Posts

Showing posts from December, 2018

இரவு...

விரியும் இருளின் விரல்களில் வழியும் கருமையில் கரையும் நொடிகளுக்குள் மெல்ல மூழ்குகிறது இரவு...

இரவு...

தென்றல் தீண்டிய சிறுபூவென சிரிக்கும் கனவுகள் இமைகளுக்குள் மலர கவலைகள் உறங்க இருள் விரிக்கிறது இரவு..

களமாடி நிற்கிறோம்

களமாடி நிற்கிறோம் கணைகள் ஆயிரம் வரினும் உளங்கலங்கோம் ஒருபோதும்... அர்ஜூனன் வில்லேறிய அம்புகள் நாங்கள்... இலக்கு தவிர எங்கேயும் பாயோம்... எரியும் நெருப்பில் நடக்கும்போதும் கருகுவதில்லை எங்கள் கால்கள்...

உரமா..மரமா...

மண் விழுந்து மூடும்போது முட்டி மோத மறுக்கும் விதைகள் மண்ணோடு மட்கி உரமாகும்... நிலம் மோதி தரை பிளந்து தலை நிமிரும் விதைகளோ மரமாகும்...

கனவு...

உலராத மனதில் நடந்து செல்லும் கனவுகளின் காலடித்தடத்தில் நிரம்புகிறது கனவு...

பிரிவு...

அணைச்சுவர் உடைத்த வெள்ளமெனப் பெருகி இமைச்சுவர் இடித்து வீழும் துளிகளில் உவர்க்கிறது பிரிவின் வெம்மை...

கூடு...

புதிய இறக்கைகள் வளர்ந்த பறவை உதிர்த்துச் சென்ற பழைய இறகுகளின் கதகதப்பில் உறங்குகிறது பறவை பிரிந்த கூடு...

இரவு...

கடலில் விழுந்த ஊசியென தொலைந்த கனவுகளின் மேல் அலையாடும் நினைவுகளின் ஊடாக உறங்காத விழிகளின் வழியே என்ன தேடுகிறதோ இரவு...

இரவு

கடும்புயல் கடந்த பின் கரையெங்கும் விழுந்து கிடக்கும் மரங்களென முறிந்த கனவுகள் நிறைந்த இதயத்தில் இருள்மழை பொழிகிறது இரவு...

இரவு..

விடியல் பூக்களின் வெளிச்ச அரும்புகளை இருள் கர்ப்பத்தில் சுமக்கிறது இரவு...