Posts

Showing posts from April, 2021

உன் நினைவுகள் தீர்ந்தபின்...

அலைகள் ஓய்ந்தபின் கடலாடக் காத்திருக்கும் சிறுவனைப்போல காத்திருக்கிறேன்... உன் நினைவுகள் தீர்ந்தபின் வேறேதும் நினைக்கலாமென...

நேரம் தீரும்வரை...

 நீர் நிரப்பி வைக்கச் சொல்லி ஓட்டைப் பானையை ஒப்படைக்கிறது காலம்... நிரப்பிக்கொண்டே இருக்கிறேன் நேரம் தீரும்வரை...

இடையே நிற்கும் உன் நினைவு...

தொண்டையில் சிக்கிய மீன்முள்ளென மனதிற்கும் அறிவுக்கும் இடையே நிற்கும் உன் நினைவு...

கதகதப்பாக கனவுகள்...

குளிரும் உன் நினைவுகளால் எரியும் என் இரவுகளைப் போர்த்துகிறேன்... கதகதப்பாக கனவுகள்...

துள்ளுகின்றன மீன்கள்...

தெளிந்த நீரில் தெரியும் நிலவுக்கு சொந்தம் கொண்டாடி துள்ளுகின்றன மீன்கள்...

ஒளிர்கிறது என் இரவு...

என் உறக்கத்திற்குள் ஓடுகின்ற உன் நினைவுகள் ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன காற்றிலாடும் காய்ந்த மூங்கில்களைப்போல... பறக்கும் தீப்பொறிக் கனவுகளில் ஒளிர்கிறது என் இரவு...

கற்றுக்கொள்வதில்லை...

பூக்களும் இலைகளும் உதிரும் மரத்தை ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறோம்... கற்றுக்கொள்வதில்லை...

என் இரவுகள்...

இளவேனிலின் தொடக்கத்தில் இலைகளுக்கு நிகராக பூக்கள் சுமக்கும் சரக்கொன்றை மரமென உன் நினைவுகளுக்கு நிகராக கனவுகள் சுமக்கின்றன என் இரவுகள்...

என்ன செய்வது...

அரும்புகளின் மேல் அதிகாலை அமர்ந்திருக்கும் பனித்துளிபோல் அழகாகவே தொடங்குகின்றன எல்லாமே... என்ன செய்வது காயும் வெயிலின் கடிவாளமொன்றும் பனித்துளியிடம் இல்லையே...

குழம்புகிறது இரவு...

கனவுகளின் வெளியில் காட்சிகளாக உன் நினைவுகள்... உன் நினைவுகளின் வெளியெங்கும் நீக்கமற நான்... என்னை நான் பார்க்கும் கனவுகளில் நீ மட்டுமே தெரிய என்னோடு சேர்ந்து குழம்புகிறது இரவு...

கடந்து செல்கிறது காலம்...

 நீ பகல்களை சிறைப்பிடிக்கிறாய்... உன் நினைவுகள் இரவுகளை சிறைப்பிடிக்கின்றன... நகராத கணமொன்றில் நானும் நீயும் நிற்க நம்மைக் கடந்து செல்கிறது காலம்...

என்னதான் தேடுகிறதோ காலம்...

விலங்குகளை மட்டும் என்னிடம் விட்டுவிட்டு அத்தனையும் அள்ளிக்கொண்ட பின் இன்னும் என்னிடம் என்னதான் தேடுகிறதோ காலம்...

கேள்விகளும் பதில்களும்...

நீ என்னிடம் ஏதும் சொல்வதுமில்லை... நான் உன்னிடம் ஏதும் கேட்பதுமில்லை... உன் நினைவுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் நானிருக்கிறேன்... என் நினைவுகளின் நீள்வெட்டுத் தோற்றத்தில் நீயிருக்கிறாய்... பொருளற்றுப் போகின்றன கேள்விகளும் பதில்களும்...

திரும்பிக்கூட பார்ப்பதில்லை...

தூக்கிவைத்து கொண்டாடுபவர்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை தோகை உதிர்த்த மயில்...

நதியென ஓடுகிறது...

என் இரவின் கரையில் நீ நிற்கிறாய்... உன் பகலின் கரையில் நான் நிற்கிறேன்... நதியென ஓடுகிறது நாளொன்று நாம் கடக்கும் ஆழத்தில்...

இனித்தாலென்ன கசந்தாலென்ன...

கரும்புத் தோட்டத்தில் எறும்புகளுக்கு இடமில்லையென சொல்லிவிட்ட பின் கரும்புகள் இனித்தாலென்ன கசந்தாலென்ன எறும்புகளுக்கு...

நீயன்றி வேறுயார்...

உன் நினைவுகளால் நிரம்பும் இரவுகளில் வழிந்தோடும் கனவுகளில் படகென மிதக்கும் என் உறக்கத்தில் பயணிப்பது நீயன்றி வேறுயார்...

முழுமையாய் நிறைகிறேன்...

என்னருகில் நீ இல்லாதபோது நான் என்ன நினைக்கிறேனென நீ நினைக்கும் வேளையில் உன்னில் முழுமையாய் நிறைகிறேன் நான்...

சுற்றம் சொல்கிறது...

உள்ளத்தின் காயங்களில் வலி வழிய நிற்கும்போது கத்தி எடுத்து சுரண்டும் சுற்றம் சொல்கிறது குற்றமில்லையென...

என் இரவுகள்...

பெரும்புயல் கடந்து சென்ற மழைக்காட்டில் சாய்ந்த மரங்களென மாறிப் போகின்றன என் இரவுகள் உன் நினைவுகள் கடக்கும்போது...

கவனிப்பதில்லை...

நீருக்குள் தாவும் தவளை கவனிப்பதில்லை வட்ட அலைகள் கரைசேர்கிறதாவென...

எங்கெங்கோ...

எருக்கு விதையின் இறக்கைகளாகும் இழைகளென என்னில் விரியும் உன் நினைவுகள்... இரவுக் காற்றில் எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன என்னை...

அதனாலென்ன...

திரியைத் தின்னும் தீயென என்னைத் தின்னும் நிராசைகள்... அதனாலென்ன ஒளிர்கிறதே வாழ்க்கை உடனிருப்போருக்கு...

உணர்வதில்லையா நீ...

உன் நினைவுகளின் தோட்டத்தில் கனவுமலர்கள் கொய்யும் என் இரவுகள் சரம் தொடுக்க உன் இரவுகளில் நறுமணம் கமழ்வதை உணர்வதில்லையா நீ...

ஓய்வெடுப்பதில்லை...

நின்ற இடத்தில் நகராமல் பறந்தாலும் ஓய்வெடுப்பதில்லை தும்பியின் இறக்கைகள்...

நினைவு வண்டுகள்...

இரவு மூங்கிலில் நினைவு வண்டுகள் துளையிட்டுச் செல்ல உறக்கக் காற்று உட்புகுந்து வெளியேற இசையென வழிந்திடும் கனவுகள்...

வேர்கள்...

வண்ணமலர்கள் வான் பார்த்து புன்னகைக்க மண்ணுக்குள் நீர் தேடுகின்றன வேர்கள்...

என் இரவுகள்...

வெயிலெனக் காயும் உன் நினைவுகள்... நிழலெனத் தொடரும் கனவுகள்... மழையெனப் பொழியும் உன் நினைவுகள்... வெள்ளமெனப் பெருகும் கனவுகள்... வெப்பமும் ஈரமும் விரவிக் கிடக்கும் என் இரவுகள்...

விடியும்வரை...

என் இரவின் நீளத்தை உன் நினைவால் அளக்கிறேன் விடியும்வரை...

நான் மட்டுமே அறிவேன்...

 ஏழு மலைகள் தாண்டி ஏழு கடல்களுக்கு அப்பால் ஒரு கிளியின் இதயத்தில் இருக்கிறது என் உயிர்... ஏழு மலைகளும் ஏழு கடல்களும் உன் இருவிழிகளுக்குள் இருக்கிறதென்பதை நான் மட்டுமே அறிவேன்...

பாறையும் இரவும்...

 கடும் கோடையில் காலைமுதல் காய்ந்த பாறை எற்பாடு தொடக்கத்தில் தகிப்பதுபோல உன் நினைவுகளின் வெப்பத்தில் சுடுகிறது இந்த இரவு... கடந்துவிட முயற்சிக்கிறேன் நெடுந்தூரம் நீள்கிறது பாறையும் இரவும்...

என் உறக்கம்..

தூண்டில் புழுவாக உன் நினைவுகளை மாட்டிவைத்து இரவுக் குளத்தில் எறிகிறாய்... அப்பாவி மீனென என் உறக்கம்..

புரியவைப்பது எப்படி...

அதிவிரைவாக வண்டிகள் கடக்கும் அகன்ற சாலையின் நடுவில் புற்களின் வாசம் தேடும் ஆடுகளுக்கு புரியவைப்பது எப்படி... மேய்ச்சல் நிலம் பசுமையின் மயானமாக மாறிப்போனதென்று...

நம் விழிகளுக்கிடையே...

உன் வலக்கண்ணில் தொடங்கும் பகல் இடக்கண்ணில் முடிய உன் இடக்கண்ணில் தொடங்கும் இரவு என் இமைகளுக்குள் நிறைய நாளொன்று நகர்கிறது நம் விழிகளுக்கிடையே...

பிடிமானமாக இரவு...

உறைந்த ஏரியின் மேற்பரப்பை அடித்து உடைக்கும் துருவக்கரடியின் முன்னங்கால்களென இமைகள் தட்டும் உன் நினைவுகள்... பின்னங்கால்களில் பிடிமானமாக இரவு...

மாற்றுச்சட்டைகள் ஏராளம்...

முதுகுக்குப் பின்னால் சேறள்ளித் தெளிக்கும் கரங்கள் ஒருவேளை அவர்முகம் தேய்க்கக்கூடும்... என்னிடம் மாற்றுச்சட்டைகள் ஏராளம்...

வாரி இறைக்கிறது உன் நினைவு...

பெருந்திணிவு விண்மீனொன்று வெடித்துச் சிதறும்போது வெளியாகும் கதிர்வீச்சுகளென வண்ணங்களை கனவுகளாக வாரி இறைக்கிறது உன் நினைவு...

அடுத்தநாளே இளவேனிலென்று...

பின்பனிக் காலத்தில் இலைகளை உதிர்க்கும் மரங்களைப்போல கனவுகளை உதிர்க்கும் உன் நினைவுகளுக்கு தெரிந்திருக்கிறது அடுத்தநாளே இளவேனிலென்று...

இரவுகளும் பகல்களும்...

அச்சில் சுழலும் சக்கரமென உன் நினைவெனும் ஒற்றைப் புள்ளியில் சுழல்கிறேன்... கீழும் மேலுமாக இரவுகளும் பகல்களும்... 

நிற்கிறது இரவு...

இமைகளுக்குள் நீ உலவுகிறாய்... நகர முடியாமல் நிற்கிறது இரவு...

உறக்கம் சுடுகின்றன...

நெருப்பெரியும் இரவுகளை விசிறிவிடுகின்றன உன் நினைவுகள்... சிதறும் தீப்பொறிக் கனவுகள் உறக்கம் சுடுகின்றன...

மூழ்கியே இருக்கட்டும்...

முத்துகளை முன் வைக்கிறேன் சிப்பிகளை அழகென்கிறாய்... நீ சங்குமாலை சூடிக்கொள்... முத்துக்கள் மூழ்கியே இருக்கட்டும் ஆழியின் ஆழத்தில்...

இனிக்கும் கனவுகள்...

கரும்பெங்கும் நிரம்பிய சாறென என்னுள் நிறையும் உன் நினைவுகள்... எடுத்தென்னைச் சுவைக்கும் இரவுகளில் எங்கெங்கும் இனிக்கும் கனவுகள்...

நிழல்...

அந்திக்குப் பின் எந்தப் பக்கம் சாய்வதென யோசிக்கிறது நிழல்...

மூழ்குகிறேன் இரவுக்கடலில்...

எட்டுக் கால்களாலும் இரை வளைக்கும் நீராளியென என்னைச் சுற்றி இறுகப் பற்றும் உன் நினைவுகள் உறக்கம் உறிஞ்ச விழித்தபடியே மூழ்குகிறேன் இரவுக்கடலில்...

நிலவில்லா வானம்...

உடுக்களிலிருந்து சிதறும் ஒளியின் சிறு வெளிச்சத்தில் கிழக்கு தேடும் இரவை சுமந்து நிற்கிறது நிலவில்லா வானம்...

நானன்றி வேறென்ன...

ஆடும் செக்கில் விழுந்த காய்ந்த தேங்காயென ஆகிறேன்... உன் நினைவுகளுக்கும் இயல்புக்கும் இடையே சிக்கி... நிம்மதி வழிந்தோட இறுதியாக எஞ்சுவது நானன்றி வேறென்ன...

வீழும்வரை...

 பெருங்காற்றில் பிழைத்திருக்க நாணலாக மாறச்சொல்கிறது வாழ்க்கை... வீழ்ந்தாலும் வேதனையில்லை... வீழும்வரை வாழ்கிறேன் கனிதரும் மரமாக...

இந்த இரவிலும்...

திகுதிகுவென எரியும் நெருப்பின் நீலச்சுடரில் மேலெழும் வெப்பமென உன் நினைவுகள் கிளப்பும் அனல் தகிக்கிறது பெருமழை பெய்யும் இந்த இரவிலும்...

விலகுகிறது உறக்கம்...

 திடும்மெனச் சரியும் பாறைகளின் அதிர்வில் மிரண்டு ஓடும் மேய்ச்சல் விலங்கென இமைகளிலிருந்து விலகுகிறது உறக்கம்... சடசடவெனச் சரியும் உன் நினைவுகளால்...

குழம்புகிறது இலக்கணம்...

நான் என்பதன் நீட்சி நீ... நீ என்பதன் சுருக்கம் நான்... நாம் என்பது பன்மை மறந்து ஒருமையாக சற்றே குழம்புகிறது இலக்கணம்...

முட்கள்...

வலிகள் ததும்பும் வாழ்க்கையில் வழிகள் தேடும்போது கிழிக்கின்றன முட்கள்...

நடக்கிறேன் நான்...

பஞ்சுப்பொதியாக என் மனம்... உன் நினைவுகளின் மழையில் கனக்கிறது... உன் கனவுகள் வெயிலாக லேசாகிறது... சுமையிறக்காமல் நடக்கிறேன் நான்...

என்ன செய்வாய்...

 என் நினைவுகள் உன்னில் பெரியதாக ஏதும் செய்வதில்லையென என்னிடம் சொல்லிவிட்டாய்... இரவு கண்ணாடியாகி உன் இதயத்தின்முன் நிற்கும்போது என்ன செய்வாய்...

வேறென்ன செய்வது...

 சிகரத்திலிருந்து விழுகிறேன் அமைதியாக... கைகள் பிடிமானம் தேடி பரிதவிக்கவில்லை... கால்கள் ஊன்றுமிடம் தேடி அலைபாயவில்லை... அமைதியாகவே விழுகிறேன்... சிகரமே தள்ளிவிட்ட பின் விழுவதைத் தவிர வேறென்ன செய்வது...

உயிர்ப்புடனே இருக்கின்றன...

 என்னுள் தாவித்தாவி குதிக்கும் உன் நினைவுகள் உயிர்ப்புடனே இருக்கின்றன இரவிலும் பகலிலும்... நீரிலும் நிலத்திலும் உயிர்த்திருக்கும் தவளை போல...

காலியாகும்வரை...

விடியல் தேடி நகரும் இரவை விடாமல் இழுத்துப் பிடிக்கின்றன உன் நினைவுகள்... கனவுகளெல்லாம் காலியாகும்வரை...

என்னை நானே...

உன் நினைவுகளில் என்னைத் தோய்த்து இரவுகளை வரைகிறேன்... உன் நினைவுகளில் என்னைக் குழைத்து என்னை நானே வனைகிறேன்...

இனி...

தொலைவை நீ அதிகரிக்க முடிவெடுத்தபின் இடைவெளியை உன் நினைவுகளால் நிரப்புகிறேன்... இனி போக்கும் வரத்தும் மெய்நிகர் பயணத்தில்..

நிம்மதியின் எச்சங்கள்...

சிதைந்துபோன உறக்கத்தின் ஊடாக நிம்மதியின் எச்சங்கள் தேடுவதில் கழியும் இரவு கருப்பாக இருந்தாலென்ன வெள்ளையாக இருந்தாலென்ன...