Posts

Showing posts from August, 2020

மெல்ல உருள்கிறது...

 வண்டி நிறைக்கும் பொதிகளென கவலைகள்... முனகி இழுக்கும் மாடாக நான்... மெல்ல உருள்கிறது வாழ்க்கை...

சிதறுகின்றன கனவுகள்...

 மனம் வருடும் மயிலிறகாய் உன் நினைவுகள்... சிலிர்க்கும்போது சிதறுகின்றன கனவுகள்...

ஒவ்வொரு செங்கலாக...

 சிறு சிறு செங்கற்களாய் ஆசைகள் அடுக்கிவைத்து கட்டுகிறேன்... ஒவ்வொரு செங்கலாக உருவுகிறது வாழ்க்கை...

இறக்கைகளில் வண்ணங்களாக...

 இரவுப் பூங்காவெங்கும் படபடக்கும் பட்டாம்பூச்சி கனவுகளின் இறக்கைகளில் வண்ணங்களாக உன் நினைவுகள்...

வருடிச் செல்கிறது...

 எங்கோ விழுகின்ற இளந்தூறல்கள் எழுப்புகின்ற மண்வாசம் பொழியாத தூரத்தையும் வருடிச் செல்கிறது...

இறுகப் பற்றிக்கொண்டே...

 நீ என் நினைவுகளை வேகமாக உதறுகிறாய் இறுகப் பற்றிக்கொண்டே...

உடைந்ததும்...

 உடையாதவரை முகம் காட்டிய கண்ணாடி உடைந்ததும் உடல் கீறுகிறது...

அவை அறியவில்லை...

 உன்னை அழுத்தும் சுமைகள் எண்ணுகின்றன என்னை மறக்கவைப்பதாக... அவை அறியவில்லை என் நினைவுகளை நீ சுமக்கும்போது இதர சுமைகள் எடை இழக்குமென்று...

இன்றைய பொழுது...

 அதிகாலைத் தூறல்கள் பூபாளம் இசைக்க அந்திமாலைத் தூறல்கள் நீலாம்பரி படிக்க விழித்து உறங்குகிறது இன்றைய பொழுது...

கேட்பதே இல்லை...

 இரவென்னை உறங்கச்சொல்வது என் இமைகளை இழுத்துப் பிடிக்கும் உன் நினைவுகளுக்கு கேட்பதே இல்லை...

தொலைவு நீளும்போது...

 சுட்டெரிக்கும் விண்மீன்களும் விட்டு விட்டு விளக்கெரிக்கும் மின்மினிகளாகின்றன தொலைவு நீளும்போது...

கண்களுக்கு வெளியே...

 பசித்துக் கிடக்கும் உன் நினைவுகள் என் உறக்கம் தின்றபின் பசியாற கண்களுக்கு வெளியே காத்திருக்கின்றன கனவுகள்...

நிழல் விரிக்கிறது மரம்...

 நீர்தேடி நிலம் புகுந்த வேர்களுக்கு வியர்க்காமல் நிழல் விரிக்கிறது மரம்...

என்னிடமே சொல்கிறாய்...

 ஒளி சூடிய வானினை இருள் மூட ஒளி சிந்தும் உன் விழிகளை இமைகள் மூட கனவுகளில் நான் வருவதில்லையென என்னிடமே சொல்கிறாய் உன் கனவில்...

சுழலும்வரை மட்டுமே...

 சுடரால் சுடும் கோளத்தை சுற்றும் கோளம் சுழலும்வரை மட்டுமே பிழைத்திருக்கும்...

உன் கண்களன்றி...

 என் விழிகளுக்கு உன் விழிகளால் வேலியிட்டாய்... என் விழிகளுக்குள் உன் விழிகள்தவிர எஞ்சியவற்றை காலிசெய்தாய்... பிறகெப்படி கனவுகளுக்குள் வேறெதுவும் வரும் உன் கண்களன்றி...

அழகாகவே இருக்கிறது...

 கரிசல் மண்ணில் உதிர்ந்து கிடக்கும் வெள்ளை மலர்கள்... அழகாகவே இருக்கிறது இரவு வானம்...

நீயேயாகிறாய்...

 நீளக்கயிற்றில் கட்டிய காளையாக உன் நினைவுகளால் கட்டி வைத்திருக்கிறாய் என்னை... நான் சுற்றிவரும் இடமெல்லாம் நீயேயாகிறாய்...

சுழலவே செய்கிறது இயற்கை...

 நீரிருந்த இடமெல்லாம் நிலமாகிப்போக நிலமாக இருந்த இடம் நீருக்குள் மூழ்க சுழலவே செய்கிறது இயற்கை... சுழலுக்குள் இருப்பதால் சுழலாததுபோல் உணர்வார்போலும் மனிதர்...

நித்தமும் கனவுகளாகின்றன...

 விரல்களில் ஒட்டிக்கொண்ட வண்ணத்துப்பூச்சி இறக்கை வண்ணங்கள் சிறுபிள்ளை வாய்மொழியில் விதவிதமாய் கதைகளாவதுபோல நெஞ்சோடு ஒட்டிக்கொண்ட உன் நினைவுகளும் நித்தமும் கனவுகளாகின்றன...

சிற்றோடையின் சிணுங்கல்கள்...

 பெருமழையொன்றின் பிறகான அருவியின் ஆர்ப்பரிப்பில் அமிழ்ந்துபோகின்றன சிற்றோடையின் சிணுங்கல்கள்...

இரவென்று பெயர்...

 என் கனவுகளின் வெளியில் உன் நினைவுகள் உலவும்நேரம் கவிழும் பொழுதுக்கு இரவென்று பெயர்...

துடுப்பல்ல கடல்...

 பெருங்கடலின் அலைகள் தாண்டி வலைகள் வீசும் மனிதரின் நம்பிக்கை துடுப்பல்ல கடல்...

பறக்கும் கனவுகள்...

 கனலெனத் தகிக்கும் உன் நினைவுகள்... காய்ந்த சருகென என் உறக்கம்... பரபரவெனப் பற்றியெரியும் வெளிச்சத்தில் இங்குமங்கும் பறக்கும் கனவுகள்...

சாய்கிறது உயர்ந்த மரம்...

 நசநசவெனப் பெய்யும் தூறல்களில் நெகிழ்ந்த மண்ணில் வேர்ப்பிடிப்புகள் நழுவும் நேரம் உரத்த காற்றில் சாய்கிறது உயர்ந்த மரம்...

உன் இதயம்தவிர...

 உன் எண்ணங்களிலிருந்து என்னைத் தள்ளுகிறாய்... என்னை எண்ணாததுபோலவே நேரம் கொல்லுகிறாய்... தள்ளினாலும் விழுவதற்கு வேறிடம் எது உன் இதயம்தவிர...

கருமுகில்கள்...

 பெருவெள்ளம் சுமக்கும்போதும் மிதக்கவே செய்கின்றன கருமுகில்கள்...

கனவுகளின் கதையையும்...

 விடியலில் என் விழிகளிலோடும் செவ்வரிகள் சொல்கின்றன உறக்கம் திருடிய உன் நினைவுகளின் கதையையும் உறங்கச் சொல்லிய கனவுகளின் கதையையும்...

கனவில் கனக்கிறது...

 நிறைந்தோடும் நதியின் நீரின் அடியில் உருண்டோடும் சிறுமணல் துகள்களின் கனவில் கனக்கிறது பெரும்பாறை...

என் உறக்கம் தேடுகின்றன...

 மண்ணுருண்டை சுமக்கும் சிறு குளவி இடம்தேடுவதுபோல உன் நினைவுகள் சுமக்கும் கனவுகள் என் உறக்கம் தேடுகின்றன...

ஆசைகள்...

 வாழ்க்கை நதியில் நீந்துகிறேன்... வழியெங்கும் தூண்டில் முட்களில் புழுவாய் நெளிகின்றன ஆசைகள்...

கவனிக்கத்தான் யாருமில்லை...

 எரியும் சுடரென உன் நினைவுகள்... சிதறும் ஒளியென கனவுகள்... மெழுகென உருகுகிறது இந்த இரவு... கருகும் திரியான என் உறக்கத்தைக் கவனிக்கத்தான் யாருமில்லை...

வேறிடம் நகர்கிறது...

 மரத்தின் மேலிருக்கிறது நிலவு... இலைகளெங்கும் வழியும் நிலவு வேரில் சொட்டும்முன் வேறிடம் நகர்கிறது...

வழிந்தோடுகிறது உறக்கம்...

 வலியும் களைப்பும் தேங்கிநிற்கும் வரிப்பள்ளங்கள் விழிச்சுருக்கத்திலும் முகச்சுழிப்பிலும் என் விழிகளில் விழுந்தபின் வழிந்தோடுகிறது உறக்கம்...

இரவு....

 நெஞ்சமெங்கும் நிறங்களைத் தூவிச் செல்கின்றன உன் நினைவுகள்... வானவில் கனவுகள் வரைகிறது இரவு....

காய்ந்துகொண்டே...

 வெயில் காய்ந்துகொண்டே நிழல் தருகிறது மரம்...

உதிர விரும்புகிறேன்...

 மலர்போலவே உதிர விரும்புகிறேன்... உதிர்ந்த பின்னும் கிளை தேடாமல்...

வேறென்ன செய்வாய்...

 நான் தூங்கவில்லை என்றேன்... நீயோ தூங்கினேன் என்றாய்... என் நினைவுகள் காவலிருக்கும்போது நிம்மதியாகத் தூங்காமல் வேறென்ன செய்வாய்...

குஞ்சுகளின் பசி...

 வல்லூறு தீட்டும் அலகிலிருந்து உதிரும் இறகில் உறைந்திருக்கும் குருதியில் நிறைந்திருக்கிறது ஏதோவொரு கூட்டில் காத்திருக்கும் குஞ்சுகளின் பசி...

ஏனிப்படி செய்கிறாய்..

 என் பகல்களை உன் நினைவால் கொய்கிறாய்... என் இரவுகளில் கனவுகளாகப் பெய்கிறாய்... தினமும் நீ ஏனிப்படி செய்கிறாய்..

ஒருநாள்...

 அடைபட்ட நீரின் அதீத அழுத்தத்தால் உடைபடும் அணைகள் ஒருநாள்....

உறங்கிப்போகிறாய் நீ...

 தொட்டாற்சிணுங்கி செடியைப்போலவே மூடிக்கொள்கின்றன உன் இமைகள் என் நினைவுகள் வருடும்போது... வருடுவது என் நினைவுகளென அறியாமலேயே உறங்கிப்போகிறாய் நீ...