Posts

Showing posts from April, 2022

மகிழ்ச்சி வண்ணங்கள்...

 என் கவலைக் கறைகளில் மகிழ்ச்சி வண்ணங்கள் பூசுகிறாய் நீ...

கனிகள்...

 கனிந்தபின் உதிர்ந்துவிடுகின்றன கனிகள்...

தெரிந்திருக்க அவசியமில்லை...

 சடசடவெனப் பெய்யும் மழைக்கு தரையின் தாகம் தெரிந்திருக்க அவசியமில்லை...

ஒவ்வொரு இரவையும்...

 ஒவ்வொரு இரவிலும் உறங்கவே எண்ணுகிறேன்... ஆனால் ஒவ்வொரு இரவையும் உறங்க வைக்கிறது உன் நினைவு...

என் உறக்கம்...

 கோடைக்காலத்தில் உணவு தேடும் எறும்புகளென என் இரவுகளின் எல்லாத் திசைகளிலும் அலையும் உன் நினைவுகளிடம் சிக்கிக் கொள்கிறது என் உறக்கம்...

கள்ளிச்செடிகள்...

 மழை பெய்யவில்லையென அழுவதில்லை கள்ளிச்செடிகள்...

கத்தவேயில்லை...

 கத்தியபின் கத்தவேயில்லை தவளை...

என்னிடம் பத்திரமாக...

 என் பயணம் நெடுகிலும் உன் நினைவுகளில் எதையும் வழிப்பறி செய்யவில்லை காலம்... உன் நினைவுகள் அத்தனையும் என்னிடம் பத்திரமாக...

தொலைவென்னவோ சுழியம்தான்...

 நான் இங்கிருக்கிறேன்... நீ எங்கிருந்தாலும் நமக்கிடையேயான தொலைவை நம் நினைவுகளால் அளக்கும்போது தொலைவென்னவோ சுழியம்தான்...

உடைக்காதீர்...

 கண்ணாடிக் குடுவைகள் கால்களைக் கிழிப்பதில்லை... உடையாமல் இருக்கும்வரை... உடைக்காதீர்...

மௌனமானேன் நான்...

 உனக்கும் எனக்கும் இடையேயான உரையாடல்களில் கரைந்து கிடந்த உன்னை மீட்டெடுக்க மௌனமானேன் நான்...

அதிகமிருக்கும் வேகம்...

 தோல்வியடைந்த வேட்டைக்குப் பிறகு பசியோடு திரும்பி பதுங்கியிருக்கும் புலியின் பாய்ச்சலில் அதிகமிருக்கும் வேகம்...

நிச்சயமில்லை என்றாலுங்கூட..

 கற்களை எடுத்து கலயத்தில் சேர்க்கும் காகமென சொற்களை எடுத்து உன்னில் கோர்க்கிறேன்... நீர் மேலேறுவது நிச்சயமில்லை என்றாலுங்கூட...

கிளைகள் முறிந்தாலும்...

 கிளைகள் முறிந்தாலும் வளர்வதை நிறுத்துவதில்லை மரங்கள்...

உன் நினைவுகள்...

 அலையும் காற்று நிலையாய் நிற்கும் கோடைக்கால இரவொன்றில் பெருகும் வியர்வைபோல உன் நினைவுகள்...

உதிர்ந்தும் இருக்கலாம்...

 என்னைக் கடக்கும் காற்றில் மிதந்து செல்கிறது ஏதோ ஒரு பறவையின் இறகு... பிடுக்கப் பட்டுத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை... உதிர்ந்தும் இருக்கலாம்...

இரவு...

 உன் நினைவுகளைத் தொடவே மாட்டேனென உறுதிமொழி சொல்லிச் செல்கிறது இரவு... வாழைத்தோட்டத்தை கடக்கும் யானையொன்றைப்போல...

உடன் வருவதில்லை சோகங்கள்...

 சிரித்துக்கொண்டே கடந்து செல்ல பழகியபின் ஒட்டிக்கொண்டு உடன் வருவதில்லை சோகங்கள்...

கனவுகள்...

 கடலின் மேல் வீசுகின்ற காற்றாக உன் நினைவுகள்... அலையலையாய் கனவுகள்... என் இரவின் கரைகளோ எப்போதும் ஈரமாக...

பாறை சுடும்...

 கொளுத்தும் வெயிலில் நிற்கும் பாறைக்கு சுடுவதில்லை... ஆனாலும் பாறை சுடும்...

உலைக்களமாகிறது வாழ்க்கை...

 உலைக்களமாகிறது வாழ்க்கை... தினமும் நான் காய்கிறேன்... விரும்பிய வடிவில் என்னை வடிக்க சம்மட்டி அடிக்கிறது காலம்... உலைக்களமாகிறது வாழ்க்கை...

பாவம் இந்த நொடிகள்...

 ஏன் நீ இப்படி இழுத்துப் பிடித்துக்கொள்கிறாய் என் இரவுகளை... பாவம் இந்த நொடிகள்... நகர முடியாமல் ஒட்டிக் கிடக்கின்றன உன் நினைவுகளில்...

என்னதான் செய்துவிடும்...

 சொற்களுக்குள் முட்கள் பொதிந்து சொல்லுபவர்கள் சொல்லுங்கள்... காட்டெருதின் கால் குளம்புகளென மனம் கடினப்பட்ட பின் என்னதான் செய்துவிடும் முட்கள்...

இரவு...

 மறுகால் பாயும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கும் மதகைப்போல உன் நினைவுகளைப் பார்க்கிறது இரவு...

சிப்பிகள்...

 முத்துக்கள் இருக்கிறதா இல்லையாவென கவலைப் படுவதில்லை சிப்பிகள்...

விடியும்வரை...

 இருளில் செய்த இரவென்ன ஒளியைத் தின்றா செரித்துவிடும்... விடியும்வரை காத்திருப்போம்...

விடிகிறது இரவு...

 கோடிகோடி ஒளிப்பூக்கள் கொட்டிக்கிடக்கும் வானப் பரப்பில் ஒற்றை விண்மீன் தேடுவதைப்போல உன் நினைவுகளுள் ஒன்றைத் தேடுவதற்குள் விடிகிறது இரவு...

கடினமானாலும்...

 காய்ந்த தரை கடினமானாலும் ஈரம்காண ஆழம்தேடுகின்றன வேர்கள்... இலைகளை களைகின்றன மரங்கள்...

என் இரவு...

 காடொன்று பற்றிக்கொண்டு கனன்று எரியும்போது புகைநிற மேகங்கள் பொழியும் மழையென உன் நினைவுகள்... வெந்து தணிகிறது என் இரவு...

வாழ்க்கை...

 புரிந்துகொள்ள மறுப்பவர்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது புரியத் தொடங்குகிறது வாழ்க்கை...

வானமென்னவோ...

 பொழுதிற்கேற்ப நிறங்கள்தான் மாறிக்கொள்கின்றன... வானமென்னவோ அப்படியேதான் இருக்கிறது...

காற்று தேடுகிறேன்...

 நிலத்திலிருந்து நீருக்கு நெடுங்காலம் முன்பே இடம்பெயர்ந்துவிட்ட பாலூட்டி போலவே நானும்... இப்போதும் உன் நினைவுகளை சுவாசிக்க காற்று தேடுகிறேன்...