Posts

Showing posts from October, 2021

வேகாத பானையில்...

வேகாத பானையில் நீர் நிரப்பச்சொல்லி நம்மை தினமும் வேகவைக்கிறது வாழ்க்கை...

பண்படுத்ததான்...

தனைக் கீறும் கலப்பை நுனி பண்படுத்ததான் புண்படுத்த இல்லையென விளங்க இயலா நிலத்திலேதும் விளைவதில்லை...

சிறுபிள்ளையென...

சிறுகச்சிறுக சேர்த்து வைத்த உண்டியலைத் திறந்து பார்க்கும் சிறுபிள்ளையென முகம் மலர்கிறது உன் நினைவுகளின் பேழை திறக்கும் என் உறக்கம்...

பழிசுமக்கிறது கண்ணாடி...

உருவம் பார்க்க வாங்கிய கண்ணாடியை உடைத்துவிட்டு உருவம் காட்டுவதில் ஒழுங்கில்லையென குறைசொல்ல பதிலேதும் சொல்லாமல் பழிசுமக்கிறது கண்ணாடி...

உன்னுள்...

பேரூழிக்காலத்தின் பெருமழையென என்னில் பெய்கிறாய்... மிதந்தால் உன்னில்... மூழ்கினால் உன்னுள்...

உறங்குவதில்லை...

இலைகளும் மலர்களும் இரவில் உறங்கும்போதும் உறங்குவதில்லை வேர்கள்...

ஏனோ தெரியவில்லை...

என் இரவுகளின் நொடிகள் மட்டும் ஏனோ தெரியவில்லை வட்டப்பாதையில் நகர்கின்றன... ஒவ்வொரு நொடியின் தலையிலும் உன் நினைவுகளில் ஒன்றை ஏற்றி அனுப்புகிறேன்... விடிவதற்குள் அத்தனையும் என்னிடமே வந்து இறக்கி வைத்துவிட்டு செல்கின்றன...

பதித்துச் செல்கிறாய்...

என்மேல் கவிழும் இரவு என்மேல் இருள் பூசுவதில்லை... என்மேல் பொழியும் நிலவு என்னில் ஒளி கூட்டுவதில்லை... நீயோ கவிழ்வதுமில்லை பொழிவதுமில்லை... ஆனாலும் பதித்துச் செல்கிறாய் உன் நினைவுகள்...

அலையடிக்கும் கனவுகள்...

மணல்வெளியாய் மாறிப்போன நதியாக நான்... பெருமழைக்குப் பிறகான வெள்ளமென உன் நினைவுகள்... இரவின் கரைகளில் அலையடிக்கும் கனவுகள்...

எப்போதுமே இப்படித்தான்...

 நொடிக்கொருமுறை உருமாறும் மேகங்களென உன் நினைவுகள்... இரவுக்காற்று எப்போதுமே இப்படித்தான்...

விளையாடுகிறது காலம்...

 கட்டப்பட்டுதான் இருக்கிறது கயிறு... கழுத்தில் ஒருமுனை... கல்லில் மறுமுனை... மேய்கிறேன் நான்... கயிற்றில் முடிச்சுகள் போட்டு விளையாடுகிறது காலம்...

கஞ்சனாகிறேன்...

 பகலில் தொடங்கிய மழை இரவிலும் விடாது தொடர நடுங்கும் இருள் உன் நினைவுகளை இரவல் கேட்கும்போது ஏனோ நான் கஞ்சனாகிறேன்...

இந்த இரவும் கழிகிறது...

 எப்போதோ நீ சிந்திய புன்னகையை ஏதோவொரு நினைவுக்குள் பொதிந்து எங்கேயோ வைத்துவிட்டேன்... எங்கேயென்று தேடுவதிலேயே இந்த இரவும் கழிகிறது...

இலக்கு எப்போதும்...

 நாணிலிருந்து விடுபடும் அம்புகளாகும் உன் நினைவுகளின் இலக்கு எப்போதும் நானாகிறேன்...

எதிரெதிர் துருவங்களில்...

 என் நினைவுகளின் அடுக்கிலிருந்து ஒன்றை எடுத்து உன்னை தூசி தட்டுகிறேன்... இயல்பும் நினைவும் எதிரெதிர் துருவங்களில்...

தூறல்களாக...

 இந்த மழைகூட உன்னைப்போலதான்... பொழிவதா வேண்டாமா என தயங்கியபடியே விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது தூறல்களாக...

குளிர் சுமக்கும் காற்று...

 இருளில் பெய்யும் மழையை இமைகளுக்குள் எடுத்து வருகிறது குளிர் சுமக்கும் காற்று...

வேறென்ன செய்வது..

 முழுஇருளுக்குள் மூச்சுத்திணறும்போது ஒளிக்கீற்றுகளுக்கான வழிகள் தேடும் விழிகளை விரல்களே குத்திவிட்ட பிறகு இருளுக்குள் கரைவதைத் தவிர வேறென்ன செய்வது..

யோசிக்கிறது உலகம்...

 மெத்தையின்மீது விரிப்பொன்றை விரிப்பது போல வானப் படுக்கையில் இருள் விரிக்கிறது இரவு... எப்படி உறங்குவதென யோசிக்கிறது உலகம்...

தீருவதேயில்லை..

 பிரிந்தபின் புரிகின்ற தீராப் பெருங்காதல் இணையும் வாய்ப்பு இல்லையென்று புரிந்தபின்னும் தீருவதேயில்லை..

நீயில்லா வாழ்வு...

 நிலவில்லா வானமென்றே நினைத்திருந்தேன்... இப்போதுதான் புரிகிறது நீரில்லா உலகென்று... நீயில்லா வாழ்வு...

நடந்து நடந்து...

நடந்து நடந்து களைத்த கால்கள் நகர முடியாமல் முள்வெளியில் நிற்கும் வேளையில் கடந்து வந்த புல்வெளிகளும் பூங்காக்களும் கண்களை நிறைக்க குருதி வழியும் கால்களோடு முடிகிறது பயணம்...

எதை வைத்து திரையிடுவாய்...

 இப்போதெல்லாம் உன் காட்சிப்புலத்தில் நானிருப்பதை உன் கண்கள் விரும்புவதில்லை... உன் பேச்சின் பொருளாக நானிருப்பதை உன் உதடுகள் பொறுப்பதில்லை... இருந்துவிட்டுப் போகட்டும்... விழிகளிலும் மொழிகளிலும் விடுபட்ட என்னை நினைவுகளாக ஏந்திவரும் இரவுக்கு எதை வைத்து திரையிடுவாய்...

வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை...

 தண்ணீரில் துள்ளும் மீனாக இருந்த என்னை வெந்நீரில் வேகும் மீனாக்கி வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை...

பலியாகிப் போவதென்னவோ...

 தூங்கும் புலியை இடறிச் செல்லும் கால்களென உன் நினைவுகளை இடறிச் செல்லும் இரவுகள்... பாவம் பலியாகிப் போவதென்னவோ அப்பாவி உறக்கம்தான்...

என்னை வைத்து விளையாடுகிறது...

 பொம்மை வைத்து விளையாடும் சிறுகுழந்தையென என்னை வைத்து விளையாடுகிறது உன் நினைவு...

விடியல் எனக்கில்லை...

 உன் முகம் பார்க்காமல் உறங்கும் இரவுக்குப் பிறகான விடியல் எனக்கில்லை...

கரைகிறது இரவு...

 உருகும் பனியைப்போல கரைகிறது இரவு... உன் நினைவுகளின் வெப்பத்தில்...

வானம் பார்க்கின்றன...

 அனலெனத் தகிக்கும் வெயிலில் காயும் மணல்வெளியில் நடக்கிறேன்... இருளடைந்த விழிகளில் சலனங்கள் ஏதுமில்லை... கால்கள்தான் மேகங்கள்தேடி வானம் பார்க்கின்றன...

வெண்மையாக இருக்கட்டும்...

 கற்பனை மரமெங்கும் கவலைக் கரையான்கள்... இறக்கும் தருவாயில் எழுதுகோல்... வரிகளேதும் படராமல் படபடக்கும் வெற்றுக் காகிதமேனும் வெண்மையாக இருக்கட்டும்...

வசப்படவில்லை வழக்கம்போல...

சுருள் சுருளாக உன் நினைவுகள்... சுற்றிச் சுற்றி வருகிறேன் நான் புதிரின் நடுவே நிற்பவன் போல... அருகிலேயே இருக்கும் விடையென நீ... வழிகள்தான் வசப்படவில்லை வழக்கம்போல...

இருள்கொட்டி செல்கிறது இரவு...

இரைதேடி நகரும் எறும்பொன்று எல்லாப் பக்கங்களிலும் நுகர்வதுபோல திசைகளனைத்திலும் இருள்கொட்டி செல்கிறது இரவு...

தண்ணீரென நான்...

நிலையில்லா நிலவு பார்த்து முறுவலிக்கும் அல்லி மலரென நீ... சலனமின்றி தாங்கி நிற்கும் தண்ணீரென நான்...

நகர முடியாமல்...

 இரை விழுங்கும் பெரும் பாம்பென மெல்ல மெல்ல பகல் விழுங்கியபின் நகர முடியாமல் கிடக்கிறது இரவு...

நீரூற்ற ஏனோ மறுக்கிறாய்...

சொற்களில் வெப்பம் தோய்த்து வீசுகிறாய்... என் இதயம் கருகும் வாசனை நுகர்ந்த பின்னும் நீரூற்ற ஏனோ மறுக்கிறாய்...

நீயன்றி வேறேது...

உன் நினைவுகளைக் குழைத்துக் கட்டிய இரவுமாளிகையில் எப்போதும் எரியும் ஒளிவிளக்கு நீயன்றி வேறேது...

விழலுக்கு இறைக்கும் நீர்...

நெஞ்சத்தில் ஏற்றிவைத்து கொண்டாடுவோர்க்கு அளந்தளந்து ஊற்றப்படும் அன்பு கொஞ்சமும் மதிக்காதோரிடம் கொட்டப்படுகிறது... விழலுக்கு இறைக்கும் நீர்...

எங்கே ஒளித்து வைப்பாய்...

 சொற்களை தொண்டைக்குழியில் வைத்துவிட்டு மௌனங்களால் மூடுகிறாய்... இரவுகளில் கனவுகள் வளர்ந்து பூக்கும் பூக்கள் உன் உறக்கத்தை சுற்றிலும் உதிர்ந்து கிடப்பதை காலையில் எங்கே ஒளித்து வைப்பாய்...

விழிக்கவே மனமில்லை...

உன் முகம் காண விழிகள் மூடினேன்... விடியலில் உறக்கம் கலைந்த பின்னும் விழிக்கவே மனமில்லை...

ஓடையாகிறது இரவு...

அணைதேங்கிய நீரெல்லாம் மடை கண்டதும் பாய்வதுபோலவே உன் நினைவுகளும்... ஓடையாகிறது இரவு...

பிறகெப்படி...

சுழலி சுழல் நீ சுழல்கிறேன்... குழலி குழல் நீ இசையாகிறேன்... அனலி அனல் நீ எரிகிறேன்... புனலி புனல் நீ கரைகிறேன்... இத்தனைக்கும் பிறகெப்படி மிச்சமிருப்பேன் நான்...

ஏமாற்றங்கள் சுமக்கும் வாழ்க்கை...

எதிர்பார்ப்புகளின் இறுதிப் பயணத்தில் தொடங்குகிறது ஏமாற்றங்கள் சுமக்கும் வாழ்க்கை...
 நீ நான்... நீலம் வானம்... ஒளிரும் பகல் வாழ்வு... கருமேகங்களிடம் யார் இதைச் சொல்வது....

உன் நினைவுகளோடு நான்...

 மொழிகளுக்கான வழிகளை நீ மூடிவிட்ட பிறகு காற்றோடு கதைகள் பேசி களித்திருக்கும் பித்தனென உன் நினைவுகளோடு நான்...

விண்ணில் பறக்கிறேன் நான்...

வெள்ளைப் புறாவின் இறக்கைகள் விழிகளுக்குள் விரிய விண்ணில் பறக்கிறேன் நான்...

பொழிகின்றன என்மீது...

கண்ணிமைகளுக்குள் என்னை வைத்து வெண்பஞ்சு மேகங்களைத் தூதனுப்புகிறாய்... நீரில்லையெனினும் உன் நினைவுகளை சுமந்துவந்து பொழிகின்றன என்மீது...

இரவுகளும் பகல்களும்....

 உன் விழிகள் வீசிச்செல்லும் புன்னகையில் நகரமுடியாமல் ஒட்டிக்கொள்கிறேன் நான்... என்னை சுற்றி வருகின்றன இரவுகளும் பகல்களும்....

சத்தமின்றி நுழைகிறது...

 சமையலறைக்குள் புகுந்த பூனையென உன் நினைவு சத்தமின்றி நுழைகிறது என் இரவில்... கடகடவென உருளும் பாத்திரங்களாக கனவுகள்...

கலைகிறது உறக்கம்...

சிறு தூறல்களில் நனைந்து குளிரும் இரவில் சிலிர்க்கும் உன் நினைவுகள் சிதறும் கனவுத் துளிகளில் கலைகிறது உறக்கம்...

இரவில் நுழைகிறது கனவாக...

முட்டைக்கு உள்ளிருந்து முட்டுகின்ற பறவைக்குஞ்சென இதயம் தட்டும் உன் நினைவு... உடையாத இதயத்தை ஊடுருவி இரவில் நுழைகிறது கனவாக...

நாணுமோ நிலவு....

 ஒதுங்குகிறாய்... ஒளிந்து கொள்கிறாய் முகிலுக்குள் முகம் மறைக்கும் முழுமதிபோல... நிலம்காண நாணுமோ நிலவு....

சுமையாகிப் போகின்றன...

சுற்றும் சக்கரங்கள் தூரம் கடக்கின்றன... சோர்ந்த சக்கரங்கள் சுமையாகிப் போகின்றன...

என்ன செய்வாய்...

விழிகளிலிருந்து நழுவுகிறாய் நீ விரல்களுக்கிடையே நழுவும் காற்றைப்போல... நான் சுவாசிக்கும்போது என்ன செய்வாய்...

களிம்புகள் என்னசெய்யும்...

 காயத்தின் காயங்களை களிம்புகள் ஆற்றும்... காலம் செய்யும் காயங்களை களிம்புகள் என்னசெய்யும்...

எப்போது கூட்டிச் செல்வாய்...

 கடந்து செல்லும்போது பாராதது போலவே நடந்து செல்கிறாய்... பாசாங்கு போதும் இங்கேயே நிற்கும் உன் இதயத்தை எப்போது கூட்டிச் செல்வாய்...

களைப்பு உணர்வதில்லை...

 கனி உண்ணும் பறவைகளைத் தாங்கும் கிளைகள் களைப்பு உணர்வதில்லை... களிப்பு உணர்கின்றன...

இத்தனை புரவிகள் போதாதா...

சிறு புன்னகை சில கையசைப்புகள் பேசும் விழிகள் வீசும் மொழிகள்... இத்தனை புரவிகள் போதாதா இந்த இரவை இழுத்துச்செல்ல...

வேறென்ன செய்யமுடியும்...

 கனத்த மலைப்பாம்பு கொழுத்த இரையை வளைத்துப் பிடிப்பதுபோல என் உறக்கம் நெரிக்கும் உன் நினைவுகள்... விழித்திருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் என்னால்...

தயக்கத்தில் வாழ்க்கை...

 பயணிக்கும் பாதைகளின் கதவுகளை பூட்டிவிட்டு சாவிகளைத் தொலைக்கிறது காலம்... திறப்பதா உடைப்பதா தயக்கத்தில் வாழ்க்கை...

பொருளற்றுப் போகின்றன...

தொலைவுகள் பொருளற்றுப் போகின்றன... உன் நினைவுகளோடு பயணிக்கும் நெடுந்தூரப் பயணங்களில்...

பார்வையாளர்களாக...

 உருளும் பந்து என் உறக்கம்... ஓயாமல் உதைக்கும் கால்கள் உன் நினைவுகள்... இரவின் எல்லைகளுக்குள் எப்போதும் விளையாட்டு... அத்தனை கனவுகளும் பார்வையாளர்களாக...

எத்தனை நேரம்தான்...

 பசித்த வயிறும் புசிக்கத் துடிக்கும் வாயுமாக வேட்டைவிலங்கென பாயும் உன் நினைவுகள்... பாவம் இரவின் அடர்இருளில் எத்தனை நேரம்தான் ஒளிந்திருக்கும் என் உறக்கம்...

நினைவுகளின் கரங்கள்...

 விழிகளின் ஓரம் வழிகின்ற ஈரம் கன்னங்கள் உணர்வதற்குள் துடைக்க நீளும் நினைவுகளின் கரங்கள்...

உளியின் வலியை...

 சின்னஞ்சிறு சுத்தியலும் சிரிக்கும் சிலையும் உணர்வதில்லை செதுக்கிய உளியின் வலியை...

பாவம் என் உறக்கம்...

 ஒளிக்கதிர்களென உன் நினைவுகள் ஓயாமல் பாய்கின்றன... இந்த இரவு மட்டுமேனோ குவியாடி ஆகிப்போகிறது... பாவம் என் உறக்கம்...

ஞாலத்தில் பறவைகள்...

 இறக்கைகள் இருக்கின்றன என்பதற்காக ஞாயிறு நோக்கி பறப்பதில்லை ஞாலத்தில் பறவைகள்...
 எனக்குள் என்னைத்தேடி இல்லாமல் திகைத்துநிற்க எங்கே தொலைத்தாயோ அங்கேயே தேடென்றது ஒரு குரல்... உனக்குள் தேடித்தேடி ஒளிந்திருந்த என்னைக் கண்டேன்...

நகர்கிறது இரவு...

 இறகுகள் உதிர்த்த ஈசலொன்று வெறுந்தரையில் திசைதெரியாமல் ஊர்வதுபோல இருளுக்குள் நகர்கிறது இரவு...

கரைவதில்லையென அறியாமல்...

 உன்னெதிரில் நான் நிற்க இமைகளை மூடிக்கொள்கிறாய்... உன்னிடத்தில் நான் வினவ இதழ்களை மூடிக்கொள்கிறாய்... விழிகளுக்கும் மொழிகளுக்கும் திரை போடுகிறாய்... கழுவுவதால் கற்சிலையென்றும் கரைவதில்லையென அறியாமல்...

அதனை உணர்வார்...

 அதனில் இருந்து அதனையே தேடுவார் அதனையறியாமல் எதனிடம் உள்ளதென்று ஏதேதோ சிந்திப்பார்... அதனில் அமிழ்ந்து அதனில் கரைந்து அதுவாகவே மாறுவார் அதனை உணர்வார்...

எட்டிப்பார்க்கிறது இரவு...

 சிறு சுவரின் பின்னிருந்து நான் பார்க்காத நேரத்தில் என்னைப் பார்க்கும் உன்னைப் போலவே இருளுக்குளிருந்து எட்டிப்பார்க்கிறது இரவு...

விழிக்கிறது இரவு...

 பெருங்காற்றில் சீறித் தெறிக்கும் சிறு தூறல்கள் இருள் முகத்தில் அறைய விழிக்கிறது இரவு...

விலகியபின் மறைகிறேன்..

 மாலை வானம் நான்... மஞ்சள் வெயில் நீ... உறையும்வரை நிறைகிறேன்... விலகியபின் மறைகிறேன்..

விரிதலுமில்லை ஒடுங்கலுமில்லை...

 உள்ளிருந்து வெளி நோக்க விரிகிறது... வெளியிலிருந்து உள் நோக்க ஒடுங்குகிறது... விரிதலும் ஒடுங்கலும் உணர்ந்தபின் விரிதலுமில்லை ஒடுங்கலுமில்லை...

மறப்பதில்லை பூக்கள்...

 இனிப்பில்லா இலைகளுக்கிடையே மலர்ந்தாலும் இதழ்களுக்குள் தேன் வைக்க மறப்பதில்லை பூக்கள்...

சிதையாமல் காப்போம்...

 உயிர்களைக் கொடைதந்து மீட்டெடுத்த உரிமைகள் காக்க உறுதியேற்போம்... செந்நீர் பாய்ச்சி வளர்த்த செடியை சிதையாமல் காப்போம்...

புறம் மிளிர பொன்னாகும்...

 உள்ளுணர ஒளி பெருகும்... ஒளி பெருக உள்ளொளிரும்... உள்ளொளிர புறம் மிளிரும்... புறம் மிளிர பொன்னாகும்...

உதடுகள் மூடிக்கொள்ளும்..

 உள்ளதை உள்ளம் அறியும்... உள்ளதெல்லாம் உள்ளம் அறிந்தபின் உதடுகள் மூடிக்கொள்ளும்..

கடலும் நீ.. கரையும் நீ...

 உன் நினைவுகளின் பேரலைகளின் மேல் நீர்ச்சறுக்கு விளையாடுகிறேன்... கடந்தாலும் கவிழ்ந்தாலும் உன்னிடத்தில்... கடலும் நீ கரையும் நீ...

மிஞ்சுவது கரி மட்டுமே...

 நெருப்பென வெறுப்பள்ளி வீசுபவர்கள் வீசட்டும்... நெருப்பொன்றும் நிரந்தரமல்ல... நெருப்பணைந்தபின் அங்கே மிஞ்சுவது கரி மட்டுமே...

கலைகிறது கனவு...

 என் விரல்களோடு உன் விரல்கள் கோர்த்து சிறுதூரம் செல்லும்முன் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்து பொழிகிறது... முகத்தில் தெறிக்கும் நீர்த்துளிகளில் உறக்கம் கரைய கலைகிறது கனவு...

கால்களை தயார் செய்வோம்...

 முகடுகள் இறங்கிவந்து முத்தமிடுவதில்லை பாதங்களை... தளராத கால்களை தயார் செய்வோம்...

உனக்கெப்படி மனம்வரும்...

 உன்னிடமிருந்து என் நினைவுகளை நீ எடுத்தெறிய மாட்டாயென்பது எனக்குத் தெரியும்... பறவையிடமிருந்து இறக்கைகளைப் பிய்தெடுக்க உனக்கெப்படி மனம்வரும்...

எழுகிறது வாழ்க்கை...

 ஆசைகளின் கல்லறையை அடித்தளமாக்கி அதன்மேல் எழுகிறது வாழ்க்கை...

வ்ழியாமலா போகும்...

 தேங்கும் நீரில் சேரும் அழுத்தத்தை தாங்கும் அணையின் கனத்த சுவரென மௌனம் வளர்க்கிறாய்... அணை நிரம்பும்போது உடையவில்லை எனிலும் வ்ழியாமலா போகும்...

குடை விரிக்கிறார்கள்...

 அன்பு வறண்டுபோன இடத்திலிருந்து அன்பின் துளிகளுக்காக காத்திருப்பவர்கள் பேரன்பை பெருமழையாகப் பொழிபவரிடம் குடை விரிக்கிறார்கள்...

சரியாக விளங்கவில்லை...

 சரியானதை சரியாக சரியான நேரத்தில் செய்வதாக நினைத்து சரியாக செய்தபின் தவறாகிப் போகும்போது சரியெது தவறெது என சரியாக விளங்கவில்லை...

என் நினைவுகளில் மிளிர்கிறாய்....

 மிச்சம் ஏதுமின்றி மச்சக்கண்களால் என்னை இழுக்கிறாய்... ஒச்சம் ஏதுமின்றி ஒளிரும் மணியாக என் நினைவுகளில் மிளிர்கிறாய்....

ஏறக்குறைய மரணம்...

 பிறரென்ன நினைப்பாரோவென தான்நினைத்து சுயம் தொலைக்கும் தருணம்... ஏறக்குறைய மரணம்...

நீ உணராததுபோலவே...

 அடர்நிறை விண்மீனொன்று அருகிலிருக்கும் தன்னை ஈர்ப்பதை உணர்வதில்லை விண்மீனை சுற்றும் கோள்... என் நெஞ்சில் அடர்ந்திருக்கும் உன் நினைவுகள் உன்னை ஈர்ப்பதை நீ உணராததுபோலவே...

பூக்களே பூக்கட்டும்...

 என் பாதங்கள் நடக்கும் பாதைகளெங்கும் முள்ளெடுத்து எறிபவர் விரல்களிலும் பூக்களே பூக்கட்டும்...

எத்தனை நேரம்தான்...

 மனதுக்குள் விருப்பங்களை ஒளித்து வைக்கிறாய்... மண்ணுக்குள் வேர்கள் மறைக்கும் மரம்போல... என் நினைவுகள் நீரூற்ற கண்கள் மலர்வதை எத்தனை நேரம்தான் மூடிவைப்பாய் இமைகளால்...

தெரியாதவன் மனிதனில்லை...

 அளவு மாறாமல் அள்ளிக் கொடுத்தாலும் வெண்ணையும் சுண்ணாம்பும் வேறுவேறுதான்... வேறுபாடு தெரியாதவன் மனிதனில்லை...

ஏன் நீ பொய் பூசுகிறாய்...

 என்னை வெறுப்பதுபோல நடிக்கிறாய்... உன் விருப்பங்களை மறைக்கிறாய்... உள்ளத்தின் ஓசைகளை உன்கண்கள் பேசும்போது உதடுகளில் ஏன் நீ பொய் பூசுகிறாய்...

ஒட்டிக்கொள்ள நியாயமில்லை...

 ஒதுக்கி வைத்துவிட்டு உதாசீனம் செய்துவிட்டு பட்டியலிட குறைகளைத் தேடுகிறார்கள்... வெட்டிவிட நினைக்குமிடத்தில் ஒட்டிக்கொள்ள நியாயமில்லை...

உறுத்துவதேயில்லை ஒருபோதும்...

 முள்அள்ளி வீசுகிறது இரவு... மலர் அள்ளித் தூவும் உன் நினைவுகளின் பாதையில் நடக்கும் என் கனவுகளின் கால்கள் உறுத்துவதேயில்லை ஒருபோதும்...

நானெங்கே தூங்குவது...

 உன் நினைவுகளை தோரணங்களாக்கி தொங்கவிடுகிறது இந்த இரவு... திருவிழா கலகலப்பில் நானெங்கே தூங்குவது...

விடிகிறது இரவு...

 பல்லுடைந்த புலியின் பசியைப்போல பெருகும் உன் நினைவுகள் என்னைத் தின்னத் தொடங்க விடிகிறது இரவு...

கடக்க முடியவில்லை...

 நான் சொற்களைத் தூவுகிறேன்... நீயோ மௌனங்களை எறிகிறாய்... காயப்பட்டாலும் கடக்க முடியவில்லை உன் நினைவுகளை...

எப்படித் தெரியும்...

 வானம் விரிவென்று பறவைகள் அறியும்... பாவம் கிணற்றில் வாழும் தவளைகளுக்கு எப்படித் தெரியும்.

மிச்சமிருக்கிறது உன் நினைவு...

 கல்லொன்றை சிலையாக்கும் தச்சனென என் இரவைச் செதுக்குகின்றன கனவுகள்... விடியலில் மிச்சமிருக்கிறது உன் நினைவு...

உன் நினைவுகளை கட்டுகிறாய்...

 என் விழிகளை உன் இமைகளால் மறைக்கிறாய்... என் இதயத்தை உன் நினைவுகளால் நிறைக்கிறாய்... என் கற்பனைகளுக்கு இறக்கைகள் ஒட்டுகிறாய்... என் கனவுகளில் உன் நினைவுகளை கட்டுகிறாய்...

விடை தருமோ காலம்...

 விடை தேடி திரிகிறேன்... விடைபெறும் முன்னேனும் விடை தருமோ காலம்...

ஒளிந்துகொள்கின்றன...

 மச்சக்கண்ணில் நிரம்பியிருக்கும் கனவுகள் காலையில் வழியத்தொடங்க மிச்சமிருக்கும் கனவுகளுக்குள் ஒளிந்துகொள்கின்றன என் நினைவுகள்...

சில சொற்கள்...

 சில சொற்கள் புண்ணாக்கும்... சில சொற்கள் பொன்னாக்கும்..

ஒருபிடி எடுக்கிறேன்...

 கடல்நீரில் ஒருகையள்ளி கைகளுக்குள் கடலென்று குதூகலிக்கும் குழந்தையென நெஞ்சில் கொட்டிக்கிடக்கும் உன் நினைவுகளில் ஒருபிடி எடுக்கிறேன் இரவுகளில்...

ஒளிர்கிறது இரவில்...

 என் நெஞ்சில் நிலைகொண்ட உன் நினைவுகளை படியெடுத்த இளமதி நிறைமதியாகி ஒளிர்கிறது இரவில்...

காற்றும் கனமழையும்...

 காற்றும் கனமழையும் கைகோர்த்த இரவொன்று போர்த்தியிருக்கும் இருளெனக் கிடக்கிறது இதயம்... உன் முகம்காணா பொழுதுகளில்...