Posts

Showing posts from August, 2018

இரவு...

திறக்கப்படாத புத்தகத்தின் படிக்கப்படாத பக்கங்களென அவிழாத கனவுகளின் ரகசியம் காக்கிறது இரவு...

காதல்...

நீ உதிர்த்துச் செல்லும் புன்னகைகளை ஒவ்வொன்றாக சேகரிக்கிறேன்... மனப்பெட்டகம் நிறைக்கிறது காதல்...

காதல்...

நீ தொலைவில் இருக்கும்போது தூரங்களை நிரப்புவதால் அதிகமாகிறது காதல்...

இரவு...

வெப்பம் உமிழும் நினைவுகளின் கதகதப்பில் பெருகும் கனவுகளில் அமிழ்கிறது இரவு...

இரவு...

சாயுங்கால ஞாயிறு வீசிச்சென்ற வண்ணங்களின்மேல் கரிபூச வரும் இருளின்மீது நிலவெடுத்து எறிகிறது இரவு...

காதல்...

வேராக நீ நீராக நான் மலர்கிறது காதல்...

இரவு...

நீரோடை தாண்டும் மானென இமைகள் அயர்கையில் நேர ஓடை தாண்டுகிறது இரவு...

காதல்...

இமைக்கும் விழிக்குமிடையே இடைவெளியின்றி பரவிய நீர்ப்படலமென எனக்கும் உனக்குமிடையே படர்கிறது காதல்...

இரவு...

பகலின் அழுத்தம் அகழ்ந்தெடுத்த பொழுதை இருள் பட்டைதீட்ட மிளிர்கிறது இரவு...

மெழுகுவர்த்திகள்...

எரிவதனால் சுடர்மீது வெறுப்புமில்லை... கரைவதனால் குறைவதாக நினைப்புமில்லை... முடியும்வரை எரியும் மெழுகுவர்த்திகள்...

இரவு...

காலப் பெருங்காற்றில் நேர மணற்குன்றில் சரசரவென சரியும் ஒளி மணல்துகள்களின் இடம் நிரப்ப இருளால் ஈடுசெய்யும் வானப் பாலையில் நிறைகிறது இரவு...

இரவு...

சாரல் மெல்ல தூறலாகி சடசடக்கும் மழையாவதுபோல மாலை அந்தியாகி மளமளவெனப் பொழியும் இருளில் ஈரமாகிறது இரவு...

இரவு...

நிலம் நனைக்க விழுந்த துளிகள் நிலம் நிறைக்க ஓடும் வெள்ளத்தில் மிதக்கிறது இரவு...

இரவு...

உறக்கத்தின் மேல் நடக்கும் இரவின் அழுத்தத்தில் வலி உணரும் இமைகளுக்குள் அழுகின்றன கனவுகள்...

இரவு...

இமைக்கதவுகளுக்குள் சிறைப்பட்ட நினைவுகளை இருள்வெளியில் கனவுகளாக சிறகடிக்கவிடுகிறது இரவு...

இரவு...

கடலும் வானும் கருநிறம் பூசிக்கொள்ள நிலமும் நினைவுகளும் ஒளி தேடி தவிக்க நினைவுகளுக்கு கனவுகள் கொடுத்துவிட்டு நிலத்தை மட்டும் இருளில் நிறுத்துகிறது இரவு...

இரவு...

திசைகளெங்கும் விரிந்த வானத்தை சிறகால் அளக்கும் சிறு குருவியென நினைவுகளை கனவால் அளக்கிறது இரவு...

இரவு...

இருட்காற்றில் இறக்கை விரிக்கும் உறக்கப்பறவை உதிர்க்கும் கனவு இறகினை கையிலேந்துகிறது இரவு...