Posts

Showing posts from November, 2019

நீ இல்லை...

விரல்கள் தொடும் தூரத்தில் நீ இல்லை... விழிகள் படும் தூரத்திலும் நீ இல்லை... ஆனாலும் 'அருகில்' என்பதன் பொருளை ஏன் அகராதியில் மாற்றுகிறாய்...

உள்ளிருந்து...

துயரங்களும் துரோகங்களும் முட்களென நெஞ்சம் கிழித்தாலும் மலரவே விடுகிறேன் புன்னகையை... முள்ளிலிருந்து அல்ல உள்ளிருந்து...

பாசாங்கு...

நான் பார்ப்பதை நீ பார்க்கிறாய்... நீ பார்ப்பதை நான் பார்க்கிறேன்... ஆயினும் விழிகளுக்கு இடையே திரையிடுகிறது பாசாங்கு...

இரவு வானம்...

Image
நிலவு நீங்கிய பின்னும் இருக்கவே செய்கிறது இரவு வானம்... பட்டமரம் நிற்பதைப்போல...

அழுக்கில்லை...

கால்களுக்கு கீழே குழிபறிக்கும் கரங்களே... என் பாதங்களில் அழுக்கில்லை... சேறு செறிந்திருக்கிறது உங்கள் கைகளிலும் மனதிலும்...

மனமும்கூட...

நீர் வழியும் பெரும்பாறை மட்டுமல்ல நீ வழியும் மனமும்கூட அருவியாகிறது...

மெதுவாகவே...

பொய்களைச் சுமந்தபடி ஒடுபவர்கள் ஓடட்டும் வேகமாக... நான் உண்மைகளைச் சுமந்தவாறே நடக்கிறேன் மெதுவாகவே...

கனவுகள்...

அடைகாக்கும் பறவையென அணைக்கிறேன் உறக்கத்தை... உன் நினைவுகளின் கதகதப்பில் பொரியக் காத்திருக்கின்றன கனவுகள்...

சலிப்பதேயில்லை...

தேன் வழியும் இதழ்கள்... திறக்கும்போது விரியும் குறுநகை... தலையாட்ட தாலாட்டும் அழகு... பார்க்க சலிப்பதேயில்லை மலரும் தேன் வழியும் இதழ்கள்... திறக்கும்போது விரியும் குறுநகை... தலையாட்ட தாலாட்டும் அழகு... பார்க்க சலிப்பதேயில்லை மலரும் மழலையும்......

மறந்தேன்...

மீளவே வழி இல்லா மாயச்சுழல் உன் சிரிப்பு... விழுந்தபின் நீச்சல் மறந்தேன் நான்...

வெறுமை...

போக்கும் வரத்தும் புகை கக்க மூச்சுத்திணறும் நெடுஞ்சாலை விசிறிவிட மரம் தேட விரிகிறது வெறுமை...

நினைவுகள்...

உதடுகள் தாண்டி உதிர்ந்துவிட்ட கனமான வார்த்தைகள் காதுகளுக்குள் உருள்வதுபோல நெஞ்சுக்குழியில் உருள்கின்றன நினைவுகள்...

குழந்தை...

உடைந்த பொம்மையிடமும் கதைபேசி சிரித்து விளையாட அழைக்கிறது குழந்தை...

துவட்டவே இல்லை...

குடையை விரிக்கும்முன் தலை நனைக்கும் பெருமழையின் முதல் தூறல்கள்போல எனை நனைக்கிறாய்... நான் துவட்டவே இல்லை...

மீன்கள்...

நிலவினை நிழல் கவ்வும்போது இழுபடும் பெருங்கடலில் எழுகின்ற அலைகளுக்கு கீழே அமைதியாகவே நீந்துகின்றன மீன்கள்...

காற்று...

இரத்தலுமில்லை ஈதலுமில்லை... மணம் சுமந்து செல்கிறது மலர் தழுவிய காற்று...

ஒவ்வொருமுறை...

ஒருமுறை தும்மும்பொழுது நீ நினைத்திருப்பாயோவென நான் நினைத்தேன்... இப்போதெல்லாம் ஒவ்வொருமுறை தும்மும்பொழுதும் உன்னை மட்டுமே நினைக்கிறேன்...

நிலவு...

காய்ந்த கதிர் சாய்ந்த பின்னர் பாய்ந்த இருளில் தோய்ந்த வானில் உடுக்களிடையே நழுவுகிறது நிலவு...

கிள்ளி எறிகிறாய்...

மழைக்கால காளானென என்னை நீ கிள்ளி எறிகிறாய்... என் வேர்களுக்கும் விழுதுகளுக்கும் நடுவில் நின்றுகொண்டு...

அலைகள்...

பெருங்கடல் ஒவ்வொரு முறையும் உள்ளிழுத்தாலும் கரை தேடியே ஓடுகின்றன அலைகள்...

ஏன்...

நீ சூடிக் களைந்த பூக்கள் ஓரத்தில் கிடக்க உன் கூந்தலை ஏன் சுற்றுகின்றன வண்டுகள்...

வாழ்க்கை...

அழுகின்ற குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டுகின்ற அன்னையைப்போல சில நிகழ்வுகளை கிலுக்கி நகர்கிறது வாழ்க்கை....

என்ன செய்வாய்...

ஏனென்று தெரியவில்லை என்னிலிருந்து நீ எட்டியே நிற்கிறாய்... பரவாயில்லை என் அருகிலேயே அமர்ந்திருக்கும் உன் நினைவுகளை என்ன செய்வாய்...

உணர்வதில்லை...

உறுத்தும் வலியை உணர்வதில்லை... ஒழுகும் குருதியை உணர்வதில்லை... அவர்கள் எருதின் புண் கொத்தும் காக்கைகள்...

காத்திருக்கிறேன்...

கூரிய கற்களும் குத்தும் முட்களும் செல்லும் வழியெங்கும் சிதறிக் கிடக்க உன் புன்னகைப் பூக்களால் கம்பளம் விரிக்கக் காத்திருக்கிறேன்...

அப்படியே இருக்கிறது...

இரவுகளும் பகல்களும் எண்ணற்றமுறை கடந்து சென்றபின்னும் அப்படியே இருக்கிறது வானம்...

ஒரு பாதியாய்...

பகல் ஒருபாதியாய் இரவு ஒருபாதியாய் பிரிந்த நாளின் பொழுதுகள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன உன் நினைவுகளுக்குள்...

வானவில்...

சூரியன் தூங்கினாலும் தூறல்கள் தூங்கினாலும் எழுவதேயில்லை வானவில்...

இல்லாத இரவு...

வெள்ளைப் பூக்கள் விரிந்த சோலையில் மெல்ல நடக்கும் தென்றலென நீ நடக்கிறாய் நினைவுகளில்... இரவென்பதே இல்லாமல் போனது இதயத்தில்...

இரவு...

பழிசொல்ல யாருமில்லை... வழிசொல்ல தேவையுமில்லை... ஒளியின் மேல் கவிழ்கிறது இருள்...

நினைவுகள்...

நீ காரணங்களேதும் சொல்லாமல் இதயங்களிடையே தொலைவைக் கூட்டுகிறாய்... நெருக்கமாகின்றன நினைவுகள்...

ஏதோ ஒன்று...

தேரோடிய வீதியில் சிதறிக்கிடக்கும் மலர்களுக்குக் கீழே கலைந்த கோலங்களின் கலவையான வண்ணங்களில் ஏதோ ஒன்று இறைவனின் வண்ணம்...

எங்கெங்கோ...

வெடித்துப் பறந்து வீசும் காற்றில் மிதந்து திரிந்து எங்கெங்கோ சென்று உயரத்திலிருந்து தரைக்கு வருகிறது எருக்கின் விதை...

மற்றும் நீ...

மனதின் காயங்களுக்கு வலிக்காமல் மருந்திட்டுச் செல்கின்றன சில புன்னகைகள்... மலர்... மழலை... மற்றும் நீ...

எங்கோ தொலைவில்...

வன்சொல்லால் என் இதயம் புண்ணாக இன்சொல்லால் மருந்திடத் திறக்கும் இதழ்கள் எங்கோ தொலைவில்...

காத்திருக்கிறேன்...

இதயம் துளைத்த வார்த்தை அம்புகளை பிடுங்கி எறிந்தபிறகும் நிற்காமல் வழிகிறது குருதி... கடைசிச்சொட்டும் வழியக் காத்திருக்கிறேன்...

நீ...

மழைமேகங்களை சுமந்து செல்லும் காற்றாக குளிர் தடவி செல்கிறாய் நினைவுகளில்...

நத்தையாகிறேன்...

கத்திமேல் நடக்கச் சொல்கிறது வாழ்க்கை... நத்தையாகிறேன் நான்...

பருகி பருகி...

பருகத்தீரா மதுக்குவளை மனம்... உன் நினைவுகளைப் பருகி பருகி நினைவிழக்கிறேன் நான்...

மெதுவாகவே...

வலுவான கால்கள்தான்... ஆனாலும் மெதுவாகவே நகர்கிறது வேங்கை... இரையை நெருங்கும்வரை...