Posts

Showing posts from 2022

அறுவடை...

 வெறுப்பை விதைத்துவிட்டு நஞ்சை ஊற்றுபவர்கள் அன்பையா அறுவடை செய்வார்கள்...

நிரப்பிக்கொள்கிறேன்...

 இப்போதெல்லாம் உனக்கும் எனக்குமான உரையாடல்களில் குறையும் சொற்களின் அடர்த்தியை நினைவுகள் சிலவற்றால் நிரப்பிக்கொள்கிறேன்...

நீர்...

 நெருப்பைத் தொடும் முன் வெப்பத்தை விழுங்குகிறது நீர்...

வேர்களுக்கு மட்டுமே...

 நீருக்காக காத்திருக்கும் வேர்களுக்கு மட்டுமே பொழிவதில்லை மழை...

எந்தத் திசையில்...

 விழிகளை இழுத்துப்பிடித்து வேறுதிசையில் திருப்புகிறாய்... இதயத்தின் எல்லாத் திசைகளிலும் நானிருக்கும்போது எந்தத் திசையில் திருப்புவாய்...

வளைவதில்லை...

 வளைந்த பாதையில் நடக்கும்போதும் வளைவதில்லை கால்கள்...

உன் நினைவுகளை மட்டுமே...

 வளைந்த அலகால் வாரியெடுத்து நீரையும் சேற்றையும் வடிகட்டிய பிறகு மீன்களை மட்டும் விழுங்கும் பூநாரை போல இந்த இரவு உன் நினைவுகளை மட்டுமே விழுங்குகிறது...

சிலையானது கல்...

 நெடுங்காலம் காத்திருந்தபின் சிலையானது கல்...

வழிமறிக்கிறாய் நீ...

 உள்ளம் உதிர்க்கும் சொற்களையெல்லாம் குரல்வளையில் வழிமறிக்கிறாய் நீ... தேங்கிய சொற்கள் வழியறிந்து விழிவழியே வெளியேற ஒவ்வொன்றையும் வாசிக்கிறேன் நான்...

மெல்லக் கரைகிறது இரவு...

 காலக் கலயத்தின் சிறுதுளை வழியே நாளொன்று நிரப்பிவைத்த இருள் துளித்துளியாய் வழிய மெல்லக் கரைகிறது இரவு...

ஒவ்வொரு இரவிலும்...

 திருவிழா இரவில் இருளைத் தின்னும் மின்விளக்குகளென உறக்கம் தின்கின்றன உன் நினைவுகள்... ஒவ்வொரு இரவிலும்...

மரங்கள்...

 கடும் வெயிலிலும் நிழல் தேடுவதில்லை மரங்கள்...

உணரவே முடிவதில்லை...

 பச்சோந்தி போலவேதான் இந்த இரவுகளும்... உன் நினைவுகளுக்கு ஏற்றவாறு நிறம் மாறுகின்றன... உணவாகும்வரை உணரவே முடிவதில்லை உறக்கத்தால்...

மழையல்ல... மகிழ்ச்சி...

 விதைத்துவிட்டு விழிகள் குறுக்கி வானம் பார்க்கும் விவசாயிமேல் மேகங்கள் பொழிவது மழையல்ல... மகிழ்ச்சி...

மகிழ்ச்சி வண்ணங்கள்...

 என் கவலைக் கறைகளில் மகிழ்ச்சி வண்ணங்கள் பூசுகிறாய் நீ...

கனிகள்...

 கனிந்தபின் உதிர்ந்துவிடுகின்றன கனிகள்...

தெரிந்திருக்க அவசியமில்லை...

 சடசடவெனப் பெய்யும் மழைக்கு தரையின் தாகம் தெரிந்திருக்க அவசியமில்லை...

ஒவ்வொரு இரவையும்...

 ஒவ்வொரு இரவிலும் உறங்கவே எண்ணுகிறேன்... ஆனால் ஒவ்வொரு இரவையும் உறங்க வைக்கிறது உன் நினைவு...

என் உறக்கம்...

 கோடைக்காலத்தில் உணவு தேடும் எறும்புகளென என் இரவுகளின் எல்லாத் திசைகளிலும் அலையும் உன் நினைவுகளிடம் சிக்கிக் கொள்கிறது என் உறக்கம்...

கள்ளிச்செடிகள்...

 மழை பெய்யவில்லையென அழுவதில்லை கள்ளிச்செடிகள்...

கத்தவேயில்லை...

 கத்தியபின் கத்தவேயில்லை தவளை...

என்னிடம் பத்திரமாக...

 என் பயணம் நெடுகிலும் உன் நினைவுகளில் எதையும் வழிப்பறி செய்யவில்லை காலம்... உன் நினைவுகள் அத்தனையும் என்னிடம் பத்திரமாக...

தொலைவென்னவோ சுழியம்தான்...

 நான் இங்கிருக்கிறேன்... நீ எங்கிருந்தாலும் நமக்கிடையேயான தொலைவை நம் நினைவுகளால் அளக்கும்போது தொலைவென்னவோ சுழியம்தான்...

உடைக்காதீர்...

 கண்ணாடிக் குடுவைகள் கால்களைக் கிழிப்பதில்லை... உடையாமல் இருக்கும்வரை... உடைக்காதீர்...

மௌனமானேன் நான்...

 உனக்கும் எனக்கும் இடையேயான உரையாடல்களில் கரைந்து கிடந்த உன்னை மீட்டெடுக்க மௌனமானேன் நான்...

அதிகமிருக்கும் வேகம்...

 தோல்வியடைந்த வேட்டைக்குப் பிறகு பசியோடு திரும்பி பதுங்கியிருக்கும் புலியின் பாய்ச்சலில் அதிகமிருக்கும் வேகம்...

நிச்சயமில்லை என்றாலுங்கூட..

 கற்களை எடுத்து கலயத்தில் சேர்க்கும் காகமென சொற்களை எடுத்து உன்னில் கோர்க்கிறேன்... நீர் மேலேறுவது நிச்சயமில்லை என்றாலுங்கூட...

கிளைகள் முறிந்தாலும்...

 கிளைகள் முறிந்தாலும் வளர்வதை நிறுத்துவதில்லை மரங்கள்...

உன் நினைவுகள்...

 அலையும் காற்று நிலையாய் நிற்கும் கோடைக்கால இரவொன்றில் பெருகும் வியர்வைபோல உன் நினைவுகள்...

உதிர்ந்தும் இருக்கலாம்...

 என்னைக் கடக்கும் காற்றில் மிதந்து செல்கிறது ஏதோ ஒரு பறவையின் இறகு... பிடுக்கப் பட்டுத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை... உதிர்ந்தும் இருக்கலாம்...

இரவு...

 உன் நினைவுகளைத் தொடவே மாட்டேனென உறுதிமொழி சொல்லிச் செல்கிறது இரவு... வாழைத்தோட்டத்தை கடக்கும் யானையொன்றைப்போல...

உடன் வருவதில்லை சோகங்கள்...

 சிரித்துக்கொண்டே கடந்து செல்ல பழகியபின் ஒட்டிக்கொண்டு உடன் வருவதில்லை சோகங்கள்...

கனவுகள்...

 கடலின் மேல் வீசுகின்ற காற்றாக உன் நினைவுகள்... அலையலையாய் கனவுகள்... என் இரவின் கரைகளோ எப்போதும் ஈரமாக...

பாறை சுடும்...

 கொளுத்தும் வெயிலில் நிற்கும் பாறைக்கு சுடுவதில்லை... ஆனாலும் பாறை சுடும்...

உலைக்களமாகிறது வாழ்க்கை...

 உலைக்களமாகிறது வாழ்க்கை... தினமும் நான் காய்கிறேன்... விரும்பிய வடிவில் என்னை வடிக்க சம்மட்டி அடிக்கிறது காலம்... உலைக்களமாகிறது வாழ்க்கை...

பாவம் இந்த நொடிகள்...

 ஏன் நீ இப்படி இழுத்துப் பிடித்துக்கொள்கிறாய் என் இரவுகளை... பாவம் இந்த நொடிகள்... நகர முடியாமல் ஒட்டிக் கிடக்கின்றன உன் நினைவுகளில்...

என்னதான் செய்துவிடும்...

 சொற்களுக்குள் முட்கள் பொதிந்து சொல்லுபவர்கள் சொல்லுங்கள்... காட்டெருதின் கால் குளம்புகளென மனம் கடினப்பட்ட பின் என்னதான் செய்துவிடும் முட்கள்...

இரவு...

 மறுகால் பாயும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கும் மதகைப்போல உன் நினைவுகளைப் பார்க்கிறது இரவு...

சிப்பிகள்...

 முத்துக்கள் இருக்கிறதா இல்லையாவென கவலைப் படுவதில்லை சிப்பிகள்...

விடியும்வரை...

 இருளில் செய்த இரவென்ன ஒளியைத் தின்றா செரித்துவிடும்... விடியும்வரை காத்திருப்போம்...

விடிகிறது இரவு...

 கோடிகோடி ஒளிப்பூக்கள் கொட்டிக்கிடக்கும் வானப் பரப்பில் ஒற்றை விண்மீன் தேடுவதைப்போல உன் நினைவுகளுள் ஒன்றைத் தேடுவதற்குள் விடிகிறது இரவு...

கடினமானாலும்...

 காய்ந்த தரை கடினமானாலும் ஈரம்காண ஆழம்தேடுகின்றன வேர்கள்... இலைகளை களைகின்றன மரங்கள்...

என் இரவு...

 காடொன்று பற்றிக்கொண்டு கனன்று எரியும்போது புகைநிற மேகங்கள் பொழியும் மழையென உன் நினைவுகள்... வெந்து தணிகிறது என் இரவு...

வாழ்க்கை...

 புரிந்துகொள்ள மறுப்பவர்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது புரியத் தொடங்குகிறது வாழ்க்கை...

வானமென்னவோ...

 பொழுதிற்கேற்ப நிறங்கள்தான் மாறிக்கொள்கின்றன... வானமென்னவோ அப்படியேதான் இருக்கிறது...

காற்று தேடுகிறேன்...

 நிலத்திலிருந்து நீருக்கு நெடுங்காலம் முன்பே இடம்பெயர்ந்துவிட்ட பாலூட்டி போலவே நானும்... இப்போதும் உன் நினைவுகளை சுவாசிக்க காற்று தேடுகிறேன்...

பூக்காத செடிகளுக்கு...

 நித்தமும் என் நினைவுகளைக் கொய்து நீ சூடிக்கொண்டு பூக்காத செடிகளுக்கு நீரூற்றுகிறாய்...

அதே மின்னல்...

 பேரண்டத்தின் விதிகள் சற்றே பிசகிய கணமொன்றில் இணையண்டத்தில் நான் நழுவ அங்கும் என்னைக் கடக்கும் உன் கண்களில் அதே மின்னல்...

இரவுகளிலும் பகல்களிலும்...

 உன் நினைவுகளை அடை காக்கிறேன் இரவுகளிலும் பகல்களிலும்... கூட்டுக்குள் சிறையிருந்து அடைகாக்கும் இருவாட்சி பறவையைப் போல...

வெளுக்கிறது கிழக்கு...

 வெளிச்சம் சுமந்து வரும் நொடிகள் இருளில் தடுமாறி இரவின்மேல் விழ வெளுக்கிறது கிழக்கு...

என் உறக்கம்...

 வளைக்கு வெளியே கிளையொன்றில் அமர்ந்திருக்கும் ஆந்தையை அறியாமல் இருளை நம்பி வெளிவரும் எலியென என் உறக்கம்... இரவில் அமர்ந்திருக்கிறது உன் நினைவு...

தூரத்தையல்ல...

 உருளத் தொடங்கிய சக்கரம் நகர்ந்து நகர்ந்து கடந்தது தூரத்தையல்ல காலத்தை...

உறக்கத்தில் மட்டும்...

 விழிப்பில் தொடங்கி உறக்கத்திற்கு முன்புவரை நானாக இருக்கிறேன் நான்... உறக்கத்தில் மட்டும் நானாக இருக்கிறாய் நீ...

என்றோ நீ தந்த நினைவுகளை...

 எங்கோ ஓரிடத்தில் வேய்ங்குழலின் துளைகளில் வழிந்திடும் தேனிசையை செவிகளில் சேர்க்க சுமந்துவரும் காற்றைப் போலவே இந்த இரவும்... என்றோ நீ தந்த நினைவுகளை இன்றும் எடுத்துவந்து இதயத்தில் சேர்ப்பதால்...

ஏனோ...

 என்மேல் கவிழும்போது மட்டும் ஏனோ இந்த இரவு காரிருளுக்குப் பதிலாக வாரி இறைக்கிறது உன் நினைவுகளை...

இரவு...பகல்...

 இமைகளுக்கும் விழிகளுக்குமிடையே கனவு போர்த்துகிறது இரவு... காலையில் கலைந்து கிடக்கும் கனவுகளை மடித்து வைக்க நேரமின்றி பரபரப்பாகவே ஓடுகிறது பகல்...

துள்ளுகிறது மீன்...

 சலனமில்லா நீரின் மேற்பரப்பில் நிலவு மிதக்கும்போது துள்ளுகிறது மீன்...

அறிவிலி பாகன்...

 அங்குசத்திற்கு அடங்கி நிற்கிறது யானையென நினைக்கிறான் அறிவிலி பாகன்...

ஓசைகளேதும் எழுவதில்லை...

மாய பிம்பங்களை உண்மையென்று ஏமாந்தவனின் உணர்வுகள் உடையும்போது ஓசைகளேதும் எழுவதில்லை...

இரவுப் போர்க்களம்...

 கண்ணிவெடி நினைவுகளை புதைத்துவைத்து காத்திருக்கிறது இரவுப் போர்க்களம்... கவனமாக நடக்கும் உறக்கம் கால்களை சரியாக வைக்கும்வரை பிழைத்திருக்கும்...

வாழ்க்கை...

 சுமைதூக்க தயக்கமில்லை என்றேன்... சிலுவையைத் தூக்கி தோளில் வைத்தது வாழ்க்கை...

இரவு...

 பல நிறங்களில் பந்துகளாக உன் நினைவுகள்...  தூக்கியெறிகிறேன் ஒவ்வொன்றாக... எனக்கு நேரெதிரில் சுவர் எழுப்புகிறது இரவு...

பூக்கள்...

 தேன் இருக்கிறது என்பதற்காக திறக்காமலேயே இருப்பதில்லை பூக்கள்...

மருந்து...

 சமயங்களில் கழுகின் கால்நகங்கள் போல கூர்மையாகின்றன உன் நினைவுகள் இரவுகளில்... இதயம் கீறி இரத்தம் வழிய பூசிக்கொள்ள உன் நினைவுகளன்றி வேறென்ன மருந்து தெரியும் எனக்கு...

பொய்தான் மெய்யென்று...

 கண் முன்னே நடமாடும் பொய்யும் புரட்டும் மெய்யென்று சொல்லும் வாய்கள் அப்பாவி காதுகளை ஏமாற்றுகின்றன மெய்யாகவே பொய்தான் மெய்யென்று...

என்னசெய்யும்...

 உன்னை வரைந்துகொண்டு என்னைக் கடக்கும் நொடிகளெல்லாம் உன் வண்ணங்களை என் எண்ணங்களில் ஒட்டிச் செல்ல என் எண்ணங்களெல்லாம் உன் வண்ணங்களாகாமல் என்னசெய்யும்...

கட்டிப்போடுகிறது...

 நீண்ட சங்கிலியின் நெருங்கிய கண்ணிகளாக உன் நினைவுகள்... என்னைக் கட்டிப்போடுகிறது இரவு...

உன் நினைவு...

 பல்லின் அடியில் நஞ்சு வைத்த நாகமொன்று நறுக்கென்று கணுக்காலில் கடிப்பதைப்போல உறக்கத்தின் ஓரத்தில் கடித்துப்போகிறது உன் நினைவு...

உன் பார்வை...

 பாறையொன்றில் தவறி விழுந்த பறவைமுட்டை போலாகிறேன்... உன் பார்வை என்னைத் தவிர்த்து நகரும் பொழுதுகளில்...

குறைவில்லை...

 உறங்கும் எரிமலை போலவே உன் நினைவுகளும்... எப்போது வெடித்தாலும் சேதத்திற்கொன்றும் குறைவில்லை...

முடிவிலி...

 தொலைவென்றால் என்னவென்று வரையறுக்க சொன்னது காலம்... எனக்கும் நிம்மதிக்கும் இடையேயான இடைவெளியென்றேன்... முடிவிலி என்று முகம்திருப்பியது காலம்...

எங்கே கேட்கப்போகிறது...

 குமுறும் எரிமலையாய் சூளுரைகள்... குண்டுகள் வெடிக்கும் கொடுஞ்சத்தம்... இவற்றிற்கிடையே எங்கே கேட்கப்போகிறது குழந்தைகளின் அழுகுரல்கள்...

சுழியமே

 இசைவில்லா கரம் பற்றி எவ்வளவு தொலைவு கடந்தாலும் பயணம் முடியுமிடம் இசையில்லா சுழியமே...

காலம்...

 எப்போதேனும் அரும்பும் மகிழ்ச்சி மலராகும் முன்பே பெருங்காற்றை அனுப்பி வைக்கிறது காலம்...

பிழைத்திருக்கிறோம்...

 செங்காந்தளே செங்காந்தளே... துயில்பவர் செவிகளில் செய்தி சொல்... கடல் நம்மை தின்ற பின்னும் பிழைத்திருக்கிறோம்... கரப்பான்பூச்சிகள் என்ன செய்யுமென்று...

ஒட்ட மறுக்கிறது...

 என் இமைகளை விழிகளோடு உறக்கம் தடவி ஒட்ட மறுக்கிறது இரவு... உன் நினைவுகள் சொல்வதை கேட்டுக்கொண்டு...

ஒருபோதும் மறைவதில்லை...

 கார்த்திகை மாதம் கருமேகங்கள் சூழ்ந்த வானம்... காரிருள் களையும் ஒளிக்கீற்றுக்கு வழியேதும் இருக்குமாவென ஏங்கி நிற்கும்போது உதித்த ஞாயிறு ஒருபோதும் மறைவதில்லை...