Posts

Showing posts from 2018

இரவு...

விரியும் இருளின் விரல்களில் வழியும் கருமையில் கரையும் நொடிகளுக்குள் மெல்ல மூழ்குகிறது இரவு...

இரவு...

தென்றல் தீண்டிய சிறுபூவென சிரிக்கும் கனவுகள் இமைகளுக்குள் மலர கவலைகள் உறங்க இருள் விரிக்கிறது இரவு..

களமாடி நிற்கிறோம்

களமாடி நிற்கிறோம் கணைகள் ஆயிரம் வரினும் உளங்கலங்கோம் ஒருபோதும்... அர்ஜூனன் வில்லேறிய அம்புகள் நாங்கள்... இலக்கு தவிர எங்கேயும் பாயோம்... எரியும் நெருப்பில் நடக்கும்போதும் கருகுவதில்லை எங்கள் கால்கள்...

உரமா..மரமா...

மண் விழுந்து மூடும்போது முட்டி மோத மறுக்கும் விதைகள் மண்ணோடு மட்கி உரமாகும்... நிலம் மோதி தரை பிளந்து தலை நிமிரும் விதைகளோ மரமாகும்...

கனவு...

உலராத மனதில் நடந்து செல்லும் கனவுகளின் காலடித்தடத்தில் நிரம்புகிறது கனவு...

பிரிவு...

அணைச்சுவர் உடைத்த வெள்ளமெனப் பெருகி இமைச்சுவர் இடித்து வீழும் துளிகளில் உவர்க்கிறது பிரிவின் வெம்மை...

கூடு...

புதிய இறக்கைகள் வளர்ந்த பறவை உதிர்த்துச் சென்ற பழைய இறகுகளின் கதகதப்பில் உறங்குகிறது பறவை பிரிந்த கூடு...

இரவு...

கடலில் விழுந்த ஊசியென தொலைந்த கனவுகளின் மேல் அலையாடும் நினைவுகளின் ஊடாக உறங்காத விழிகளின் வழியே என்ன தேடுகிறதோ இரவு...

இரவு

கடும்புயல் கடந்த பின் கரையெங்கும் விழுந்து கிடக்கும் மரங்களென முறிந்த கனவுகள் நிறைந்த இதயத்தில் இருள்மழை பொழிகிறது இரவு...

இரவு..

விடியல் பூக்களின் வெளிச்ச அரும்புகளை இருள் கர்ப்பத்தில் சுமக்கிறது இரவு...

பெய்யாதிரு மழையே..

கூரையில்லா வீடுகளில் ஈரத்தரை மேல் எரியும் அடுப்புகள் அணையும் வரையேனும் பெய்யாதிரு மழையே...

புலி...

இலையுதிர்காலத்தில் பெருமரத்தின் கீழ் காய்ந்த புற்களுக்கிடையே வரிகளுக்குள் மறைந்திருக்கிறது புலி...

இரவு...

பெருங்காற்று பிய்த்தெறிந்த சிதைந்த கூடு சுற்றும் சிறுகுருவியென மௌனமே கதறலாய் மாறிப்போன மக்களின் மேல் மழையின்றி கவிழட்டும் இரவு...

காத்திருக்கிறது காடு...

மறைந்திருக்கிறது விதை மண்ணுக்குள்... புதைந்ததென்று பேசுவார் கோடரிக்காரர்... கால்களுக்கு கீழே காத்திருக்கிறது பெருங்காடு... கண்ணற்றவர் கட்டைகள் சுமந்து சிரிக்கிறார்... விழுங்கும் காலத்திற்கு காத்திருக்கிறது காடு...

இரவு...

சூறைக்காற்று சுழற்றி எறிந்த கூரைகள் தொலைத்த சுவர்களில் வழியும் துயரின் மேல் இருள் தெளிக்கிறது இரவு...

இரவு...

பேய்க்காற்றில் வீழும் பெருமரமென விழுந்த இருளில் தூசிப்புகையென மேலெழுகிறது இரவு...

கனவுகள்...

உறக்கத்தில் கனவுகள் வருமெனக் காத்திருந்தேன் உறக்கமே கனவாகுமென உணராமல்....

இரவு...

கருப்பு நிறமெடுத்து இருட்டுச்சாயம் பூசிய பரந்த வானின்கீழ் பரவும் மேகங்கள் நிலம் நனையத் தெளிக்கும் நீரால் குளிரும் காற்றில் சிலிர்க்கிறது இரவு...

தெரிந்தே தான்...

அவர்கள் ஏமாற்றுகிறார்கள்... தெரிந்தே தான் நானும் ஏமாறுகிறேன்... ஏனெனில் அவர்கள் என் இதயத்தில் இருக்கின்றனர் நான் அவர்கள் கண்களில் நிற்கின்றேன்...

இரவு..

நிலம் தேடி ஓடிவரும் நெடுநீரின் அலைகளென இருள் தேடி பாய்கிறது இரவு...

இரவு..

முரட்டு மழை சுமக்கும் மிரட்டும் மேகங்களை விரட்டும் காற்றில் சுழல்கிறது இரவு...

உரைகல்...

தகரமா தங்கமாவென்று தந்தவரை வைத்தே தரம் பிரிக்கிறது இன்றைய உரைகல்...

இரவு...

நீந்தும் நினைவுகளை உள்ளிழுக்கும் உறக்கச்சுழல்களிலிருந்து மேலெழும் கனவுக் குமிழிகளைக் கடத்திக்கொண்டு நதியென ஓடுகிறது இரவு...

நான்...

நானில்லா நானாக நானாகும்வரை துயர் சுமப்பேன் நான்...

இரவு...

புறச்சூடு தணிக்க பொழுதெடுத்த இருள்விசிறியின் வீச்சில் அகச்சூடு தணியுமென்று ஆசையாய் இருந்த இதயத்தின் மேல் ஏமாற்றம் தெளிக்கிறது இரவு...

இரவு...

ஒளி விலகிப்போனதால் மூர்ச்சையான பகலின் இருண்ட முகத்தில் நீர் தெளிக்க நிலவுக்குடுவை எடுத்து வருகிறது இரவு...

இரவு...

இடி விழுந்த மரமென கருகிய இதயம் சூழும் துயர் நெருப்பின் மேல் விரல்கள் நீட்டுகிறது இரவு...

இரவு...

தேர் உலாவரும் தெருவெங்கும் வண்ணக்கோலங்கள் வழி நிறைப்பதைப்போல நிலவு உலவ விண்மீன்களை விண்ணில் நிறைக்கிறது இரவு...

இரவு..

நிலம் அகழும் புழுக்கள் நெகிழ்த்திய மண்ணில் பரவும் வேர்களென இருள் அகழ்ந்த வானில் பரவும் முகில்கள் தாண்டி முளைக்கிறது இரவு...

இரவு...

அறை நிரப்பும் அகில் புகையென வான் நிரப்பிய முகில் கூட்டங்கள் முத்துக்கள் சிதற எடுத்துக் கோர்க்கிறது இரவு...

மழை...

அடர் இரவின் கனத்த மௌனத்தின் மேல் சத்தமாய் பெய்கிறது மழை...

இரவு...

உடைந்த கப்பலில் உட்புகும் நீரென கடகடவென நிரம்பும் இருளில் மூழ்குகிறது இரவு...

இரவு...

மழையில் நனைந்த பனையெனக் கருத்த இருளை நிலவால் கிழிக்கிறது இரவு...

இரவு...

நெடுஞ்சாலையின் ஓரங்களில் நிற்கும் மரங்களைப் பின்தள்ளி முன்நகரும் பேருந்தென கனவுகளைக் கடந்து இருளின்மேல் நகர்கிறது இரவு...

இரவு...

இருளுக்குள் வழிதவறி எங்கேயோ நிற்கிறது எனக்கான உறக்கம்...

காதல்...

ஓடு சுமக்கும் ஆமையாகிறேன் உன் நினைவுகளை சுமக்கும்போது...

இரவு...

நிலவில்லா வானில் நின்று ஒளிரும் விண்மீன்களின் வெளிச்சத்தில் ஒளிந்து விளையாடும் கனவுகளைத் தேடுகிறது இரவு...

இரவு...

பஞ்சுப் பொம்மையை நெஞ்சோடு அணைத்து உறங்கும் சிறுபிள்ளையென இருள் அணைத்து உறங்குகிறது இரவு...

இரவு...

கோடிப் பூக்கள் தேடிச் சூடிய கூந்தலில் மணக்கிறது இரவு...

கோப்பை...

மதுதான் நிரம்பியிருக்கிறது தள்ளாடவேயில்லை கோப்பை...

இரவு...

பூக்களை மிதிக்காமல் புன்னகைத்து தாண்டும் சிறுமியென கனவுகளின் மீது கால்கள் படாமல் நடக்கிறது இரவு...

இரவு...

பூக்களை வருடிச் செல்லும் தென்றலில் நிறையும் பூவின் மணமென கனவுகளால் நிறைகிறது நினைவுகளை வருடும் இரவு...

இரவு...

இருளுக்கு வெளியேயும் இரவாகவே இருக்கையில் இருளாகவே இருக்கும் இரவில் புலப்படுவதேயில்லை அச்சம்...

இரவு...

மேற்கில் விழுந்தவன் கிழக்கில் எழுவதற்குள் எல்லாத் திசைகளிலும் இருள் விரித்து கனவுகள் நடக்க உறக்கம் சமைக்கிறது இரவு...

இரவு...

புழுதியே போர்வையான காய்ந்த நிலத்தில் பெருமழையின் முதல் துளிகள் முத்தமிடுகையில் மேலெழும் மணமென நெடுவானத்தை தொடும் இருளில் எழுகிறது இரவு...

காதல்...

பன்னீர்பூவில் வழியும் பனித்துளியில் கரையும் சூரியனாய் உன் விரலில் வழியும் ஒற்றை நீர்த்துளியில் கரைக்கிறேன் நான்... நிறைகிறது காதல்...

இரவு...

பஞ்சுப் பொதியில் விழுந்த நெருப்பென பரந்த வானில் படபடவெனப் பரவும் பாரிய இருளை நிலவால் அணைக்கிறது இரவு...

காதல்...

துளித்துளியாய் பார்வைகள்... சலசலக்கும் சிறு பேச்சுக்கள்... ஆர்ப்பரிக்கும் அரட்டைகள்... அமைதியான நீண்ட நடை விரல்கள் கோர்த்து... முடிவில் கடலாகிறது காதல்...

இரவு...

ஓடும் முயலைத் துரத்தும் வேட்டைநாயின் கால்களென மூடிய இமைகளை விரைந்து தாண்டுகிறது இரவு...

இரவு...

திறக்கப்படாத புத்தகத்தின் படிக்கப்படாத பக்கங்களென அவிழாத கனவுகளின் ரகசியம் காக்கிறது இரவு...

காதல்...

நீ உதிர்த்துச் செல்லும் புன்னகைகளை ஒவ்வொன்றாக சேகரிக்கிறேன்... மனப்பெட்டகம் நிறைக்கிறது காதல்...

காதல்...

நீ தொலைவில் இருக்கும்போது தூரங்களை நிரப்புவதால் அதிகமாகிறது காதல்...

இரவு...

வெப்பம் உமிழும் நினைவுகளின் கதகதப்பில் பெருகும் கனவுகளில் அமிழ்கிறது இரவு...

இரவு...

சாயுங்கால ஞாயிறு வீசிச்சென்ற வண்ணங்களின்மேல் கரிபூச வரும் இருளின்மீது நிலவெடுத்து எறிகிறது இரவு...

காதல்...

வேராக நீ நீராக நான் மலர்கிறது காதல்...

இரவு...

நீரோடை தாண்டும் மானென இமைகள் அயர்கையில் நேர ஓடை தாண்டுகிறது இரவு...

காதல்...

இமைக்கும் விழிக்குமிடையே இடைவெளியின்றி பரவிய நீர்ப்படலமென எனக்கும் உனக்குமிடையே படர்கிறது காதல்...

இரவு...

பகலின் அழுத்தம் அகழ்ந்தெடுத்த பொழுதை இருள் பட்டைதீட்ட மிளிர்கிறது இரவு...

மெழுகுவர்த்திகள்...

எரிவதனால் சுடர்மீது வெறுப்புமில்லை... கரைவதனால் குறைவதாக நினைப்புமில்லை... முடியும்வரை எரியும் மெழுகுவர்த்திகள்...

இரவு...

காலப் பெருங்காற்றில் நேர மணற்குன்றில் சரசரவென சரியும் ஒளி மணல்துகள்களின் இடம் நிரப்ப இருளால் ஈடுசெய்யும் வானப் பாலையில் நிறைகிறது இரவு...

இரவு...

சாரல் மெல்ல தூறலாகி சடசடக்கும் மழையாவதுபோல மாலை அந்தியாகி மளமளவெனப் பொழியும் இருளில் ஈரமாகிறது இரவு...

இரவு...

நிலம் நனைக்க விழுந்த துளிகள் நிலம் நிறைக்க ஓடும் வெள்ளத்தில் மிதக்கிறது இரவு...

இரவு...

உறக்கத்தின் மேல் நடக்கும் இரவின் அழுத்தத்தில் வலி உணரும் இமைகளுக்குள் அழுகின்றன கனவுகள்...

இரவு...

இமைக்கதவுகளுக்குள் சிறைப்பட்ட நினைவுகளை இருள்வெளியில் கனவுகளாக சிறகடிக்கவிடுகிறது இரவு...

இரவு...

கடலும் வானும் கருநிறம் பூசிக்கொள்ள நிலமும் நினைவுகளும் ஒளி தேடி தவிக்க நினைவுகளுக்கு கனவுகள் கொடுத்துவிட்டு நிலத்தை மட்டும் இருளில் நிறுத்துகிறது இரவு...

இரவு...

திசைகளெங்கும் விரிந்த வானத்தை சிறகால் அளக்கும் சிறு குருவியென நினைவுகளை கனவால் அளக்கிறது இரவு...

இரவு...

இருட்காற்றில் இறக்கை விரிக்கும் உறக்கப்பறவை உதிர்க்கும் கனவு இறகினை கையிலேந்துகிறது இரவு...

இரவு...

விழிகளில் உதிரும் கனவுகள் இமைகள் நிறைத்து வழிகையில் கதைகள் பேசி கடக்கிறது இரவு...

தகப்பன் அன்பு...

நீர் சுமந்து போகும்போதும் நிழல் விரித்துச் செல்லும் மேகம்போல் கண்டுகொள்ளப்படாமலே கடக்கப்படுகிறது தகப்பன் அன்பு...

இரவு...

பெருநதியின் நீர்ச்சுழலென நினைவுகளை உள்ளிழுக்கும் உறக்கத்தில் நீந்தி கரை நெருங்கும் கனவுகளுக்கு கை நீட்டுகிறது இரவு...

இரவு...

இமைகள் மூடியபின் இருளுக்குள் விழுந்த விழிகளின்மேல் ஒளி தடவும் கனவுகள் வலி தடவிச்செல்ல வார்தைகளின்றி மவுனிக்கிறது இரவு...

இரவு...

உடைந்த நிலாத்துண்டுகள் விரவிக்கிடக்கும் வானிலிருந்து வலிகள் சுமந்து வழியும் ஒளியை துயருடன் சுமக்கிறது இரவு...

இரவு...

நகரும் பெருந்தேரின் கீழ் நசுங்கும் சிறுகல்லென அலுப்புகளை அழுத்தி இமைகளின்மேல் உருள்கிறது இரவு...

இரவு...

மணல்வெளியில் ஊர்ந்து செல்லும் பாம்பென நெளியும் நினைவுகளில் பகல் கழிந்தபின் கனவுத் தடங்களை காற்றால் வருடுகிறது இரவு...

இரவு...

கடலென விரிந்த இருளில் படகென மிதக்கும் நிலவில் கனவுகள் பயணிக்க துடுப்பசைக்கிறது இரவு...

இரவு...

குழந்தை சுமந்து திருவிழாவில் நடக்கும் தகப்பனென இருள் சுமந்து உடுக்களிடையே நடக்கிறது இரவு...

இரவு...

நொறுங்கிய நினைவுகளின் சிதறல்களின் மீது நடக்கும் கனவுகளின் கால்களில் கசியும் ஈரம் இமைகள் நனைக்க வெளியேறும் உறக்கத்தின் விரல் பிடிக்கிறது இரவு...

இரவு...

இங்கே சில பகல்களே கருத்துக் கிடக்கையில் இருளாகவே இருந்துவிட்டு போகட்டும் இரவு...

புலன்...

மேலைக் காற்றில் மேலெழும் தூசுகள் மெல்ல படிந்தபின் தெளிவாகிறது புலன்...

காலம்...

காலம் கடத்திச் செல்கிறது... நினைவுகளை உதிர்த்துவிட்டு நிஜங்களை... காலம் கடத்தித்தான் செல்கிறது... உதிர்ந்த நினைவுகளின் வாசம் சுழன்றுகொண்டே இருக்கிறது நாசிக்குள்...

இரவு...

தூறல் தழுவிய தூய காற்று தேறலின் மயக்கத்தை தேகத்தில் போர்த்த உறக்கத்தில் மிதக்கிறது இரவு...

இரவு...

விழிகளிலிருந்து நழுவும் உறக்கத்தை இருள் விரல்கள் இழுத்துப் பிடிக்க இமைகளுக்குள் தள்ளும் கனவுகளைத் தாங்குகிறது இரவு...

மவுனம்...

நமக்கு வேண்டியவர்களுக்கு நாம் வேண்டாதபோது உணர்வுகளை நிரப்புகிறது மவுனம்...

இரவு...

அலையாடும் நெடுநீரில் முழுநிலவு முகம் பார்க்க அழகாகிறது இரவு...

இரவு...

காலப்பெருமரத்தின் நேர நெடுங்கிளைகள் இருள்பூக்கள் சொரிய நனைந்து கருக்கிறது இரவு...

இரவு...

விழிகளற்றவனின் கனவென வழியும் இருளில் நிலவெடுத்து ஒளி வரைகிறது இரவு...

இரவு...

சிறு தூறலுக்கு சிலிர்க்கும் மயிலென விண்மீன்கள் தெறிக்க இருள்தோகை விரிக்கிறது இரவு...

இரவு...

விரலிடை ஒழுகும் நீரென இருளிடை ஒழுகிடும் இரவு...

இரவு...

அனலில் விழுந்த மெழுகென வெயிலில் விழுந்த பகல் உருக இருளெடுத்து நிரப்பிச் செல்கிறது இரவு...

பிள்ளைப் பருவங்களில்...

பிள்ளைப் பருவங்களில் மணலில் பழகிய நம் பாதங்கள் முட்களைப் பார்த்ததில்லை... முட்களை முத்தமிட்ட பாதங்களுக்குரிய முகத்தில் வலிகளின் குறியில்லை... ஏனெனில் தோள்களில் நாமிருந்தோம்...

இரவு...

கடல் பொங்க மூழ்கும் நிலம்போல இருள் பொங்க மூழ்கிடும் பகலின்மேல் அலையாடிடும் இரவு...

சே

சே யாரென்று தெரியாதோர்க்கு சில வரிகள்... துயருற்ற மனிதரெல்லாம் தோழரென்றே துயர்துடைக்க சூளுரைத்த தோழன் அவன்... எளிய மனிதரின் கால்களை இறுகப் பிணைத்த அடிமை விலங்குகளின் மேல் இடியென இறங்கிய சம்மட்டி அவன்... வணிகமே உலகம் உலகமே வணிகமென்ற மாயக் கோட்பாட்டை மிதித்து உடைத்து மனிதமே உலகம் உலகமே மனிதமென்று உரக்கச் சொல்லிய உத்தமன் அவன்...

இரவு...

கருத்த வானத்தின் கண்களில் படாமல் தவிர்த்த நிலவைத்தேடி தவித்து நிற்கிறது இரவு...

இரவு...

இருளலை எழுந்து வானின் கரைதொட வளைக்குள் புகுந்த ஒளியைத் தேடித் திரிகிறது இரவு...

இரவு...

துளித்துளியாய் இருள் பெய்ய நனைகிறது வானம்... நடுங்குகிறது இரவு...

இரவு...

வறண்ட விழிகளின்மேல் இருண்ட வானம் வண்ணம் பூசுகையில் ஒளிரும் கனவுகளால் வெளிச்சமாகிறது இரவு...

இரவு...

பசித்த வயிரென இரையும் வண்டின் சத்தத்தில் கிழியும் அமைதியை இருளெடுத்து தைக்கிறது இரவு...

இரவு...

ஒளி ஒளிந்துகொண்ட பொழுதில் உதிராத பூக்கள் உதிருமென்று மேகத் தட்டேந்தி காற்று நடக்கையில் கடந்து செல்கிறது இரவு...

இரவு...

ஒளி மேல் உருளும் இருள் மேல் உலவும் கனவுகளை இமைகளுக்குள் இழுத்து கட்டுகிறது இரவு...

இரவு...

வெறும் இரவு பெரும் இரவாக நீள்கிறது சிறு குழந்தைக்கு காய்ச்சலெனில்...

மூர்க்கம் வழியும் மூளைகள்...

தீ எரியும் தெருவெங்கும் சிதறிக்கிடக்கும் உடல்களை எள்ளல் வழியும் விமர்சனத்துடன் கடந்து செல்லும் கால்களில் மிதிபடும் மனிதத்தின் வலியை உணர மறுக்கின்றன மூர்க்கம் வழியும் மூளைகள்...

நான் நானாகவே...

நான் நானாகவே இருக்கிறேன் நீ நீயாகவே இருந்துகொள்... நாமாக இருக்க இயலாத சூழலில்...

ஐம்பூதங்கள்

ஐம்பூதங்களில் மூன்றில் உங்களுக்கான உரிமைகள் உருவப்பட்டதை உணரவேயில்லை நீங்கள்... நிலம் எனதென்று நீங்கள் சொன்னால் நெஞ்சு கிழிபடும்... நீர் எனெதென்று நீங்கள் சொன்னால் நெற்றி துளைபடும்... காற்று எனெதென்று நீங்கள் சொன்னால் நுரையீரல்கள் சிதைபடும்... எனவே அடிவயிற்றில் நெருப்பெரிய ஆகாயம் பார்த்து அமர்ந்திருங்கள்... உயிர் மட்டுமேனும் உங்களுடையதாகவே இருக்கும்...

இரவு...

இருவிழிகளை நனைக்கும் சிறுதுளிகள் சுமக்கும் வலிகளின் வழியே முனகி நகர்கிறது இரவு...

இரவு...

கண்ணீரின் இளஞ்சூட்டை கன்னம் உணரும்முன் துடைக்கும் விரல்கள் தொலைவில் இருக்கையில் உப்பாகிப் போகிறது இரவு...

இரவு...

துயரங்கள் சுமக்கும் இதயத்திலிருந்து இமைகளுக்குள் நிரம்பும் இருளைக்காட்டிலும் வெளிச்சமாகவே இருக்கிறது இரவு....

இரவு...

விண்மீன்கள் விசிறும் வெளிச்ச சிதறல்களை வெயிலென நினைத்து மேக முக்காடு போட்டு நடக்கிறது இருளில் செதுக்கிய இரவு...

இரவு...

உறக்கமில்லா இரவுகளின் நீட்சியில் குறுகிப்போகும் கனவுகளின் வழியே நழுவுகிறது இருள்...

இரவு...

கனவுகளின் வெளியில் கரைந்திடும் உறக்கத்தை இருளில் வடிகட்டி நினைவுகளைத் தேடுகிறது இரவு...

இரவு...

மலைமடியில் தவழும் மேகங்களின் கீழ் வீசும் காற்று பேசும் மொழியில் மெல்லக் குளிர்கிறது இரவு...

இரவு...

நடந்து செல்லும் இருளின் முகத்தில் கடந்து செல்லும் காற்றின் வெம்மை அறைந்து செல்கையில் கருத்துப் போகிறது இரவு...

இரவு...

வெள்ளை நெருப்பெடுத்து வீசி எறிந்து சுட்ட சூரியன் தூங்கிப்போன பின்னும் காற்றில் குளிர்தேடி நிலவில் காய்கிறது இரவு...

இரவு..

உடைந்த இதயத்தின் ஊமைஅழுகை போல உணரப்படாமலே போகிறது வியர்வைப் பிசுக்கில் வழுக்கும் இரவின் அமைதி...

இரவு...

கதிரவனோடு சேர்ந்து காற்றும் உறங்கிப்போக வெப்பத்தில் நனைந்து வியர்வையில் விழுகிறது இரவு....

இரவு...

சிறுஇலைகள் அசைக்கக்கூட திறனற்ற மென்காற்றை சூடாக்கி துயரேற்றுகிறது கருப்பு வெயிலில் காய்ந்து தகிக்கும் இரவு...

பகல்...

அனலின்மேல் நடக்கும் பகலினுள் உலவாமல் ஒளிந்திருக்கும் தென்றலின் முகவரி தேடி அலையும்போது வியர்வையில் நனைகிறது பொழுது...

இரவு...

விழிகளிரண்டிலும் வழியும் கனவுகள் கண்ணீரின் தடங்களை கழுவிச்செல்ல இருளாய் புன்னகைக்கிறது இரவு...

இரவு...

சூடான காற்றில் சுவாசிக்கத் திணறி இருள் போர்வையை எடுத்தெறிய இயலாமல் வெப்பத்தில் புழுங்குகிறது இரவு...

இரவு...

வாழ்ந்துகெட்ட வீட்டின் கொல்லையில் வளர்ந்த தேக்குமரத்தின் சருகுகளை சத்தமின்றிக் கடக்கிறது இருளும் இரவும்...

இரவு...

சேறு தாண்டும் சிறுமியென தயங்கி வீசும் மென்காற்று சுமந்து செல்லும் வேப்பம்பூக்களின் மணத்தைத் தொடர்கிறது இளவேனிலில் நகரும் இரவு...

இரவு...

வெளியில் அடித்த வெயில் விழிகளுக்குள் காய இருளெடுத்து இமை நீவுகிறது இரவு...

இரவு...

நொடிகளின் மேல் நடந்த காலம் மணிகளின் மேல் நகர்கையில் கனவுகளில் கரைகிறது இரவு...

பகலிலும் கருப்பு...

கொடும் கோடையில் காய்ந்த மூங்கில்கள் காதலோடு உரச கனன்ற பொறியில் காடு பற்றியது போல நெருப்பென பரவியது கருப்பு பகலிலும்...

நிரம்பி வழிகிறது...

துருப்பிடித்த கலப்பையை தூர வைத்துவிட்டு நீர்கசியும் விழி்களோடும் நெஞ்சறுக்கும் துயரோடும் நின்று பார்க்கையில் நீர் நின்ற கழனியெங்கும் நிரம்பி வழிகிறது எரியெண்ணெய்...

கதை பேசி...

கதை பேசிக்கொண்டே களித்திருப்போம்... கைப்பிடி அரிசிக்கு கழுத்தைப் பிடிக்கும் காலமொன்று வரும்... அதுவரை கதை பேசிக்கொண்டே களித்திருப்போம்... பி.கு: காவிரி

ஒவ்வொரு நாளும்...

உப்புநீரில் நெல் விளையுமெனில் கடல்நீர் கூட தேவையில்லை... எங்கள் கண்ணீரே போதும்... கடைமடை விவசாயி கலங்கிச் சொல்கிறான் "மரணம் ஒருநாள் கொல்லும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கொல்லும்..."

இரவு...

நினைவலைகளின் மேல் எழும் கனவு நுரைகளை இருள் கரையில் குவித்து வைக்கிறது இரவு...

இரவு...

இருளில் நகரும் யானைக் கூட்டமென கனவில் நகர்கிறது இரவு...

இரவு...

நீள்நிலத்தை நெடுங்கடல் தின்றபின்னும் மாளாத தமிழ்குடியை மாய்த்திடுமோ மாயவலை... இருளுக்கு வெளியே எப்போதும் நீள்வதில்லை இரவு...

இரவு...

அடுப்பென்று நினைத்து உருவி எறிய விறகு தேடுகிறான்... கரும்புள்ளிகள் கண்டு இருளென்றே எண்ணுகிறான்... சூரியனில் ஏதடா இரவு...

இரவு...

நீல வானம் நிறை இருளால் நிறம்மாறிப் போனது நீதியைப் போலவே... விடியக் காத்திருக்கிறது இனமும்... இரவும்....

சாத்தானைக் காணவில்லை...

குழந்தைக்கு தேவதை கதை சொல்லி முடித்தபின் மனதிற்குள் உட்கார்ந்திருந்த சாத்தானைக் காணவில்லை....

இரவு...

இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே நெருப்பெரிய கருகும் கனவுகளின் புகைமூட்டத்தின் வழியே என்னைக் கடக்கிறது இரவு...

ஓடுகிறீர்கள்...

ஓடுகிறீர்கள்... வேகமாகவே ஓடுகிறீர்கள்... முன்னால் நகரும் இலக்கு நோக்கி மூச்சிரைக்க நாவறள நன்றாகவே ஓடுகிறீர்கள்... அள்ளியெடுத்து அணைத்த கரங்கள் நடுங்குகையில் ஆதரவாய்ப் பற்ற நேரமின்றி நீண்ட ஓட்டம் ஓடுகிறீர்கள்... தத்தித் தவழ்ந்து பற்றி எழுந்து பழகும் நடையில் விரல் பிடிக்க நீளும் கரங்களை நின்று பிடிக்க நேரமின்றி ஓடுகிறீர்கள்... உடலையும் உள்ளத்தையும் பகிர்ந்து கொண்ட உறவுக்கு வலிக்கையில் மருந்திட நேரமின்றி மரத்துப் போய் ஓடுகிறீர்கள்... சுற்றி இருந்த சொந்தங்கள் துயர் தணித்த நெஞ்சங்கள் சோகத்தில் துவழ்கையில் ஆறுதல் சொல்ல நேரமின்றி அதிவேகமாய் ஓடுகிறீர்கள்... இதயத்தோடு எதையும் பகிர்ந்து இனிமை சேர்த்த நட்புகள் உதிர நாலு கால் பாய்ச்சலில் நன்றாகவே ஓடுகிறீர்கள்... ஓடுங்கள்... இன்னும் வேகமாக ஓடுங்கள்... இலக்கென்று நீங்கள் நினைத்தை எட்டிப் பிடிக்கும் வரை ஓடுங்கள்... துரத்திய இலக்கை தொட்டுப் பிடித்த பின் வெற்றிக் களிப்புடன் சுற்றிலும் பாருங்கள்.. வெடிக்கும் மகிழ்ச்சியை வெறுமையுடன் பங்கிட்டுக் கொண்டாடி மீண்டும் ஒடத் தொடங்குங்கள்...

இரவு...

இருவிழிகளுக்குள் இருள் நிரப்பி இமைக்கதவுகள் தாழிட்டு உறக்கத்தை காவல் வைத்து உலா போகிறது இரவு...

இரவு...

இமையிதழ்கள் கவிழ கனவிதழ்கள் அவிழ உறக்கத்தின் ஊடாக இருளைக் கடக்கிறது இரவு...

இரவு...

குளிருக்கும் கோடைக்கும் இடையே இலைகள் உதிர்க்கும் வேப்பமரமென கனவுகள் உதிர்க்கிறது இரவு...

இரவு...

ஈரத்தில் கால் நனைத்து இல்லமெல்லாம் தடம் பதிக்கும் சிறு பிள்ளையென இருளில் கால் நனைத்து எட்டுத் திசையிலும் தடம் பதிக்கிறது இரவு...

இரவு...

அன்னை மடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையென இருளின் மடியில் உட்கார்ந்து முறுவலிக்கும் இரவு...

இரவு...

கொடும் வெயிலில் கடும் பசியில் கால்கள் துவள நடப்பவனின் கண்களென மெல்ல இருள்கிறது இரவு...

இரவு...

ஆழியில் விழுந்த துளி ஆழியாக ஆனதுபோல இருளில் விழுந்த பின் இருளாகவே ஆனது இரவு...

இரவு...

வேரினை நனைத்தபடி ஓடுகின்ற நீரினை சலனமின்றி பார்க்கும் மரமென கடந்து செல்லும் காலத்தை இருளுக்குள் பார்க்கிறது இரவு...

இரவு...

அனலில் உருகும் மெழுகென இருளில் உருகும் நினைவுகளின் மேலாடும் கனவுச்சுடரின் ஒளியில் உறக்கத்தைக் கடக்கிறது இரவு...

இரவு...

துயரில் மூழ்கி மூச்சுத்திணறும் மனதிலிருந்து மேலேறும் குமிழிகள் பட்டென்று உடைகையில் உறக்கம் கலைக்கிறது இரவு...

இரவு...

நெடுமரத்தின் சிறுஇலைகள் காற்றோடு கதைக்க மௌனக்குளத்தில் கல்லெறிகிறது இரவு...

இரவு...

விழிகளிலிருந்து நழுவி இருளுக்குள் விழுந்த உறக்கத்தை எட்டுத்திசைகளிலும் தேடிச் செல்கிறது இரவு...

காட்டுமிராண்டி

இங்கே காடு காத்தவன் காட்டுமிராண்டி. காடழித்தவன் பேரரசன்... காடு காத்தவனுக்கு விளைபொருளே கடவுள்... பேரரசின் பெருங்குடிகளுக்கோ கடவுளே விலைபொருள்தான்(எழுத்துப் பிழை இல்லை)

இரவு...

சூரியன் சுமந்த பகல் தூரத்தில் விழுந்துவிட இருட்குதிரை ஏறி வருகிறது இரவு...

இரவு...

சுடர்விடும் கதிரின் ஒளி ஒருபாதி நனைக்க இருளெடுத்து மறுபாதி மூடுகிறது இரவு...

இரவு...

ஒளிநதி ஓடிய பகலின் கரையில் இருள் வளர்க்கிறது இரவு...

இன்றில்லை...

இமைகள் மூடித் திறக்கும் முன் கழிந்து போயின இரண்டு ஆண்டுகள்... விதையாக நான் விழுந்தபோது எனைத் தாங்கிய நிலம் இன்றில்லை... வேர்ப்பிடித்து நான் வளர்ந்தபோது எனை நனைத்த நீர் இன்றில்லை... இலைகளோடு நான் இரையாக நின்றபோது எனைக் காத்த நெருப்பு இன்றில்லை... கிளைத்து நான் செழித்தபோது எனை வருடிய காற்று இன்றில்லை... கனிசெழிக்க நான் உயர்ந்தபோது எனை நோக்கிய வான் இன்றில்லை... என் ஐம்புலன்களும் தேடும் ஐம்பூதங்கள் என்று வரும்...? #தந்தைக்கு...

இரவு...

மூடிய இமைகளுக்குள் முகிழ்க்கும் காட்சிகளின் இடையே நடக்கும் நினைவுகளின் கைபிடித்து உலா போகிறது நிலா இல்லாத இரவு...

இரவு...

உறக்கத்தின் மேல் விதைத்த நினைவுகளில் முளைத்த கனவுகளுக்கு இருள் பாய்ச்சுகிறது இரவு...

இரவு...

தேனுண்டு பறக்க இறக்கை விரிக்கும் வண்ணத்துப்பூச்சியென துளித்துளியாய் இருள் பருகி கனவு இறக்கைகள் விரித்துப் பறக்கிறது இரவு...

இரவு...

மென்பனி துகிலெடுத்து மேலெல்லாம் போர்த்தி நிலமகள் துயில்கொள்ள இருள்பாய் விரிக்கிறது இரவு...

இரவு...

மேகப்பூக்களின் தூறல் புன்னகைகளை இருள்மணம் கமழ எடுத்து வருகிறது இரவு...

நதியாகவே...

நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது... பெருக்கெடும்போது பெருகி வற்றும்போது அருகிப்போகும் மீனுக்கும் பாயும்போது பக்கத்தில் வந்து காயும்போது எட்டிச்செல்லும் மானுக்கும் ஒரே தண்ணீரோடு... நான் நதியாகவே இருந்துகொள்கிறேன் மீனுக்கும்... மானுக்கும்...

இரவு...

இமைகளின் மேல் சுமைகளின் கனம்... இதயத்தினுள் துயர்களின் ரணம்... சுமைகள் நீக்கி உறக்க மருந்து சுமந்து வருமா இருளில் விழிக்கும் இரவு...

இரவு...

அழுத்தும் சுமைகளின் பாரம் தாங்காமல் வளையும் மனம் ஒடியும் முன்னரேனும் விடியுமாவென வினவி நிற்கிறது உள்ளும் புறமும் இரவு...

இரவு...

பனியில் நனைந்த தரையில் பாதம் பதிக்கும் நிலவொளியின் தடங்கள் தொடர்கிறது இரவு...

இரவு...

நினைவுக் கூண்டுகள் கதவு திறந்து கனவுகள் சிறகடிக்க விண்ணில் பறக்கிறது இரவு...

இரவு...

நடந்த நினைவுகள் இறக்கைகள் விரிக்க வானில் வழி சமைக்கிறது இரவு...

இரவு...

நினைவுகள் மொட்டவிழ கனவுகள் மலர உறக்கத்தில் மணக்கிறது இரவு...

இரவு...

நெடுந்தூரம் நடந்தபின் நீர்தேடும் யானைபோல வெளிச்சம் தேடி விழிகளை விரிக்கிறது இரவு...

இரவு...

நினைவுத் திமில்களை உறக்கம் பிடிக்க திமிறி ஓடும் கனவுகளின் தடதடப்பில் அதிர்ந்து அடங்குகிறது இரவு...

இரவு...

நினைவுகளைத் துரத்தும் கனவுகளின் கால் தடங்களை இருளால் அழிக்கிறது இரவு...

இரவு

துரோகத்தின் கரங்கள் தோண்டிய குழியை கைநிறைய அன்பள்ளி நிரப்ப விழைகையில் எள்ளியபடி என்னைக் கடக்கிறது இரவு...

இரவு...

நினைவுகளுக்கும் கனவுகளுக்குமான இடைவெளியை உறக்கத்தால் நிரப்பி இருளால் மூடுகிறது இரவு...

இரவு...

உறங்கும் மரங்களை வருடும் பனியில் நடுங்கும் பொழுதை இருளோடு இணைந்து கடக்கிறது இரவு...

இரவு...

கூடு தொலைத்த பறவையென இருள்வெளியில் திரியும் நினைவுகளுக்கு குளிரால் கூடுகட்டுகிறது இரவு...

மனம் வெட்டுபவர்கள்

மரம் வெட்டுபவர்கள் உணர்வதேயில்லை மரத்தின் வலியை... மனம் வெட்டுபவர்களும் கூட...

இரவு...

சோகங்கள் சுமக்கும் மனதின் பாரங்கள் இறக்கி வைத்து உறக்கம் போர்த்திவிட்டு குளிரில் நடக்கிறது இரவு...

இரவு...

விழிகளுக்குள் நினைவுகளாகவும் விழிகளுக்கு வெளியே கனவுகளாகவும் பிறழ்ந்த நிகழ்வுகளின்மேல் நின்று பார்க்கிறது இரவு...

இரவு...

கொதிக்கும் நினைவுகளின் தகிக்கும் வெப்பத்தில் ஆவியாகிறது குளிரில் பொதிந்த இரவு...

இரவு...

ஒளியின் மறைவிலிருந்து நீண்டு விரியும் இருளின் கரங்களில் கனவுகளைக் காவல் வைத்து உறங்குகிறது இரவு...

இரவு...

பகலவன் நடந்த பாதையின் தடங்களை இருள்கொண்டு துடைத்து குளிர் எழுதுகிறது இரவு...

இரவு...

ஆகாயக் கூரையில் அசைந்தாடும் இருள் தூளியில் ஒளி உறங்க விழிக்கிறது இரவு...

இரவு...

விடியல் வரை நீளும் பொழுதிற்கு குளிர் போர்த்தி நடுங்குகிறது இரவு...

இரவு

நெருப்பெரியும் நினைவுகள் சுமக்கும் நெஞ்செரியுமென்று நிலவிடம் குளிர் வாங்கி நிறைக்கிறது இரவு...

பட்டாம்பூச்சியின் இறக்கைகள்

விரல்களில் ஒட்டிய வண்ணங்களில் படபடக்கிறது பட்டாம்பூச்சியின் இறக்கைகள்... பூச்சி பறந்தபின்னும் கூட... #பிரியமுடன் பெரியப்பாவுக்காக...