Posts

Showing posts from June, 2018

இரவு...

அலையாடும் நெடுநீரில் முழுநிலவு முகம் பார்க்க அழகாகிறது இரவு...

இரவு...

காலப்பெருமரத்தின் நேர நெடுங்கிளைகள் இருள்பூக்கள் சொரிய நனைந்து கருக்கிறது இரவு...

இரவு...

விழிகளற்றவனின் கனவென வழியும் இருளில் நிலவெடுத்து ஒளி வரைகிறது இரவு...

இரவு...

சிறு தூறலுக்கு சிலிர்க்கும் மயிலென விண்மீன்கள் தெறிக்க இருள்தோகை விரிக்கிறது இரவு...

இரவு...

விரலிடை ஒழுகும் நீரென இருளிடை ஒழுகிடும் இரவு...

இரவு...

அனலில் விழுந்த மெழுகென வெயிலில் விழுந்த பகல் உருக இருளெடுத்து நிரப்பிச் செல்கிறது இரவு...

பிள்ளைப் பருவங்களில்...

பிள்ளைப் பருவங்களில் மணலில் பழகிய நம் பாதங்கள் முட்களைப் பார்த்ததில்லை... முட்களை முத்தமிட்ட பாதங்களுக்குரிய முகத்தில் வலிகளின் குறியில்லை... ஏனெனில் தோள்களில் நாமிருந்தோம்...

இரவு...

கடல் பொங்க மூழ்கும் நிலம்போல இருள் பொங்க மூழ்கிடும் பகலின்மேல் அலையாடிடும் இரவு...

சே

சே யாரென்று தெரியாதோர்க்கு சில வரிகள்... துயருற்ற மனிதரெல்லாம் தோழரென்றே துயர்துடைக்க சூளுரைத்த தோழன் அவன்... எளிய மனிதரின் கால்களை இறுகப் பிணைத்த அடிமை விலங்குகளின் மேல் இடியென இறங்கிய சம்மட்டி அவன்... வணிகமே உலகம் உலகமே வணிகமென்ற மாயக் கோட்பாட்டை மிதித்து உடைத்து மனிதமே உலகம் உலகமே மனிதமென்று உரக்கச் சொல்லிய உத்தமன் அவன்...

இரவு...

கருத்த வானத்தின் கண்களில் படாமல் தவிர்த்த நிலவைத்தேடி தவித்து நிற்கிறது இரவு...

இரவு...

இருளலை எழுந்து வானின் கரைதொட வளைக்குள் புகுந்த ஒளியைத் தேடித் திரிகிறது இரவு...

இரவு...

துளித்துளியாய் இருள் பெய்ய நனைகிறது வானம்... நடுங்குகிறது இரவு...

இரவு...

வறண்ட விழிகளின்மேல் இருண்ட வானம் வண்ணம் பூசுகையில் ஒளிரும் கனவுகளால் வெளிச்சமாகிறது இரவு...

இரவு...

பசித்த வயிரென இரையும் வண்டின் சத்தத்தில் கிழியும் அமைதியை இருளெடுத்து தைக்கிறது இரவு...

இரவு...

ஒளி ஒளிந்துகொண்ட பொழுதில் உதிராத பூக்கள் உதிருமென்று மேகத் தட்டேந்தி காற்று நடக்கையில் கடந்து செல்கிறது இரவு...

இரவு...

ஒளி மேல் உருளும் இருள் மேல் உலவும் கனவுகளை இமைகளுக்குள் இழுத்து கட்டுகிறது இரவு...

இரவு...

வெறும் இரவு பெரும் இரவாக நீள்கிறது சிறு குழந்தைக்கு காய்ச்சலெனில்...

மூர்க்கம் வழியும் மூளைகள்...

தீ எரியும் தெருவெங்கும் சிதறிக்கிடக்கும் உடல்களை எள்ளல் வழியும் விமர்சனத்துடன் கடந்து செல்லும் கால்களில் மிதிபடும் மனிதத்தின் வலியை உணர மறுக்கின்றன மூர்க்கம் வழியும் மூளைகள்...

நான் நானாகவே...

நான் நானாகவே இருக்கிறேன் நீ நீயாகவே இருந்துகொள்... நாமாக இருக்க இயலாத சூழலில்...