Posts

Showing posts from May, 2021

அத்தனையையும் கிழிக்கும்..

அடர் இருள் வான் நிறைத்தாலும் அதிகாலை ஞாயிறு அத்தனையையும் கிழிக்கும்..

உன் நினைவுகள்...

நாளில் பாதி பகலாகிறது நாளில் மீதி இரவாகிறது... என்னில் பாதி நீயாகிறாய் என்னில் மீதியாய் உன் நினைவுகள்...

ஏக்கமாய் விரிகிறது...

பறக்கும்போது இறக்கைகள் தட்டவில்லை... சற்றே பெரிய கூண்டுதான்... பறவையின் கண்களில்தான் ஏக்கமாய் விரிகிறது வானம்...

விடுவதேயில்லை...

தென்றலாய் உன் நினைவுகள்... நான் தவழ்கிறேன்... பெருங்காற்றாய் உன் நினைவுகள்... நான் சுழல்கிறேன்... என்னை அசையாமலிருக்க விடுவதேயில்லை உன் நினைவுகள்...

பழிப்பதில்லை...

பெருங்காற்றில் சாயும் மரம் பழிப்பதில்லை வேர்களை...

நிறைகின்றன கனவுகள்...

கலப்பை நுனியென நெஞ்சம் உழும் உன் நினைவுகள்... உன்னை விதைத்தபின் இரவெங்கும் நிறைகின்றன கனவுகள்...

காய்ந்த காடு...

நெருப்பின் சிறுபொறிக்குள் ஒளிந்திருக்கும் பெருந்தீயை கருகும் முன்னர் உணர்கிறது காய்ந்த காடு...

கரைதேடவா முடியும்...

கரைகள் தெரியும்வரை நீந்தவில்லை... கைகள் களைக்கும்வரை நீந்துகிறேன்... உன் நினைவுகள் பெருங்கடலான பிறகு கரைதேடவா முடியும்...

இறைத்துச் செல்கிறாய்...

மேகங்கள் நீங்கிய கருவா இரவை கணக்கின்றி நிறைக்கும் விண்மீன்களென நீ என்னில் இறைத்துச் செல்கிறாய் கனவுகளை...

நீருக்குத் தெரியாது...

மிதக்கும் கப்பலில் விழுந்த துளையில் புகுந்த நீருக்குத் தெரியாது மூழ்கும் கப்பலென்று...

படபடக்கின்றன...

நெஞ்சமெங்கும் கூட்டுப்புழுக்களென கொட்டிக்கிடக்கும் உன் நினைவுகளுக்கு இரவானது எப்படித்தான் தெரியுமோ... படபடக்கின்றன பட்டாம்பூச்சிகளாக கனவுகள்...

நீயும் உன் நினைவுகளும்...

நிலம் விழுங்கும் கடலென எனை விழுங்கும் உன் நினைவுகள்... தரை மறைத்து காட்சியாகும் கடலும் அலைகளுமாக நீயும் உன் நினைவுகளும்...

விடியல்கள்...

கடற்கரையில் மணல்வீடு கட்டி விளையாடும் சிறார்களைப்போல உன் நினைவுகளும்... கனவுகளை கட்டியெழுப்புகின்றன உறக்கத்தில்... கடலலைகளென விடியல்கள்...

என் இரவுகள்...

நீ என் இரவுகளைக் கொய்து சூடிக் கொள்கிறாய்... நீ நரை கடக்கிறாய் என் இரவுகள் ஒளியில் நடக்கின்றன...

வேர்கள்...

நீர் உறிஞ்சும் வேர்கள் நிலம் நீங்குவதில்லை பூக்களைப் பார்க்க...

விடியவில்லை...

தெரியாத வழியொன்றில் தயங்கித் தயங்கி நடந்து செல்லும் சிறுவனைப்போல உன் நினைவுகளின் ஊடாக நடக்கிறேன் இரவில்... இரவு முடிந்தபின்னும் விடியவில்லை...

பாவம் நீ...

உலைமூடியால் அலைமூட விழைகிறாய்... நிலவொளியில் குளிர்காய நினைக்கிறாய்... பாவம் நீ என்னை மறக்க ஏதேதோ செய்கிறாய்...

மனம் மட்டும்...

கலப்பை களைப்பில்லை உழுகிறேன் வலியில்லை... நுகத்தடி சுமையில்லை இழுக்கிறேன் வலியில்லை... சாட்டை முதுகுதொட மனம் மட்டும் வலிக்கிறது...

விதி...

நிழல்தரும் மரங்கள் சுடும்வெயிலில் நிற்பதுதான் விதி...

என் உறக்கம்தான்...

பெருங்கடலின் பரப்பில் நிலைகொள்ளாமல் நகரும் கடும்புயலைப் போலவே உன் நினைவுகள்... கணிக்கவே முடிவதில்லை... எந்தப்பக்கம் கரைகடந்தாலும் சேதமாகிப் போவதென்னவோ என் உறக்கம்தான்...

அடர்வனமென...

அடர்வனமென உன் நினைவுகள்... ஊடறுக்கும் ஓடைகளாக கனவுகள்... நதியாகி காடு கடக்க விடிகிறது...

மலர்கள்....

தேனீக்களுக்காக தமக்குள் தேன் நிரப்புவதில்லை மலர்கள்....

எத்தனை காலமாக...

நெடுநேரம் நிற்க களைத்த கால்கள் வலிக்கும் வேளையில் நினைக்கிறேன்... பாவம் உன் நினைவுகள்... எத்தனை காலமாக என் இதயத்தில் நிற்கின்றன களைப்பு கடந்து...

பிம்பங்களாய் கனவுகள்...

ஒளியெல்லாம் ஓய்வெடுக்கச் சென்றபின் ஒப்பனை செய்துகொள்ளும் உன் நினைவுகள் உறக்கஆடியில் முகம்பார்க்க பிம்பங்களாய் கனவுகள்...

கொதிக்கும் உலை...

அரிசி போட்டதும் அடங்கியதுபோலத் தெரிந்தாலும் அடுப்பெரியும்வரை கொதிக்கும் உலை...

நனையாமலா இருக்கிறது...

என்னிடமிருந்து ஏனோ நீ விலகி நிற்கிறாய்... அதனாலென்ன நீர்பொழியும் மேகங்கள்கூட நிலத்திடமிருந்து தள்ளித்தான் இருக்கின்றன... நிலமென்ன நனையாமலா இருக்கிறது...

வேடிக்கை பார்க்கிறது கோடை..

சித்திரை நிலவொளி இருளின்மேல் வழிய ஒளியில் நனையும் இரவோ வெளிச்சமாய் சிலிர்க்க வியர்வை வழிய வேடிக்கை பார்க்கிறது கோடை..

இருளில் தேடுகிறதோ உறக்கம்...??

தொடக்கமும் முடிவும் தெரியாத இருள்சுழலில் விழுந்தபின் விழிகள் விரித்துப் பார்த்தாலும் ஒளியின் தடமேதும் தெரியவில்லை... உறங்கக் காத்திருக்கிறேன்... என் விழிசேரும் வழி தெரியாமல் இருளில் தேடுகிறதோ உறக்கம்...??

உன் நினைவுகள் மட்டும் எப்படி...

நெருப்பென எரியும் கவலைகள் எத்தனையோ என்னைப் பற்றிக்கொள்ள திகுதிகுவென எரிகிறேன்... உன் நினைவுகள் மட்டும் எப்படி பொன்னாக..??

நதி உடைக்காதவரை...

பெருநதியொன்றைத் தேக்கி வைத்திருக்கும் அணையென உன் நினைவுகளை நிரப்பியிருக்கிறது நெஞ்சம்... நதி உடைக்காதவரை உயிர்த்திருக்கும் அணை...