Posts

Showing posts from November, 2021

திறக்கிறது பகல்...

 காலம் வானத்தைக் கதவாக்குகிறது... இருள் கொண்டு பூட்டுகிறது இரவு... ஒளி வைத்து திறக்கிறது பகல்...

காத்திருக்கிறேன் நானும்...

 சிறுதூறல்களுக்கு ஊடாக உலவும் மென்குளிர் காற்றோடு காத்திருக்கிறது இரவு... குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் உன் நினைவுகளை எடுத்துவைத்து காத்திருக்கிறேன் நானும்...

இனிப்புகள் இனிப்பதில்லை...

 கசப்புகள் அத்தனையும் மென்று விழுங்கியபின் கொடுக்கப்படும் இனிப்புகள் இனிப்பதில்லை...

உன்னை மட்டுமே...

 திரும்ப இயலா பயணம் தொடங்கும்முன் நினைவுகளை திரும்பிப் பார்க்கும்போது திரும்பிச் செல்லத் தோன்றும் கணங்களெல்லாம் உன்னை மட்டுமே சுமந்து கொண்டிருக்கின்றன...

வேடிக்கை பார்க்க பழகுகிறேன்...

 சுக்கான் உடைந்த கலத்தின் மீகாமனாக நான்... கடல் நீரோட்டமும் காற்றுமாக காலம்... அலைகளை வெறித்துப் பார்க்காமல் வேடிக்கை பார்க்க பழகுகிறேன்...

செங்கழனியாக இரவு...

 நீ புன்னகைகளை விதைத்து செல்கிறாய்... நான் கனவுகளை அறுவடை செய்கிறேன்... செழிப்புமாறா செங்கழனியாக இரவு...

உன் நினைவுகளால் நிறையும்போது...

 வானம் மைபூசிக்கொண்ட இரவொன்றில் ஆயிரம் அகல்கள் ஒளிரும் முற்றமென மாறிப்போகிறது என் நெஞ்சம்... உன் நினைவுகளால் நிறையும்போது...

தவிக்கிறது நெஞ்சம்...

 பசித்திருக்கும் குஞ்சுகள் கூட்டில் தனித்திருக்க இரைதேடி பறக்கும் தாய்ப்பறவையென தவிக்கிறது நெஞ்சம்... உன் நினைவுகளில் ஒன்றிரண்டு மறந்தபோது...

நகர்கிறது இரவு...

 நீர்கசியும் பாறைமீது நிதானமாக ஏறும் நத்தையென உன் நினைவுகளில் நகர்கிறது இரவு...

மாட்டிக்கொள்கிறது என் உறக்கம்...

கதண்டு கூட்டில் கல்லெறியும் சிறுவனைப் போல உன் நினைவுகளை உசுப்புகிறது இந்த இரவு... விவரமறியா வழிப்போக்கனாக மாட்டிக்கொள்கிறது என் உறக்கம்...

எப்படியென்றே விளங்கவில்லை...

உறங்கும்போது காணுகின்ற கனவுகளில் பல விழிக்கும் முன்பே விழிகளுக்குள் கரைந்துவிட உன்னை சுமந்து வரும் கனவுகள் மட்டும் நினைவுகளுக்குள் ஒட்டிக் கொள்வதுதான் எப்படியென்றே விளங்கவில்லை...

தள்ளி வையுங்கள்...

கடும் வெயில் தாங்கி கனமழை தாங்கி பெருங்காற்று தாங்கி பிழைத்திருக்கிறது பனை... தள்ளி வையுங்கள் கொலைவாளை...

வேறெதுவும் தெரிவதில்லை...

தேன் நிரம்பிய குடுவையில் விழுந்துவிட்ட தனித்த எறும்பென ஆகிறேன் நான் உன் நினைவுகளில் விழும்போது... திகட்டும்வரை பருகியபின் மூழ்கும்போதும் இனிப்பைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை...

கடைசி மூச்சு...

 எரியும் காடு அணையும்போது மேலெழும் புகைமூட்டத்தில் கலந்திருக்கிறது கருகிய மரங்களின் கடைசி மூச்சு...

உன் நினைவுகளைப் பார்க்கும்போது மட்டும்...

இந்த இரவு ஏனோ உருப்பெருக்கும் கண்ணாடியாக மாறிப்போகிறது உன் நினைவுகளைப் பார்க்கும்போது மட்டும்...

கல்லாகவே இருக்கும் கல்...

 கல்லில் கால் இடிப்பார்... காலில் கல் இடித்ததென்று கதை சொல்வார்... கல்லாகவே இருக்கும் கல்...

நானென்ன செய்ய இயலும்...

பகலில் இருந்து நழுவிய பொழுதுகள் இரவில் விழுந்த பின் பழகிய ஒளிக்கு வழிதேட என்னிடமிருக்கும் உன் நினைவுகளில் கொஞ்சம் இரவல் தருவதைத் தவிர நானென்ன செய்ய இயலும்...

எப்படி கடக்கும்...

 எனது பகல்களை கொய்து உன் கூந்தலில் சூடிக்கொள்கிறாய்... எனது இரவுகளை எடுத்து உன் விழிகளுக்கு பூசிக்கொள்கிறாய்... இப்படியிருக்க நாட்கள் என்னை எப்படி கடக்கும்...

காத்திருக்கிறேன் நான்...

நீருக்குள் அமிழ்ந்து இரைக்காகக் காத்திருக்கும் முதலையென நெஞ்சுக்குள் ஒளிந்திருக்கும் உன் நினைவுகள்... இரையாக என்னைக் கவ்வி இருளுக்குள் சுழற்றியடித்து துகள்களாக பிய்த்த பின்னும் இன்னுமோர் இரவுக்காக காத்திருக்கிறேன் நான்...

உயிர்ப்புடனே இருக்கிறது...

 அடைமழை பொழியும் இரவில் அனைத்தும் உறையும் குளிரில் அடுப்படி மூலையில் சுருண்டு கிடக்கும் பூனை போலவே உன் நினைவும்... ஒடுங்கி இருந்தாலும் உயிர்ப்புடனே இருக்கிறது...

தெரியவில்லை...

 குறைந்த கால இடைவெளியில் கொட்டித் தீர்க்கும் பெருங்கனமழையை தாங்கி நிற்கும் மேகத்தைப் போலவே நீ... பொழியும்போது இந்த இரவு தாங்குமா எனத் தெரியவில்லை...

பூக்கள்...

 புழுதிக்காற்று கடந்து செல்லும் நேரத்திலும் புன்னகைக்கவே செய்கின்றன பூக்கள்...

ஒவ்வொரு இரவிலும் நிறைகிறது...

 நித்தமும் தேன் சுரக்கும் உன் நினைவுப்பூக்கள்... ஒற்றைத் தேனீ கட்டும் தேனடை ஒவ்வொரு இரவிலும் நிறைகிறது...

நீ இருக்கும் இடத்தை வைத்தே...

 தொலைவு அணுக்கம் ஆகிய சொற்களின் பொருள் நீ இருக்கும் இடத்தை வைத்தே நிர்ணயிக்கப் படுகிறது...

கற்பாறை...

 நில்லாமல் நீரோட வழவழப்பாகிறது கற்பாறை...

போதை குறைவதில்லை...

 பனங்கள் பழங்கள்ளாக மாறும்போது ஏறுகின்ற புளிப்பைப் போலவே உன் நினைவுகளும்... காலங்கள் கடந்தாலும் போதை குறைவதில்லை...

உணர்வதில்லை...

 அடுத்தடுத்துக் கிடக்கும் சில்லறைகளின் அடியொற்றி நடக்கும் கால்கள் உணர்வதில்லை கற்களையும் முட்களையும்... கால்கள் வலியுணரும்போது கைக்கெட்டும் தூரத்தில் காசுகள்... காத தூரத்தில் மருந்துகள்...

எதேச்சையானதல்ல...

 கருப்பும் வெள்ளையும் தவிர ஏனைய நிறங்கள் எல்லாம் காணாமல்போன கனவொன்றில் என் காதருகில் நீ சொல்லியதாகத் தோன்றிய சொற்களை அதன்பிறகு எப்போது கேட்டாலும் எல்லா நிறங்களும் என்மேல் ஒட்டிக்கொள்வதொன்றும் எதேச்சையானதல்ல...

கடவுளைக் காணவில்லை...

 "யார்" எனக் கேட்டார்... "நான்" எனச் சொன்னேன்... கடவுளைக் காணவில்லை...

வேறென்ன நான் சுவாசிக்க முடியும்...

 விடாது பொழியும் அடைமழையைத் தொடர்ந்து சரியும் நிலம்போல சடசடவென என்மேல் சரியும் உன் நினைவுகளில் சிக்கிக்கொண்டபின் உன் நினைவுகளைத்தவிர வேறென்ன நான் சுவாசிக்க முடியும்...

அறியாப் பிள்ளைபோல...

 நூலறுந்த பட்டத்தின் பின்னால் ஓடும் அறியாப் பிள்ளைபோல நானும் ஓடுகிறேன் உன் பின்னால்... கையிலிருக்கும் நூல்கண்டாக உன் நினைவுகளுடன்... பெருங்காற்றென சுழன்றடிக்கிறது காலம்...

அளவாகப் பொழியும்வரை...

 அளவாகப் பொழியும்வரை அழகாகவே இருக்கிறது இந்த மழை...

நேரெதிர் நிற்க...

 இரவின் செறிவை இருளால் அளக்க நினைத்தேன்... நிலவும் விண்மீன்களும் நேரெதிர் நிற்க உன் நினைவால் அளந்தேன்... அடர்வு மிகுந்தேதான் இருக்கிறது இரவு...

நீயே நிறைகிறாய்...

உன்னைக் கொஞ்சம் களவு செய்து என் இரவுகள் நிறைய நிலவுகள் செய்தேன்... ஒளியென நினைவுகள் பொழிகிறாய்... உயிரினில் நீயே நிறைகிறாய்...

எண்ணங்கள்...

 எனக்குள் என்னைத்தேடி ஏதும் காணாமல் திகைத்து நிற்க எனக்குள் என்னைத் திணிக்கின்றன எண்ணங்கள்...

கனவுகளின் பெருவெள்ளம்...

 அடைமழையின் தூறல்களென அடுத்தடுத்து பொழியும் உன் நினைவுகள்... இரவின் கரையுடைத்துப் பாய்கிறது கனவுகளின் பெருவெள்ளம்...

பெருமரக் கனவுகளுடன்...

மண்மூடி கிடந்தபோதும் மலைக்காமல் காத்திருந்து மழைத்துளி தழுவியதும் வேர்ப்பிடித்து எழுகிறது விதை பெருமரக் கனவுகளுடன்...

ஏன் முகத்தில் காட்டுகிறாய்...

நிலத்திற்குள் எங்கோ நிறைந்திருக்கும் நீர்போல உனக்குள் நான் ஒளிந்திருக்க வறட்சியை ஏன் முகத்தில் காட்டுகிறாய்...

சலனமின்றி இருக்கிறது உள்ளம்...

பொய்யுரைக்க புகழும் உலகம் மெய்யுரைக்க இகழும்வேளை புகழ்ச்சியும் இகழ்ச்சியும் உதிரும் உடலுக்கென சலனமின்றி இருக்கிறது உள்ளம்...