Posts

Showing posts from October, 2020

மின்னல்கள்...

 மேகங்களைப்போல மென்மையாகத்தான் தீண்டிக் கொண்டன விரல்கள்... மேனியெங்கும் பிறக்கின்றன மின்னல்கள்...

மௌனம்...

 சொற்களில் கடத்த இயலா உணர்வுகளை உறிஞ்சியபின் கனத்துதான் கிடக்கிறது மௌனம்...

கனவுகள் பொறுக்குகிறது...

 இரவுப் பேராழியின் கரைகளில் மணலெனக் குவிந்துகிடக்கும் உன் நினைவுகளில் சிப்பி சேகரிக்கும் சிறுவன்போல கனவுகள் பொறுக்குகிறது உறக்கம்...

முடிந்து விடுவதில்லை...

 வானமொன்றும் இடிந்து விழுவதில்லை மேகங்கள் நகர்ந்துவிட்டால்... வாழ்க்கையொன்றும் முடிந்து விடுவதில்லை சொந்தங்கள் விலகிவிட்டால்...

உருகுகிறேன்...

 மின்சாரப் பார்வையால் நீயென்னைத் தீண்டிச் செல்கிறாய்... வெட்டும் மின்னல் தொட்டுவிட்ட பட்ட மரமென பற்றிக்கொண்டு திகுதிகுவென எரிகிறேன்... தீயென்னைச் சுடவேயில்லை... கருகவில்லை நான் உருகுகிறேன்...

மேகங்கள்...

 கடல் குடித்து காற்றிலேறி விண்ணில் மிதந்து நிலத்தின் நெருப்பணைத்த பின் கடல் சேர்கின்றன மேகங்கள்...

வானும் மண்ணுமாய்...

 சிறுகுருவிக் கூட்டமென சிறகடிக்கும் உன் நினைவுகள் கனவுக்கூடுகளில் கண்ணயர்கின்றன... வானும் மண்ணுமாய் நீ...

சிரிக்க மறப்பதில்லை...

 பாறையிடுக்கில் வேர்பற்றி வளைந்து வளரும் செடியிலும் சிரிக்க மறப்பதில்லை பூக்கள்...

பாலமாக நீ...

 உன் நினைவுகள் ஒருகரை... என் எழுத்துக்கள் மறுகரை... பாலமாக நீ...

சுகம்தான்...

 மிதக்கும் மேகங்கள் தொடும் தூரத்தில் சுகம்தான்... கால்கள் கடும்பாறைகள் கடந்து முகடுகள் தொட்டபின்...

மறுத்தாலும்...

 அலைகிறேன் கலைகிறேன் பொழிகிறேன் கரைகிறேன் வடிவம் இழக்கிறேன் வண்ணம் தொலைக்கிறேன்... மறுத்தாலும் என் வானம் நீ... வெறுத்தாலும் உன் மேகம் நான்...

கவலைகள்...

 பூந்தூறலென சிறுநிகழ்வுகளின் மகிழ்ச்சிகளில் முகம்நனைக்கும் வேளையில் கால்களுக்கு கீழே கரைபுரளத் தொடங்குகின்றன கவலைகள்...

நடுங்குகிறேன்...

 நீரள்ளித் தெளித்துச் செல்லும் மேகங்களென நினைவுகளை அள்ளித் தெளித்துவிட்டு நகர்ந்துவிடுகிறாய்... நனைந்தபின் நடுங்குகிறேன்... கனவுகளேனும் கொடு போர்த்திக்கொள்ள...

சிதறித்தான் போகின்றன...

 கனம் ஏற்றிக்கொண்ட கற்கள் சிதறித்தான் போகின்றன... சிகரங்களிலிருந்து உருளும்போது...

இருக்கும்வரை...

 உள்மூச்சும் வெளிமூச்சும் உயிர்த்திருக்கும் உன் நினைவுகள் என்னோடு இருக்கும்வரை...

நிறமற்றுதான் இருக்கிறது...

 நிறமற்றுதான் இருக்கிறது வானம்... நீலம் பூசிச்செல்கிறது பகல்... இருளெறிந்து செல்கிறது இரவு...

கூர்மை...

 என் நினைவுகளின் கூர்மை ஒருவேளை உன் நெஞ்சம் கீறலாம்... வலி வழியும் முன்னரே ஒட்டிக்கொள்ளும் என் நினைவுகள் மருந்தென...

இறுதியிலேனும்...

 என்னோடு உன் நினைவுகள் விரல் கோர்த்து நடக்கின்ற பயணத்தின் பெருவழியின் இறுதியிலேனும் இருப்பாயா நீ...?

பொதிந்திருக்கின்றன...

 சொல்லப்படாமல் தொண்டையோடு நின்றுவிட்ட சொற்களுக்குள் பொதிந்திருக்கின்றன உணர்வுகளின் உண்மைகள்...

எங்கோ நிற்கிறது...

 இருளுக்குள் வழியறியாது எங்கோ நிற்கிறது என் உறக்கம்... உன் நினைவுகளைக் காட்டி அழைத்து வருகிறேன் என்கின்றன கனவுகள்...

துளியளவு...

 துளியளவு தேனெடுத்துவிட்டு மலருக்குள் மரம்வைத்துச் செல்கின்றன தேனீக்கள்...

என்செய்வாய்..

 நகங்களெனில் வெட்டிவிடுவாய்... விரல்களெனில் என்செய்வாய்..

கதகதப்பில்...

 அடிமடியின் வெப்பத்தில் அடைகாக்கும் பறவையென உயிர்ச்சூட்டின் கதகதப்பில் வைத்திருக்கிறேன் உன் நினைவுகளை... சிறு பறவைகளின் கீச்சொலியென சிரிக்கின்றன கனவுகள்...

சொல்லித் திரிகிறான்...

 மின்மினிப் பூச்சிகளை விண்மீன்கள் என்று சொல்லி விற்பனை செய்கிறார்... பறக்கின்றன விண்மீன்கள் என்றே பரவசமடைகிறார்... பறப்பதில்லை விண்மீன்களென சொல்லித் திரிகிறான் பித்தன்...
 இரவுப் பெருங்காற்று எழுப்பிப் பறக்கவைக்கும் உன் நினைவுகளில் ஏதோ ஒன்று என் உறக்கத்தின் விழிகளில் விழ விழிநீரென வழிகின்றன கனவுகள்... உறக்கம்தான் பாவம்... உழல்கிறது உறுத்தலில்...

இருந்தவரையில்...

 பச்சைமண்ணாக இருந்தவரையில் இடையூறுகள் ஏதுமில்லை... பானையாக வனையப்பட்டபின் நெருப்பில் சுட்டு எடுக்கிறது வாழ்க்கை...

தெரிந்துகொண்டே...

 வெவ்வேறு எண்ணங்களைக் கம்பிகளாக்கி வேலியிடுகிறாய்... வெள்ளாடல்ல என் நினைவுகள் வீசும் காற்றென தெரிந்துகொண்டே...

மெலிதாக ஒளிர்கின்றன...

 முயன்று தோற்றவனின் புன்னகையென மெலிதாக ஒளிர்கின்றன உடுக்கள் நிலவில்லா வானில்...

இனிக்கிறேன் நான்...

 நீ இமைக்கும்போது சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் இதழ்களில் தேனுண்டபின் என்னில் இளைப்பாற இனிக்கிறேன் நான்...

கிழிப்பதில்லை...

 கண்பறிக்கும் ஒளியுடன் இருள்கிழிக்கும் மின்னல்கள் இரவைக் கிழிப்பதில்லை எப்போதும்...

கொண்டாடவே செய்கின்றன...

 திருவிழாக்கள் இல்லையெனினும் சிறுவிழாக்கள் கொண்டாடவே செய்கின்றன உன் நினைவுகள் என் உறக்கத்தில் கனவுகள் தூவி...

வெறுங்காலுடன்...

 சுடுமணல் பரப்பொன்றில் நிறுத்திவைத்து வெறுங்காலுடன் கடக்கச் சொல்கிறது வாழ்க்கை...

எப்போதும்...

 இரவுகளும் பகல்களும் என்னைக் கடந்து செல்கின்றன... உன் நினைவுகள் மட்டுமேன் என்னுடனே நிற்கின்றன எப்போதும்...

சட்டெனக் கவிழ்கிறது...

 உச்சிக்குப்பின் நேரத்தோடு நீளும் நிழல்கள் உச்சம் தொட்டபின் சட்டெனக் கவிழ்கிறது இருள்...

இறுக மூடிக்கொள்கிறேன்...

 விண்மீன்கள் மழை இருளுக்குள் பொழிய இறுக மூடிக்கொள்கிறேன் உன் நினைவுகளால் நெய்த இரவை...

முன்னோக்கி...

 நெடுஞ்சாலையில் பின்னோக்கி நகரும் மரங்கள் முன்னோக்கி நகர்த்துகின்றன பயணத்தை...

ஒவ்வொன்றாய்...

 உன்னைச் சுமக்கும் நினைவுகளை ஒவ்வொன்றாய் எறிகிறது இரவு... கனவலைகளில் கலங்கிப்போகிறது என் உறக்கம்...

கடந்தகாலம்...

 நீர்வற்றிய குளமொன்று கனவுகளில் மீன் சுமப்பதுபோல கடந்தகாலம் சுமக்கின்றது நெஞ்சம்...

என் உறக்கம்தான்...

 இனிப்பை மொய்க்கும் எறும்புக் கூட்டமென என் இரவை மொய்க்கும் உன் நினைவுகள்... இரையாகிப் போவதென்னவோ என் உறக்கம்தான்...

தேங்கியபின்...

 ஓடும்வரை நீரில் ஒட்டவில்லை... தேங்கியபின் படர்கிறது பாசி...

கை கோர்க்கிறது இரவு...

 உன் நினைவுகள் பற்றிப் படரும் கொழுகொம்பாகிறது என் உறக்கம்... மொட்டவிழும் கனவுகளோடு கை கோர்க்கிறது இரவு...

வானம் மட்டுமே...

 நான்கு தூண்களும் உடைக்கப்பட்ட பிறகு தலையில் விழும் கூரையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு இனி வானம் மட்டுமே கூரை...

அறியாமலேயே...

 தொட்டாற்சிணுங்கி செடியைப்போலவே மூடிக்கொள்கின்றன உன் இமைகள் என் நினைவுகள் வருடும்போது... வருடுவது என் நினைவுகளென அறியாமலேயே உறங்கிப்போகிறாய் நீ...

ஒருநாள்....

 அடைபட்ட நீரின் அதீத அழுத்தத்தால் உடைபடும் அணைகள் ஒருநாள்....