Posts

Showing posts from July, 2020

என்ன சொல்லிவிடமுடியும்...

பகலின் வெளிச்சத்தில் கண்களிரண்டையும் இறுக மூடிக்கொண்டு இருளெனப் பிதற்றுபவருக்கு இரவில் மட்டும் என்ன சொல்லிவிடமுடியும்...

இரவு...

நீ நினைவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறாய்... நான் கனவுகளின் ஒளியில் தேடுகிறேன்... ஓசைகளின்றி பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு...

என் தவறுதான்...

உண்மை ஒளிரும் பரிதியைப்போல என்றேன்... பகடிக்கு ஆளானேன்... என் தவறுதான் ஆந்தைகளிடம் சொன்னது...

இமைகளுக்குள் கசிக்கிறாய்...

பெருமலையின் சரிவுகளிடையே தேங்கிய நீர் கரும்பாறையில் கசிவதைப்போல என் எண்ணங்களில் தேங்கிய நீ இமைகளுக்குள் கசிக்கிறாய் கனவுகளாக...

அருகில் செல்லும்வரை தெரிவதில்லை...

ஒளியும் நிழலும் கோலமிடும் சாலையில் அருகில் செல்லும்வரை தெரிவதில்லை குழிகள்...

நீ விட்டுச்சென்ற புன்னகையுடன்...

ஓரிரு சொற்களுடன் நீ கடந்துவிட்டாய்... நான் நெடுநேரமாய் பேசிக்கொண்டிருக்கிறேன் நீ விட்டுச்சென்ற புன்னகையுடன்...

என் நண்பர்கள்...

திங்களில் பாதி வளர்ந்து திங்களில் மீதி தேய்ந்திடும் திங்களென ஒருவேளை நான் இருக்கக்கூடும்... ஆனாலும் என் நண்பர்கள் எப்போதும் வானமே...

உன்னை சுவாசித்தபடி...

ஆழிநீரின் அடர்பரப்பில் நீந்துகின்ற திமிங்கலமென கனவுகளுக்குள் நீந்துகின்றேன்... அவ்வப்போது மேலெழுந்து உன்னை சுவாசித்தபடி...

முயற்சிக்கிறது...

மஞ்சள் பூசிக்கொண்டது பகலிறுதி வானம்... மலராத மொட்டொன்று முயற்சிக்கிறது நிலவாக...

இரவிலென்ன செய்கின்றன...

நீ இல்லாத பொழுதுகளில் நீ விட்டுச்சென்ற இடத்தை இட்டுநிரப்ப உன் நினைவுகளே போதுமானது... இரவிலென்ன செய்கின்றன இந்தக் கனவுகள்...

விதைநெல்லை...

புழுங்கிய நெல்லின் வாசம் சுமக்கும் பழைய நெற்குதிரின் உடைந்த சில்லொன்றில் தேங்கிய மழைநீர் தேடிப்பார்க்கிறது விதைநெல்லை...

இடம் மாறுகின்றன இரவில்...

ஒரு குமிழிலிருந்து மறு குமிழுக்குள் விழுகின்ற மணற்துகள்களென உன் நினைவுகள் மனக்கடிகையில் பகல் நிரப்ப கனவுகளாக இடம் மாறுகின்றன இரவில்...

வாழ்க்கை...

வண்டி நிறைக்கும் பொதிகளென கவலைகள்... முனகி இழுக்கும் மாடாக நான்... மெல்ல உருள்கிறது வாழ்க்கை...

சிதறுகின்றன கனவுகள்...

மனம் வருடும் மயிலிறகாய் உன் நினைவுகள்... சிலிர்க்கும்போது சிதறுகின்றன கனவுகள்...

அலைகளில் உப்பில்லை...

நீ கரையில் நிற்கிறாய்... உன் கால்கள் தழுவியபின் கடல்திரும்பும் அலைகளில் உப்பில்லை...

கனவுகளையே...

உனக்கும் எனக்கும் இடையே திரையென விழுகிறது இரவு... கள்ளத்தனமாக திரைவிலக்கும் நினைவுகள் காண்பதெல்லாம் கனவுகளையே...

அவன் தமிழே கருவி...

அறம் சீறும்போது நடுவானின் பரிதி... அகம் உரைக்கும்போது பெருவானில் குருவி... தமிழெடுத்து நிற்கும்போது தடதடக்கும் அருவி... தடுமாறும்போது நான் நிற்க அவன் தமிழே கருவி... நா.மு க்காக

அனிச்சையாய்...

உன் விரல்களின் தொடுதலுக்கு ஏங்கும் என் விரல்கள் அனிச்சையாய் நீள்கின்றன தூறல்களுக்குள்...

கனவுகளுக்குள்ளும்...

ஆழியின் அடியாழத்தில் அழுத்தத்தையும் அடர்இருளையும் தாங்கி நிற்கும் தரையென இருக்கிறேன் உன் நினைவுகளுக்குள்ளும் கனவுகளுக்குள்ளும்...

மூங்கிலை மட்டுமா...

முற்றிய மூங்கில்கள் உரசிக்கொள்ள பற்றிக்கொண்டு திகுதி்குவென எரியும் தீ மூங்கிலை மட்டுமா தின்கிறது...

மழை நின்றபிறகும்...

துளித்துளியாய் விழும் நீரை தளிர்க்கரங்களில் ஏந்தி இரட்டைப்பல் மிளிரும் சிரிப்பை இன்னும் கொஞ்சநேரம் பார்க்க மழை நின்றபிறகும் சொட்டுகிறது கூரை...

சாரைசாரையாய்...

முன்னெறும்பின் வாசம் தொடரும் பின்னெறும்பென உன் நினைவுகளைத் தொடர்கின்றன கனவுகள்... இரவெங்கும் சாரைசாரையாய்...

பாறைகள் அறியாமலே...

நெடுங்காலமாய் நீரோடிய பாறைகளில் பள்ளங்கள்... பாறைகள் அறியாமலே...

என் இரவுகள்...

சட்டை உரித்த கருஞ்சாரையென மினுமினுக்கும் உன் நினைவுகளின் முன்பாக தவளைகளாகின்றன என் இரவுகள்...

மூழ்கியே கிடப்பதில்லை...

நிறைகடல் பரப்பின் திரைகளுக்கு மேலே துள்ளுகின்ற மீன்கள் வட்டமிடும் பறவைகளுக்கு அஞ்சி மூழ்கியே கிடப்பதில்லை...

இரவு மட்டுமே...

இதோ உன் நினைவுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்... தனிமையில் நான் புலம்புவதாக ஐயம் கொள்ளாதது இரவு மட்டுமே...

தெரியவில்லை...

நிறைந்து ஓடிய நதியொன்றைக் கொன்ற பின்... வெண்மணல் பரப்பள்ளி விற்று விற்று தின்ற பின்... பாழும் பள்ளங்களில் குப்பைகள் மேவிய பின்... ஏதோ ஒருநாளில் மீண்டும் உயிர்க்கும் நதி... அள்ளிப் பருகத்தான் ஆட்கள் இருப்பார்களா தெரியவில்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்...

கொஞ்சம் கொஞ்சமாய் உயிரள்ளிப் பருகிவிட்டு உன் நினைவுகளை நிரப்பிச் செல்கிறாய்...

தரைதொடும்போது...

காற்றின் போக்கில் கண்டபடி பறக்கும் நூலறுந்த பட்டம் குப்பையாகிறது தரைதொடும்போது...

காற்றெங்கும் பரவுகின்றன

என் இரவின் கதவுகள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன... உட்புகும் உன் நினைவுகள் உறங்கும் கனவுகளை உசுப்பிவிட காற்றெங்கும் பரவுகின்றன கனவுகள்...

உனக்கெங்கே தெரியப்போகிறது

நினைவுகளைத் தந்துவிட்டு நீ சென்றுவிடுகிறாய்... உனக்கெங்கே தெரியப்போகிறது அவை என் உறக்கத்தின்மேல் ஓடி விளையாடுவது...

மெய் மட்டும்

ஞாயிறு சரியும்போதும் நீளும் நிழல்களென ஆசைகள்... அந்திக்குப் பின் ஞாயிறுமில்லை நிழலுமில்லை... மெய் மட்டும் மெய்யாய்...

உணராமல்...

என் நினைவுகளை மறைப்பதற்கு ஏதேதோ நினைவுகளை எடுத்து உடுத்துகிறாய்... துகிலல்ல என் நினைவுகள் உயிரென்பதை உணராமல்...

பெருங்காடு...

புதைந்து கிடக்கும் ஒவ்வொரு விதையின் கனவுகளிலும் நிறைந்திருக்கிறது பெருங்காடு...

கனவுப்போர்வை

பொருளற்ற அச்சங்களால் உன்னை ஏன் போர்த்திக் கொள்கிறாய்... நினைவுப்பூக்களால் நெய்த கனவுப்போர்வை இருக்கும்போது...

திறந்த இரவு...

சாயும் பொழுதுக்கு சற்றுப் பிந்திய சிறுபறவைக்கு கூடாகிறது திறந்த இரவு...

ஆழிக்குள்ளேயே...

ஆழியென அடர்ந்திருக்கும் உன் நினைவுகள் அடுக்கடுக்காய் வீசுகின்ற அலைகளென கனவுகள்... இரவுக்கரை தொட்டு மீள்கின்றன ஆழிக்குள்ளேயே...

ஒளிக்கீற்று...

புலர்காலைப் பொழுதில் புள்ளிகளின்றி கோலமிடுகிறது ஒளிக்கீற்று...

கனவுகள்...

எல்லைகளின்றி விரிந்த வானை இறக்கைகள் விரித்து அளக்கப் பறக்கும் பறவைக் கூட்டமென உன் நினைவுகளில் சிறகடிக்கின்றன கனவுகள்...