Posts

Showing posts from September, 2018

இரவு...

உடைந்த கப்பலில் உட்புகும் நீரென கடகடவென நிரம்பும் இருளில் மூழ்குகிறது இரவு...

இரவு...

மழையில் நனைந்த பனையெனக் கருத்த இருளை நிலவால் கிழிக்கிறது இரவு...

இரவு...

நெடுஞ்சாலையின் ஓரங்களில் நிற்கும் மரங்களைப் பின்தள்ளி முன்நகரும் பேருந்தென கனவுகளைக் கடந்து இருளின்மேல் நகர்கிறது இரவு...

இரவு...

இருளுக்குள் வழிதவறி எங்கேயோ நிற்கிறது எனக்கான உறக்கம்...

காதல்...

ஓடு சுமக்கும் ஆமையாகிறேன் உன் நினைவுகளை சுமக்கும்போது...

இரவு...

நிலவில்லா வானில் நின்று ஒளிரும் விண்மீன்களின் வெளிச்சத்தில் ஒளிந்து விளையாடும் கனவுகளைத் தேடுகிறது இரவு...

இரவு...

பஞ்சுப் பொம்மையை நெஞ்சோடு அணைத்து உறங்கும் சிறுபிள்ளையென இருள் அணைத்து உறங்குகிறது இரவு...

இரவு...

கோடிப் பூக்கள் தேடிச் சூடிய கூந்தலில் மணக்கிறது இரவு...

கோப்பை...

மதுதான் நிரம்பியிருக்கிறது தள்ளாடவேயில்லை கோப்பை...

இரவு...

பூக்களை மிதிக்காமல் புன்னகைத்து தாண்டும் சிறுமியென கனவுகளின் மீது கால்கள் படாமல் நடக்கிறது இரவு...

இரவு...

பூக்களை வருடிச் செல்லும் தென்றலில் நிறையும் பூவின் மணமென கனவுகளால் நிறைகிறது நினைவுகளை வருடும் இரவு...

இரவு...

இருளுக்கு வெளியேயும் இரவாகவே இருக்கையில் இருளாகவே இருக்கும் இரவில் புலப்படுவதேயில்லை அச்சம்...

இரவு...

மேற்கில் விழுந்தவன் கிழக்கில் எழுவதற்குள் எல்லாத் திசைகளிலும் இருள் விரித்து கனவுகள் நடக்க உறக்கம் சமைக்கிறது இரவு...

இரவு...

புழுதியே போர்வையான காய்ந்த நிலத்தில் பெருமழையின் முதல் துளிகள் முத்தமிடுகையில் மேலெழும் மணமென நெடுவானத்தை தொடும் இருளில் எழுகிறது இரவு...

காதல்...

பன்னீர்பூவில் வழியும் பனித்துளியில் கரையும் சூரியனாய் உன் விரலில் வழியும் ஒற்றை நீர்த்துளியில் கரைக்கிறேன் நான்... நிறைகிறது காதல்...

இரவு...

பஞ்சுப் பொதியில் விழுந்த நெருப்பென பரந்த வானில் படபடவெனப் பரவும் பாரிய இருளை நிலவால் அணைக்கிறது இரவு...

காதல்...

துளித்துளியாய் பார்வைகள்... சலசலக்கும் சிறு பேச்சுக்கள்... ஆர்ப்பரிக்கும் அரட்டைகள்... அமைதியான நீண்ட நடை விரல்கள் கோர்த்து... முடிவில் கடலாகிறது காதல்...

இரவு...

ஓடும் முயலைத் துரத்தும் வேட்டைநாயின் கால்களென மூடிய இமைகளை விரைந்து தாண்டுகிறது இரவு...