Posts

Showing posts from August, 2021

நீ...நான்...

விழிகளில் விரிகிறாய் நீ... மொழிகளில் பதிகிறேன் நான்...

எனக்குத் தெரியும்...

உனக்கு நீயே வேலியிடுகிறாய் மௌனங்களால்... எனக்குத் தெரியும் காற்றுக்கும் கடலுக்கும் வேலிகள் இல்லையென்று...

கலையுமென்பதை உணராமல்...

நீ என் நினைவுகளுக்கு ஏதேதோ ஒப்பனைகள் செய்து வேறொன்றென்று நினைக்கப் பழகுகிறாய்... உன் இமைகள் மூடும்போது ஒப்பனைகள் கலையுமென்பதை உணராமல்...

கரியாகிப் போகிறது வாழ்க்கை...

எதிர்பார்ப்புகள் நெருப்புத் துண்டுகளாக நிற்கும் வேளை நீரூற்றி செல்கிறது ஏமாற்றம்... கரியாகிப் போகிறது வாழ்க்கை...

நகர்கிறது வாழ்க்கை...

பொதிவண்டி இழுக்கும் மாட்டுக்கு முன்னால் தொங்கவிடும் புல்லுக்கட்டைப் போல சொற்களை தொங்கவிடுகிறாய்... உன் நினைவுகளை சுமந்துகொண்டே நகர்கிறது வாழ்க்கை ஏமாற்றம் உணராமல்...

உணர்வதேயில்லை...

உமிழ்ந்த பின்னும் தொழுவோர் உணர்வதேயில்லை மானத்தின் வெப்பத்தை... சூடு தொலைத்த உடலைப்போல...

என் பகல்கள்...

இருள் செறிந்த பொழுதுகளெல்லாம் இரவுகளெனில் ஒளி நிறைந்த பொழுதுகளெல்லாம் பகல்களெனில் உன் மௌனங்கள் என் இரவுகள்... உன் புன்னகைகள் என் பகல்கள்...

உயிரென்று சொல்கிறது...

பேரண்டமெங்கும் விரவிக் கிடக்கும் ஆற்றலென என்னுள் நிறைந்திருக்கும் உன் நினைவுகளை இந்த உலகம் உயிரென்று சொல்கிறது...

பறக்கிறேன்...

பூவில் சுரக்கும் தேன்துளி பருகும் வண்ணத்துப் பூச்சியென என்னில் சுரக்கும் உன் நினைவுகளை நானே பருகியபின் பறக்கிறேன்...

துள்ளுகிறது இசை...

புன்னகை பூசிய மௌனத்தில் சம்மதம் பொதிந்து வீசிச்செல்கிறாய் நீ... என்னில் விழுந்து உடையும் உன் மௌனத்தின் சிதறல்களில் துள்ளுகிறது இசை...

உணர்வதில்லை கனத்தை...

மென்பஞ்சின் சிறுபொதியொன்றை பற்றியெடுக்க மென்மையுணரும் விரல்கள் உணர்வதில்லை கனத்தை...

கவிழ்கிறது இரவு...

நீயின்றி எரிந்த பகலின்மேல் கூடாரமென கவிழ்கிறது இரவு... ஒட்டகமென உள்ளே நுழைகிறது உன் நினைவு...

என்ன செய்வாய்...

நீ மௌனங்களில் கூடுகட்டிவிட்டு என் நினைவுகளை அடைகாக்கிறாய்... கதகதப்பில் வளரும் கனவுகளின் சத்தத்தை என்ன செய்வாய்...

மேலும் ஒன்று...

அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் மேலும் ஒன்று... உணவு உடை உறையுள் மற்றும் உன் அன்பு...

மீண்டும் மீண்டும்...

நிலையில் நிற்கும் பெருந்தேரின் சக்கரங்கள் தேரோடும் வீதியை திரும்பிப் பார்ப்பதுபோல நீ திரும்ப மறுத்தாலும் எனையே நோக்கும் உன் நினைவுகள் மீண்டும் மீண்டும்...

கல்லெறியாதீர்கள்...

 என் கண்ணாடித் தவறுகளின்மேல் கல்லெறியாதீர்கள்... உடைந்து சிதறும் ஒவ்வொரு துண்டிலும் உங்கள் முகத்தைக் காட்டும்...

வேறென்ன தெரியும்...

அகச்சிவப்புக்கும் புறஊதாவுக்கும் இடைப்பட்ட அத்தனை நிறங்களும் உன் நினைவுகளை பூசிக்கொள்ள காண்பதிலெல்லாம் உன்னைத்தவிர வேறென்ன தெரியும்...

நாளெல்லாம் நிறைகிறது...

ஒரு மணித்துளி சிறுபொழுது மகிழ்ச்சியில் மனம் திளைக்க நாளெல்லாம் நிறைகிறது...

நெய்கிறேன் என் பொழுதுகளை...

குச்சிகளால் கூடு செய்யும் குருவியென உன் நினைவுகளால் நெய்கிறேன் என் பொழுதுகளை... நீ தங்குவதற்காக..

மூழ்குகிறேன் உன்னில்...

கடலலைகளில் மிதக்கும் காகிதக் கப்பலொன்று நீரில் ஊறி நனைந்து கடலிலேயே மூழ்குவது போல உன் நினைவுகளில் மிதக்கும் நானும் மூழ்குகிறேன் உன்னில்...

உணரவில்லை...

கிளையை வெட்டும்போதும் புரியவில்லை... உடலை வெட்டும்போதும் உணரவில்லை... கோடரியை கொண்டாடும் மரங்கள்...

எடை உணர்வதேயில்லை...

நீயோ நினைவுகளில் என்னைச் சுமக்கிறாய்... நானோ நினைவுகளில் உன்னைச் சுமக்கிறேன்... சுமைதாங்கி நெஞ்சங்கள் ஏனோ எடை உணர்வதேயில்லை...

காத்திருப்பதில்லை இரவு...

நிலவு வரும்வரை இருள் பூசிக்கொள்ளாமல் காத்திருப்பதில்லை இரவு...

பதிலாக அடுக்குகிறாய் நீ...

உன் மௌனங்களின் மேல் கேள்விகள் அடுக்குகிறேன் நான்... என் கேள்விகளின் மேல் மௌனங்களை பதிலாக அடுக்குகிறாய் நீ...

சில நேரங்களில் வாழ்க்கை...

பெருமழை பெய்த இரவைத் தொடரும் பகலில் தகிக்கும் கதிரின் வெப்பத்தில் புழுங்கும் காற்றென சில நேரங்களில் வாழ்க்கை...

முளைக்கின்றன கனவுகள்...

உன் நினைவுகளை தவிர வேறெதுவும் இல்லாத வெளியாக மாறிப்போனது என் உறக்கம்... விதைகளிலிருந்து பிறக்கும் செடிகளென முளைக்கின்றன கனவுகள்...

ஊர்கிறது இரவு...

சிறுகுழந்தை சிதறிச் சென்ற அரிசிப் பொரிகளென விண்ணெங்கும் விரவிக் கிடக்கும் உடுக்களிடையே எறும்பென ஊர்கிறது இரவு...

கழிகின்றன நாட்கள்...

உன் நினைவுகளின் குவியல்கள் ஊடாக நடக்கவே விழைகிறேன் நான்... முன்னும் நகராமல் பின்னும் நகராமல் பின்னிக்கொள்ளும் கால்களை நகர்த்துவதிலேயே கழிகின்றன நாட்கள்...

நகர்கிறது இரவு...

இரைதேட கிளை நீங்கும் வவ்வால்களின் மீயொலி இரைச்சல்கள் செவிதுளைக்க முகிலெடுத்து காதுகள் மூடும் நிலவைச் சுமந்து நகர்கிறது இரவு...

ஒளிர்கிறேன் நான்...

தன்னில் விழுந்த காகிதத்தை சரசரவென எரிக்கும் நெருப்பென உன்னில் விழுந்த என்னை எரிக்கும் உன் நினைவுகள்... விந்தைமுரண் என்னவெனில் கருகாமல் ஒளிர்கிறேன் நான்...

இருள் நீங்கியது...

 முழுநிலவு முகம் காட்டியதும் இருள் நீங்கியது என் வானில்...

என்ன செய்வாய்...

உன்னில் உயிர்த்திருக்கும் என் நினைவுகளை ஏதேதோ போர்வைகளால் நீ மூடுகிறாய்... உறங்காமல் உருளும் நினைவுகளை உறங்கவைக்க என்ன செய்வாய்...

எங்கிருந்து எடுப்பாய்...

நாளின் நாழிகைகள் அத்தனையையும் உன் மௌனத்தால் நிரப்பிய பின் பேசுவதற்கான பொழுதுகளை எங்கிருந்து எடுப்பாய்...

பறக்காமல் இருப்பதில்லை...

உதிர்ந்துவிடும் என்பதற்காக இறக்கைகள் விரித்து பறக்காமல் இருப்பதில்லை ஈசல்கள்...

அறியாமல்...

நீ மறுமொழி கூறாமல் மௌனமாகவே இருக்கிறாய்... உன் மனமொழிகள் என் மனவெளியெங்கும் என்மொழிகளோடு உலவுவதை அறியாமல்...

பரவுமோ நெருப்பு...

பற்றியெரியும் பெருங்காட்டில் திசைதெரியாமல் ஓடிய சிறுமுயலொன்று பதுங்கிய வளைமீதும் பரவுமோ நெருப்பு...

குளிர் காய்கிறேன்...

உன் நினைவுகள் தாலாட்ட குழந்தையாகிறேன் இரவுகளில்... உன் நினைவுகள் தீ மூட்ட குளிர் காய்கிறேன் பகல்களில்...

நினைவுகளால் தொடுகிறாய்...

தொடமுடியாத தூரத்தில் இருந்தாலும் சுடுகின்ற ஞாயிறின் வெப்பமென தொலைவில் நீ இருந்தாலும் உன் நினைவுகளால் தொடுகிறாய்...

இரவைக் கடக்கிறேன்...

 நீரோடும் ஆறொன்றை நீந்திக் கடக்க துதிக்கை தூக்கி வைக்கும் யானைபோல உன் நினைவுகளை உயர்த்தியபடி இரவைக் கடக்கிறேன் நான்...

உருமாறுவதில்லை...

என் உயிர்க்கலங்களின் உட்கருவினுள்ளே உயிர்த்திருக்கும் மரபணுத் தொடரில் உள்நுழைந்த உன் நினைவுகள் ஒவ்வொரு முறையும் இரட்டிக்கின்றன... ஒருபோதும் உருமாறுவதில்லை...

விடிகிறது இரவு...

என் இரவுகளில் உன் நினைவுகளின் கூரையில் நின்று கூவும் கனவுச்சேவலின் குரலில் விடிகிறது இரவு...

மதில் மேல்...

எந்தப்பக்கம் குதிப்பதென்று இருபுறமும் இடம் தேடாதவரை தடுமாற்றம் ஏதுமின்றி மதில் மேல் நடக்கிறது பூனை...

கடக்க இயலாமல்...

நீ ஓரிரு சொற்களில் கணங்களை கடந்துவிட்டாய் எளிதாக... சொற்களை சுமந்து கொண்டிருக்கும் நானல்லவா தடுமாறிப்போகிறேன் அந்தக் கணங்களை கடக்க இயலாமல்...

என்ன சொல்வாய்...?

ஏதோவொரு புதியவனைப்போல என்னிடம் பேசிவிட்டாய்... எப்போதும் உன்னுடனே இருக்கும் என் நினைவுகளிடம் என்ன சொல்வாய்...?

நான் பேசும் இரவுகளில்...

தூரத்தில் இருக்கும் நீயும் அருகில் இருக்கும் உன் நினைவுகளும் வேறு வேறு என்றே எண்ணுகிறாய் நீ... ஒன்றே என எண்ணுகிறேன் நான்... என்னோடு நான் பேசும் இரவுகளில்...

களைத்துப் போகிறேன்...

கடல்சேரும் நதியென களைத்துப் போகிறேன் கரடுமுரடான காலங்களைக் கடந்தபிறகு...