Posts

Showing posts from May, 2018

ஐம்பூதங்கள்

ஐம்பூதங்களில் மூன்றில் உங்களுக்கான உரிமைகள் உருவப்பட்டதை உணரவேயில்லை நீங்கள்... நிலம் எனதென்று நீங்கள் சொன்னால் நெஞ்சு கிழிபடும்... நீர் எனெதென்று நீங்கள் சொன்னால் நெற்றி துளைபடும்... காற்று எனெதென்று நீங்கள் சொன்னால் நுரையீரல்கள் சிதைபடும்... எனவே அடிவயிற்றில் நெருப்பெரிய ஆகாயம் பார்த்து அமர்ந்திருங்கள்... உயிர் மட்டுமேனும் உங்களுடையதாகவே இருக்கும்...

இரவு...

இருவிழிகளை நனைக்கும் சிறுதுளிகள் சுமக்கும் வலிகளின் வழியே முனகி நகர்கிறது இரவு...

இரவு...

கண்ணீரின் இளஞ்சூட்டை கன்னம் உணரும்முன் துடைக்கும் விரல்கள் தொலைவில் இருக்கையில் உப்பாகிப் போகிறது இரவு...

இரவு...

துயரங்கள் சுமக்கும் இதயத்திலிருந்து இமைகளுக்குள் நிரம்பும் இருளைக்காட்டிலும் வெளிச்சமாகவே இருக்கிறது இரவு....

இரவு...

விண்மீன்கள் விசிறும் வெளிச்ச சிதறல்களை வெயிலென நினைத்து மேக முக்காடு போட்டு நடக்கிறது இருளில் செதுக்கிய இரவு...

இரவு...

உறக்கமில்லா இரவுகளின் நீட்சியில் குறுகிப்போகும் கனவுகளின் வழியே நழுவுகிறது இருள்...

இரவு...

கனவுகளின் வெளியில் கரைந்திடும் உறக்கத்தை இருளில் வடிகட்டி நினைவுகளைத் தேடுகிறது இரவு...

இரவு...

மலைமடியில் தவழும் மேகங்களின் கீழ் வீசும் காற்று பேசும் மொழியில் மெல்லக் குளிர்கிறது இரவு...

இரவு...

நடந்து செல்லும் இருளின் முகத்தில் கடந்து செல்லும் காற்றின் வெம்மை அறைந்து செல்கையில் கருத்துப் போகிறது இரவு...

இரவு...

வெள்ளை நெருப்பெடுத்து வீசி எறிந்து சுட்ட சூரியன் தூங்கிப்போன பின்னும் காற்றில் குளிர்தேடி நிலவில் காய்கிறது இரவு...

இரவு..

உடைந்த இதயத்தின் ஊமைஅழுகை போல உணரப்படாமலே போகிறது வியர்வைப் பிசுக்கில் வழுக்கும் இரவின் அமைதி...

இரவு...

கதிரவனோடு சேர்ந்து காற்றும் உறங்கிப்போக வெப்பத்தில் நனைந்து வியர்வையில் விழுகிறது இரவு....