Posts

Showing posts from March, 2022

பூக்காத செடிகளுக்கு...

 நித்தமும் என் நினைவுகளைக் கொய்து நீ சூடிக்கொண்டு பூக்காத செடிகளுக்கு நீரூற்றுகிறாய்...

அதே மின்னல்...

 பேரண்டத்தின் விதிகள் சற்றே பிசகிய கணமொன்றில் இணையண்டத்தில் நான் நழுவ அங்கும் என்னைக் கடக்கும் உன் கண்களில் அதே மின்னல்...

இரவுகளிலும் பகல்களிலும்...

 உன் நினைவுகளை அடை காக்கிறேன் இரவுகளிலும் பகல்களிலும்... கூட்டுக்குள் சிறையிருந்து அடைகாக்கும் இருவாட்சி பறவையைப் போல...

வெளுக்கிறது கிழக்கு...

 வெளிச்சம் சுமந்து வரும் நொடிகள் இருளில் தடுமாறி இரவின்மேல் விழ வெளுக்கிறது கிழக்கு...

என் உறக்கம்...

 வளைக்கு வெளியே கிளையொன்றில் அமர்ந்திருக்கும் ஆந்தையை அறியாமல் இருளை நம்பி வெளிவரும் எலியென என் உறக்கம்... இரவில் அமர்ந்திருக்கிறது உன் நினைவு...

தூரத்தையல்ல...

 உருளத் தொடங்கிய சக்கரம் நகர்ந்து நகர்ந்து கடந்தது தூரத்தையல்ல காலத்தை...

உறக்கத்தில் மட்டும்...

 விழிப்பில் தொடங்கி உறக்கத்திற்கு முன்புவரை நானாக இருக்கிறேன் நான்... உறக்கத்தில் மட்டும் நானாக இருக்கிறாய் நீ...

என்றோ நீ தந்த நினைவுகளை...

 எங்கோ ஓரிடத்தில் வேய்ங்குழலின் துளைகளில் வழிந்திடும் தேனிசையை செவிகளில் சேர்க்க சுமந்துவரும் காற்றைப் போலவே இந்த இரவும்... என்றோ நீ தந்த நினைவுகளை இன்றும் எடுத்துவந்து இதயத்தில் சேர்ப்பதால்...

ஏனோ...

 என்மேல் கவிழும்போது மட்டும் ஏனோ இந்த இரவு காரிருளுக்குப் பதிலாக வாரி இறைக்கிறது உன் நினைவுகளை...

இரவு...பகல்...

 இமைகளுக்கும் விழிகளுக்குமிடையே கனவு போர்த்துகிறது இரவு... காலையில் கலைந்து கிடக்கும் கனவுகளை மடித்து வைக்க நேரமின்றி பரபரப்பாகவே ஓடுகிறது பகல்...

துள்ளுகிறது மீன்...

 சலனமில்லா நீரின் மேற்பரப்பில் நிலவு மிதக்கும்போது துள்ளுகிறது மீன்...

அறிவிலி பாகன்...

 அங்குசத்திற்கு அடங்கி நிற்கிறது யானையென நினைக்கிறான் அறிவிலி பாகன்...

ஓசைகளேதும் எழுவதில்லை...

மாய பிம்பங்களை உண்மையென்று ஏமாந்தவனின் உணர்வுகள் உடையும்போது ஓசைகளேதும் எழுவதில்லை...

இரவுப் போர்க்களம்...

 கண்ணிவெடி நினைவுகளை புதைத்துவைத்து காத்திருக்கிறது இரவுப் போர்க்களம்... கவனமாக நடக்கும் உறக்கம் கால்களை சரியாக வைக்கும்வரை பிழைத்திருக்கும்...

வாழ்க்கை...

 சுமைதூக்க தயக்கமில்லை என்றேன்... சிலுவையைத் தூக்கி தோளில் வைத்தது வாழ்க்கை...

இரவு...

 பல நிறங்களில் பந்துகளாக உன் நினைவுகள்...  தூக்கியெறிகிறேன் ஒவ்வொன்றாக... எனக்கு நேரெதிரில் சுவர் எழுப்புகிறது இரவு...

பூக்கள்...

 தேன் இருக்கிறது என்பதற்காக திறக்காமலேயே இருப்பதில்லை பூக்கள்...

மருந்து...

 சமயங்களில் கழுகின் கால்நகங்கள் போல கூர்மையாகின்றன உன் நினைவுகள் இரவுகளில்... இதயம் கீறி இரத்தம் வழிய பூசிக்கொள்ள உன் நினைவுகளன்றி வேறென்ன மருந்து தெரியும் எனக்கு...

பொய்தான் மெய்யென்று...

 கண் முன்னே நடமாடும் பொய்யும் புரட்டும் மெய்யென்று சொல்லும் வாய்கள் அப்பாவி காதுகளை ஏமாற்றுகின்றன மெய்யாகவே பொய்தான் மெய்யென்று...

என்னசெய்யும்...

 உன்னை வரைந்துகொண்டு என்னைக் கடக்கும் நொடிகளெல்லாம் உன் வண்ணங்களை என் எண்ணங்களில் ஒட்டிச் செல்ல என் எண்ணங்களெல்லாம் உன் வண்ணங்களாகாமல் என்னசெய்யும்...

கட்டிப்போடுகிறது...

 நீண்ட சங்கிலியின் நெருங்கிய கண்ணிகளாக உன் நினைவுகள்... என்னைக் கட்டிப்போடுகிறது இரவு...

உன் நினைவு...

 பல்லின் அடியில் நஞ்சு வைத்த நாகமொன்று நறுக்கென்று கணுக்காலில் கடிப்பதைப்போல உறக்கத்தின் ஓரத்தில் கடித்துப்போகிறது உன் நினைவு...

உன் பார்வை...

 பாறையொன்றில் தவறி விழுந்த பறவைமுட்டை போலாகிறேன்... உன் பார்வை என்னைத் தவிர்த்து நகரும் பொழுதுகளில்...

குறைவில்லை...

 உறங்கும் எரிமலை போலவே உன் நினைவுகளும்... எப்போது வெடித்தாலும் சேதத்திற்கொன்றும் குறைவில்லை...

முடிவிலி...

 தொலைவென்றால் என்னவென்று வரையறுக்க சொன்னது காலம்... எனக்கும் நிம்மதிக்கும் இடையேயான இடைவெளியென்றேன்... முடிவிலி என்று முகம்திருப்பியது காலம்...

எங்கே கேட்கப்போகிறது...

 குமுறும் எரிமலையாய் சூளுரைகள்... குண்டுகள் வெடிக்கும் கொடுஞ்சத்தம்... இவற்றிற்கிடையே எங்கே கேட்கப்போகிறது குழந்தைகளின் அழுகுரல்கள்...

சுழியமே

 இசைவில்லா கரம் பற்றி எவ்வளவு தொலைவு கடந்தாலும் பயணம் முடியுமிடம் இசையில்லா சுழியமே...