Posts

Showing posts from March, 2018

இரவு...

இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே நெருப்பெரிய கருகும் கனவுகளின் புகைமூட்டத்தின் வழியே என்னைக் கடக்கிறது இரவு...

ஓடுகிறீர்கள்...

ஓடுகிறீர்கள்... வேகமாகவே ஓடுகிறீர்கள்... முன்னால் நகரும் இலக்கு நோக்கி மூச்சிரைக்க நாவறள நன்றாகவே ஓடுகிறீர்கள்... அள்ளியெடுத்து அணைத்த கரங்கள் நடுங்குகையில் ஆதரவாய்ப் பற்ற நேரமின்றி நீண்ட ஓட்டம் ஓடுகிறீர்கள்... தத்தித் தவழ்ந்து பற்றி எழுந்து பழகும் நடையில் விரல் பிடிக்க நீளும் கரங்களை நின்று பிடிக்க நேரமின்றி ஓடுகிறீர்கள்... உடலையும் உள்ளத்தையும் பகிர்ந்து கொண்ட உறவுக்கு வலிக்கையில் மருந்திட நேரமின்றி மரத்துப் போய் ஓடுகிறீர்கள்... சுற்றி இருந்த சொந்தங்கள் துயர் தணித்த நெஞ்சங்கள் சோகத்தில் துவழ்கையில் ஆறுதல் சொல்ல நேரமின்றி அதிவேகமாய் ஓடுகிறீர்கள்... இதயத்தோடு எதையும் பகிர்ந்து இனிமை சேர்த்த நட்புகள் உதிர நாலு கால் பாய்ச்சலில் நன்றாகவே ஓடுகிறீர்கள்... ஓடுங்கள்... இன்னும் வேகமாக ஓடுங்கள்... இலக்கென்று நீங்கள் நினைத்தை எட்டிப் பிடிக்கும் வரை ஓடுங்கள்... துரத்திய இலக்கை தொட்டுப் பிடித்த பின் வெற்றிக் களிப்புடன் சுற்றிலும் பாருங்கள்.. வெடிக்கும் மகிழ்ச்சியை வெறுமையுடன் பங்கிட்டுக் கொண்டாடி மீண்டும் ஒடத் தொடங்குங்கள்...

இரவு...

இருவிழிகளுக்குள் இருள் நிரப்பி இமைக்கதவுகள் தாழிட்டு உறக்கத்தை காவல் வைத்து உலா போகிறது இரவு...

இரவு...

இமையிதழ்கள் கவிழ கனவிதழ்கள் அவிழ உறக்கத்தின் ஊடாக இருளைக் கடக்கிறது இரவு...

இரவு...

குளிருக்கும் கோடைக்கும் இடையே இலைகள் உதிர்க்கும் வேப்பமரமென கனவுகள் உதிர்க்கிறது இரவு...

இரவு...

ஈரத்தில் கால் நனைத்து இல்லமெல்லாம் தடம் பதிக்கும் சிறு பிள்ளையென இருளில் கால் நனைத்து எட்டுத் திசையிலும் தடம் பதிக்கிறது இரவு...

இரவு...

அன்னை மடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையென இருளின் மடியில் உட்கார்ந்து முறுவலிக்கும் இரவு...

இரவு...

கொடும் வெயிலில் கடும் பசியில் கால்கள் துவள நடப்பவனின் கண்களென மெல்ல இருள்கிறது இரவு...

இரவு...

ஆழியில் விழுந்த துளி ஆழியாக ஆனதுபோல இருளில் விழுந்த பின் இருளாகவே ஆனது இரவு...

இரவு...

வேரினை நனைத்தபடி ஓடுகின்ற நீரினை சலனமின்றி பார்க்கும் மரமென கடந்து செல்லும் காலத்தை இருளுக்குள் பார்க்கிறது இரவு...

இரவு...

அனலில் உருகும் மெழுகென இருளில் உருகும் நினைவுகளின் மேலாடும் கனவுச்சுடரின் ஒளியில் உறக்கத்தைக் கடக்கிறது இரவு...

இரவு...

துயரில் மூழ்கி மூச்சுத்திணறும் மனதிலிருந்து மேலேறும் குமிழிகள் பட்டென்று உடைகையில் உறக்கம் கலைக்கிறது இரவு...