Posts

Showing posts from December, 2020

காத்திருக்கிறது...

 வலை பின்னிய பிறகு அமைதியாக அமர்ந்திருக்கும் சிலந்தியைப்போல இரவை நெய்துவிட்டு காத்திருக்கிறது உன் நினைவு... சிறுபூச்சியென விழுகின்ற என் உறக்கத்திற்கு...

உன் நினைவுகள்...

 பஞ்சுப் பொதியென சுமைகள் களைந்துவிட்டு தூங்கவே எத்தனிக்கிறேன்... நெருப்புப் பொறிகளென விழுகின்றன உன் நினைவுகள்...

உச்சிக்கு வரும்போது

 உதிக்கும்போது ரசிப்பவர்கள் உச்சிக்கு வரும்போது விரும்புவதில்லை... ஞாயிறை மட்டுமல்ல...

உலர்த்தத்தான் ஒருவழியுமில்லை...

 உன் நினைவுகளெனும் கரைகளில்லாப் பேராழியில் விழுந்துவிட்ட பிறகு முழுகும்போதும் மேலெழும்போதும் கனவுகளில் நனைகிறேன்... உலர்த்தத்தான் ஒருவழியுமில்லை...

உலவுகிறேன் வழக்கம்போல...

 கனவுகளின் வெளியில் காற்றென நீயே நிறைகிறாய்... உன்னை சுவாசித்தபடியே உலவுகிறேன் வழக்கம்போல...

சிதறுகின்றன கனவுகள்...

 தடதடவெனத் தலையில் விழும் அருவியைப்போல கொட்டுகின்றன உன் நினைவுகள் என் இரவுகளில்... தெறிக்கும் துளிகளென சிதறுகின்றன கனவுகள்...

தீர்வுகள் இருப்பது தெரியாமலேயே...

கனத்த இருளை இழுத்துப் போர்த்தும் இரவைப்போல கவலைகளைப் போர்த்துகிறது வாழ்க்கை... மூடிய இருளை முட்டித் திறக்கும் விடியலைப்போல தீர்வுகள் இருப்பது தெரியாமலேயே...

உள்ளிறங்குகிறாய் நீ...

எப்போதும் உன் நினைவுகளில் ஊறிக்கொண்டே இருக்கிறேன் நான்... தேனிலூறும் நெல்லிக்கனியென... மெல்ல உள்ளிறங்குகிறாய் நீ...

இருவருமே...

எனக்குத் தெரியும் நீ என்னைத் தேடுகிறாய்... உனக்குத் தெரியும் நான் உன்னில் தொலைகிறேன்... இருந்தபோதும் விளையாடுகிறோம் இருவருமே...

பூக்காமலா போய்விட்டன

குறை சொல்லியும் குற்றம் சுமத்தியும் சொற்களால் குத்துபவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்... மரங்கள் மீது கரிப்புகை கக்கிச் செல்லும் நெடுஞ்சாலை வண்டிகளைப் போல... பூக்காமலா போய்விட்டன மரங்கள்...

வடி கட்டுகிறது வாழ்க்கை...

 நாளிலிருந்து வழிந்து கரைகிறது இரவும் பகலும்... கவலைகளை மட்டும் வடி கட்டுகிறது வாழ்க்கை...

வருத்திவிடுமா...

 நீ சொற்களால் சுடுகிறாய்... பார்வைகளில் பனி பெய்கிறாய்... ஆனாலுமென்ன வெப்பமும் குளிரும் உன் இதயம் கடந்து வந்தென்னை வருத்திவிடுமா...

மறைவதில்லை...

 என் இரவுகளின் மேல் நீ நடக்க உன் நினைவுகள் கம்பளம் விரிக்கின்றன... கால் தடமெனப் பதியும் கனவுகள் கண்கள் திறந்தபின்னும் மறைவதில்லை...

தெரிவதேயில்லை...

 பரந்த வெளியெங்கும் நிறைந்திருக்கும் உடுக்களெல்லாம் ஒளியோடு மின்னுவதாகவே எண்ணுகின்ற கண்களுக்கு அவை தகிப்பது தெரிவதேயில்லை...

உனக்கெப்படி புரிய வைப்பது...

 உன் நினைவுகளுக்குள் நானில்லையென உனக்கு நீயே சொல்லிக் கொள்கிறாய்... உனக்கெப்படி புரிய வைப்பது என் நினைவுகளுக்குள்தான் நீயிருக்கிறாயென...

யுகங்களை எண்ணிக்கொண்டு...

 விடியாமல் நீளும் இரவொன்றைக் கடக்க நான் நொடிகளை எண்ணுகிறேன்... நொடிகளோ யுகங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றன...

நினைவுகளைத் துரத்துகிறது...

 தப்பியோடும் சிறுமுயலை விடாமல் துரத்தி கவ்வி வரும் வேட்டைநாயென உன் நினைவுகளைத் துரத்துகிறது இந்த இரவு...

மேகங்கள் நனைவதில்லை...

 நிலத்தின் தாகம் உணராமல் நீங்கும் மேகங்கள் நனைவதில்லை பெருமழை சுமந்தபோதும்...

தேங்குகிறது இரவு...

 கொழுகொம்பாக நான்... கொடியாகப் படரும் உன் நினைவுகள்... பூக்கும் கனவுகளில் தேங்குகிறது இரவு...

நடுங்குவதில்லை நிலம்...

 குளிர் சுமக்கும் காற்றின் ஊடாக குதிக்கும் தூறல்கள் குளிர் பூசிக்கொண்டாலும் நடுங்குவதில்லை நிலம்...

புதிதாகப் பிறக்கின்றன...

 உனக்கும் எனக்குமான இடைவெளிகள் இல்லாமல் போகும்போது புதிதாகப் பிறக்கின்றன வானும் மண்ணும்...

முன்னும் பின்னும்...

 புயலுக்கும் முன்னும் பின்னும் சலனமின்றியே இருக்கின்றது வானும் மண்ணும்...

தோற்பதென்னவோ...

 இரவுக் கயிற்றின் இருபுறமும் நின்று இழுக்கும் உன் நினைவுகளில் எந்தப் பக்கம் வென்றாலும் தோற்பதென்னவோ உறக்கம்தான்...

தூறவே செய்கிறது...

 வாடிய செடியின் வேருக்கு அருகில் விழுகின்ற நீர்த்துளி போல வாய்ப்புகளை தூறவே செய்கிறது வாழ்க்கை...

இரவு மட்டுமேன்...

 இரவு மட்டுமேன் இப்படி இருக்கிறது..? நொடிகள் ஒவ்வொன்றும் உன் நினைவுகளை சுமந்து வந்து உள்ளத்தில் கொட்டிச் செல்ல சுமை தாங்கா உறக்கம் கனவுகளை அள்ளி இறைக்கிறது...

தோற்றம் மட்டுமே அவனுக்குண்டு...

 நெருப்பிலிட்டால் பொன்னாவான் நீரிலிட்டால் மீனாவான் விண்ணிலெறிந்தால் பறவையாவான் மண்ணில் புதைத்தால் மரமாவான் காற்றில் கலந்தால் புயலாவான் மேற்கறியா சூரியன் அவன் தோற்றம் மட்டுமே அவனுக்குண்டு...