Posts

Showing posts from January, 2018

இரவு...

நடந்த நினைவுகள் இறக்கைகள் விரிக்க வானில் வழி சமைக்கிறது இரவு...

இரவு...

நினைவுகள் மொட்டவிழ கனவுகள் மலர உறக்கத்தில் மணக்கிறது இரவு...

இரவு...

நெடுந்தூரம் நடந்தபின் நீர்தேடும் யானைபோல வெளிச்சம் தேடி விழிகளை விரிக்கிறது இரவு...

இரவு...

நினைவுத் திமில்களை உறக்கம் பிடிக்க திமிறி ஓடும் கனவுகளின் தடதடப்பில் அதிர்ந்து அடங்குகிறது இரவு...

இரவு...

நினைவுகளைத் துரத்தும் கனவுகளின் கால் தடங்களை இருளால் அழிக்கிறது இரவு...

இரவு

துரோகத்தின் கரங்கள் தோண்டிய குழியை கைநிறைய அன்பள்ளி நிரப்ப விழைகையில் எள்ளியபடி என்னைக் கடக்கிறது இரவு...

இரவு...

நினைவுகளுக்கும் கனவுகளுக்குமான இடைவெளியை உறக்கத்தால் நிரப்பி இருளால் மூடுகிறது இரவு...

இரவு...

உறங்கும் மரங்களை வருடும் பனியில் நடுங்கும் பொழுதை இருளோடு இணைந்து கடக்கிறது இரவு...

இரவு...

கூடு தொலைத்த பறவையென இருள்வெளியில் திரியும் நினைவுகளுக்கு குளிரால் கூடுகட்டுகிறது இரவு...

மனம் வெட்டுபவர்கள்

மரம் வெட்டுபவர்கள் உணர்வதேயில்லை மரத்தின் வலியை... மனம் வெட்டுபவர்களும் கூட...

இரவு...

சோகங்கள் சுமக்கும் மனதின் பாரங்கள் இறக்கி வைத்து உறக்கம் போர்த்திவிட்டு குளிரில் நடக்கிறது இரவு...

இரவு...

விழிகளுக்குள் நினைவுகளாகவும் விழிகளுக்கு வெளியே கனவுகளாகவும் பிறழ்ந்த நிகழ்வுகளின்மேல் நின்று பார்க்கிறது இரவு...

இரவு...

கொதிக்கும் நினைவுகளின் தகிக்கும் வெப்பத்தில் ஆவியாகிறது குளிரில் பொதிந்த இரவு...

இரவு...

ஒளியின் மறைவிலிருந்து நீண்டு விரியும் இருளின் கரங்களில் கனவுகளைக் காவல் வைத்து உறங்குகிறது இரவு...

இரவு...

பகலவன் நடந்த பாதையின் தடங்களை இருள்கொண்டு துடைத்து குளிர் எழுதுகிறது இரவு...

இரவு...

ஆகாயக் கூரையில் அசைந்தாடும் இருள் தூளியில் ஒளி உறங்க விழிக்கிறது இரவு...

இரவு...

விடியல் வரை நீளும் பொழுதிற்கு குளிர் போர்த்தி நடுங்குகிறது இரவு...

இரவு

நெருப்பெரியும் நினைவுகள் சுமக்கும் நெஞ்செரியுமென்று நிலவிடம் குளிர் வாங்கி நிறைக்கிறது இரவு...

பட்டாம்பூச்சியின் இறக்கைகள்

விரல்களில் ஒட்டிய வண்ணங்களில் படபடக்கிறது பட்டாம்பூச்சியின் இறக்கைகள்... பூச்சி பறந்தபின்னும் கூட... #பிரியமுடன் பெரியப்பாவுக்காக...