Posts

Showing posts from June, 2021

நகர்த்துகின்றன இரவை...

என் இரவுகளில் உறக்கப் பலகையில் சோழி உருட்டுகின்றன உன் நினைவுகள்... கவிந்த சோழிகள் கனவுகளாகின்றன... நிமிர்ந்த சோழிகள் இழுத்து நகர்த்துகின்றன இரவை...

குளிரும் இரவில்...

என்னருகில் நீ செலவுசெய்த சிறுபொழுதின் கதகதப்பை எடுத்தள்ளி என்மேல் போர்த்துகிறேன் குளிரும் இரவில்...

உன் நினைவு...

கருப்புப் புரவியில் கடுகிப் பறக்கும் குதிரையோட்டியென இரவின் மீதேறி பயணிக்கின்றது உன் நினைவு...

சே...

 சே... அடர்இருள்மேல் விழுந்த ஒளி... சே... உறைந்து கிடந்த உலகின்மீது காலம் கவிழ்த்த நெருப்பு... சே... ஓரிடத்தில் விழும்போது வேறிடத்தில் எழுகின்ற மறைவே இல்லாத ஞாயிறு... அந்த ஞாயிறு துகள்கள் நினைவுகளில் நிற்கும்வரை நீர்த்துப்போகாது நீர்சூழ் உலகு...

இரவுகளெங்கும்...

 நெருஞ்சி முட்களின் மேல் நடக்கும் கால்கள் குருதித் தடங்களை விட்டுச்செல்வதுபோல உன் நினைவுகளில் நடக்கும் நெஞ்சின் தடங்கள் இரவுகளெங்கும்...

கடந்து போகுமென...

நிலாக்காலங்களும் நிரந்தரமில்லை... நெருப்பு நேரங்களும் நிரந்தரமில்லை... நிம்மதி தேடும் நெஞ்சத்திற்கு நிச்சயமாய் தெரியும் இதுவும் கடந்து போகுமென...

வெறுமையாக்குகிறாய்...

எனக்கும் உனக்குமிடையே நினைவுகளை நிரப்புகிறாய்... என் இமைகளுக்கும் விழிகளுக்குமிடையே கனவுகளை நிரப்புகிறாய்... உறக்கத்தின் உயிரைமட்டுமேன் வெறுமையாக்குகிறாய்...

பத்து தலைகள்..

பொய்மேல் பொய்யடுக்கி புனைந்து அம்புநுனியால் அறமறுத்து ஒற்றைத்தலை சாய்த்து நிமிர்ந்தவன் எதிரே நிற்கின்றன பத்து தலைகள்..

தரிசாகக் கிடக்கின்றன...

நீரில்லா நிலம்போல தரிசாகக் கிடக்கின்றன நீயில்லா பொழுதுகளும்...

தள்ளாடுகிறது காற்று...

கழை துளை நுழை காற்று கடக்கும்போது சுமந்து செல்லும் இசையில் தள்ளாடுகிறது காற்று...

நிறுத்துவதேயில்லை...

கடல் தாண்டும்வரை பறத்தலை நிறுத்தாத வலசைபோகும் பறவைகளைப்போல உன் நினைவுகளும்... இரவு கடக்கும்வரை கனவுகள் தெளிப்பதை நிறுத்துவதேயில்லை...

நிறம் மாறுவதில்லை...

ஒளியின் வண்ணங்களை எத்தனைமுறை மாற்றினாலும் நிழலொன்றும் நிறம் மாறுவதில்லை...

உன் நினைவுகள் தாங்கும் நெஞ்சம்...

உன் நிழல் தாங்கும் நிலம் வெப்பம் இழப்பதுபோல கவலைகள் தொலைக்கிறது உன் நினைவுகள் தாங்கும் நெஞ்சம்...

உன் நினைவுகளை விசிறிக்கொண்டு...

முதன்முறை கூடுதாண்ட படபடவென இறக்கைகள் அடிக்கும் பறவையாகிறேன் இரவு கடக்கும்போது உன் நினைவுகளை விசிறிக்கொண்டு...

கனத்துப் பொழியும்போது...

கருக்கொண்ட மேகம் கனத்துப் பொழியும்போது கடலென்றும் நிலமென்றும் பார்ப்பதில்லை...

இருந்தெதற்கு...

ஆழ்கடலின் அடித்தரையென கிடக்கிறது நெஞ்சம்... ஆழியென விரியும் உன் நினைவுகளின் அழுத்தம் தாங்கி... நீரில்லா கடல் இருந்தெதற்கு...

வெளிச்சமாகிறது அகம்...

இருள்திரை விலகியபின் விடியலின் கீற்றுகள் ஒளிபூசும் வானமென உன் முகம் கண்டபின் வெளிச்சமாகிறது அகம்...

உன் நினைவுகளை நீங்கும்போது...

கூட்டத்தைப் பிரிந்த எறும்பொன்று வாசம்தேடி பரிதவித்து அலைவதுபோலவே மாறிப்போகிறது மனது... உன் நினைவுகளை நீங்கும்போது...

உணராமலில்லை நான்...

நானும் நீயும் மட்டுமேயறிந்த அந்த கேள்விக்கு நீ இல்லையென்று விடையளித்தாய்... உன் உள்ளத்திற்கும் உதடுகளுக்குமிடையே உண்மை சிக்கிக்கிடப்பதை உணராமலில்லை நான்...

நெருப்பென்றும் கருப்பில்லை...

கருப்பான கரியில் எரியும் நெருப்பென்றும் கருப்பில்லை...

சிதறிய சில்லுகளிலும்...

இறுகிப்போன உன் நினைவுகளில் இரவுளியால் கனவுகள் செதுக்குகிறாய்... சிலையில் மட்டுமல்ல சிதறிய சில்லுகளிலும் கனவுகள்....

நான் நிரப்புகிறேன் கனவுகளால்...

நமக்கிடையேயான பொழுதுகளை நீ நிரப்புகிறாய் தயக்கங்களால்... நான் நிரப்புகிறேன் கனவுகளால்...

மிதக்கிறது நிலவு...

அமைதியாக நகரும் நதியில் மிதக்கிறது நிலவு நகராமல்...

நீ கரைகிறாய் என்னில்...

உனக்கும் எனக்குமிடையே இருந்த கனத்த மௌனம் ஒற்றை சொல்லில் கரைந்த கணத்தில் நான் கரைகிறேன் உன்னில்... நீ கரைகிறாய் என்னில்...

தலையும் நீ பூவும் நீ...

சுண்டிவிட்ட காசு போல சுழலும் நினைவுகள் இரவோ பகலோ இதயத்தில் விழும்போது தலையும் நீ பூவும் நீ...

எதைக்கொண்டு நிறுத்துவாய்...

உன் இருவிழிகளில் கசியும் நீரை ஒருவிரலால் துடைக்கிறாய் என்னைப் பார்த்தவுடன்... என் இதயத்தின் அழுகையை எதைக்கொண்டு நிறுத்துவாய்...

கனவுகளின் வீதியில்..

பெருந்தேரின் உருளும் சக்கரங்களென உன் நினைவுகள்... மெல்ல நகர்கிறது இரவு கனவுகளின் வீதியில்..

தெரிவதில்லை...

கூடுபிரிந்த பிறகும் இறக்கைகள் விரிக்கும்வரை பறக்க முடியுமென தெரிவதில்லை பட்டாம்பூச்சிகளுக்கு...

ஊசிகுத்துகின்றன உன் நினைவுகள்...

 சட்டென முகத்திலறையும் குளிர்தூறலென ஊசிகுத்துகின்றன உன் நினைவுகள்... குடை விரிக்கவில்லை நான்...

மீதிநிலவு நகைத்தது...

பிறைநிலவு அழகென்றேன்... மீதிநிலவு நகைத்தது...

ஏன் மாறிப்போனாய் நீ....

லேசான காற்றுக்கே பறக்கும் ஈசலின் இறக்கைகளென என்னை மாற்றிவிட்டு பெருங்காற்றாய் ஏன் மாறிப்போனாய் நீ....

குறையேதுமில்லா...

குறையேதுமில்லா வளந்தந்த உலகை குறையுயிராய் ஆக்கிவிட குறையே வாழ்வாகும் வாழ்வே குறையாகும்...

ரணமாக்குகிறாய்...

கத்திநுனியென கண்கள் தீட்டுகிறாய்... என் புத்திகிழித்து புகுந்துகொள்கிறாய்... நித்தமும் நெஞ்சறுத்து ரணமாக்குகிறாய் பிணமாக்காமல்...

கரைந்து போகின்றன...

திகட்டும்வரை பொழிந்தபின் கரைந்து போகின்றன மழைமேகங்கள்...

இணைக்கும் பாலமென...

பெருநதியின் இருகரைகளையும் இணைக்கும் பாலமென என் இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடையில் நீ... சுழித்துக்கொண்டு பாய்கின்றன உன் நினைவுகள்...

நீ மாயக்காரி...

நீ மாயக்காரி... இமைகளுக்குள் என்னைச் சுருட்டுகிறாய்... இதயத்திற்குள் என்னை உருட்டுகிறாய்... நீ மாயக்காரி...

குனிந்து பார்ப்பதில்லை...

சாயாமல் தாங்கிய வேர்களை நிமிர்ந்தபின் குனிந்து பார்ப்பதில்லை மரங்கள்...

எனக்குப் புரிவதேயில்லை...

 காலம் எப்படி உன் கைகளில் விளையாட்டு பொம்மையாகிறது... நொடிகளை யுகங்களாக இழுக்கிறாய்... யுகங்களை நொடிகளாக சுருக்குகிறாய்... இரவையும் பகலையும் இடமும் வலமும் சுழற்றுகிறாய்... எனக்குப் புரிவதேயில்லை...

வானமாகிப்போனது...

 சிறு புன்னகைக்குள் நீ என்னைச் சிறைவைத்த பிறகு கூண்டே வானமாகிப்போனது எனக்கு...

திசைகளுக்கு வெளியே...

 தீர்வு தேடச்சொல்லி தினமும் விரட்டுகின்றன சவால்கள்... திசைகளுக்கு வெளியே தேடச்சொல்கிறது வாழ்க்கை...