்லாம் சிந்திக்க வைத்த சிவனுக்கே... குப்பை கூளமெனில் சிறுமையெல்லாம் அழகுத் தமிழையும் சிவன் சிந்தனையையும் சீர்கெட வைத்த இச்சிறுவனுக்கே...

இரவு...

இதயத்தில் ஒரு கால் இமைகளின் மேல் ஒரு கால் நசுக்கியபடியே நகர்கிறது நரக இரவு....

இரவு...

இதயத்தில் ஒரு கால் இமைகளின் மேல் ஒரு கால் நசுக்கியபடியே நகர்கிறது நரக இரவு....

இரவு...

நகராத வானில் நகரும் மேகங்களோடு நகரும் இரவில் நகராத நினைவுகள்...

இரவு...

தூக்கம் மூடும் கண்களை துக்கம் நிறைந்த மனம் வெடுக்கென்று திறக்க வெளியில் விழுந்த உறக்கத்தை எடுத்துச் செல்கிறது இரவு....

இரவு...

நகராத வானில் நகரும் மேகங்களோடு நகரும் இரவில் நகராத நினைவுகள்...

இரவு...

தூக்கம் மூடும் கண்களை துக்கம் நிறைந்த மனம் வெடுக்கென்று திறக்க வெளியில் விழுந்த உறக்கத்தை எடுத்துச் செல்கிறது இரவு...

இரவு...

உடலும் உள்ளமும் ஒருசேர சோர்ந்துபோக உறக்கத்தை மருந்தாக்கும் இரவு...

இரவு...

உள்வாங்கிய வெப்பத்தை உமிழும் நிலத்தின் மேல் சிறு தென்றல் போர்த்தி செல்கிறது இரவு...

இரவு...

வெறுப்பு உமிழும் எதிரி போல நெருப்பு உமிழ்ந்த பகலின் இறுதியில் கருப்பு மேகங்கள் கை கோர்க்க கருணையில் நனைகிறது இரவு...

ஆண்டவனே ...

ஆண்டவனே... அவலக்குரல் கேட்டு பதினோராம் பரிமாணத்திலிந்து மூன்றாம் பரிமாணத்திற்கு காலெடுத்து வைத்தார் கடவுள்... காலுக்கு கீழே வெடித்துச் சிதறின ஹைட்ரஜன் குண்டுகள்... வெடுக்கென காலை எடுத்தபின் என்னவென்று பார்க்க முகம் நுழைந்தார் மூன்றாம் பரிமாணத்தில்... மூக்கில் ஏறிய மீத்தேன் நெடியில் தலை கிறுகிறுக்க சட்டென்று வெளியேறி இரு காதுகளிலும் இறுகப் பஞ்சடைத்து பதினோராம் பரிமாணத்தில் படுத்துக்கொண்டார்...