Posts

Showing posts from August, 2017

இரவு...

ஒளியோடும் ஒலியோடும் ஓடிய பொழுதடங்க இருளோடும் கனவோடும் இமைகள் தேடுகிறது இரவு...

இரவு...

பரந்த நிலத்தையும் பாயும் நீரையும் கோடுகள் கிழித்து கூறுகள் போட்டபின்னும் குறுக்குச்சுவர்களையும் குத்தும் வேலிகளையும் கடக்கும் காற்றில் கலந்து கரையும் இரவு...

இரவு...

விழிகளோடு இமைகள் பேசும் ரகசியம் என்னவென்று கனவுகளிடம் கேட்டுச் செல்கிறது இரவு...

இரவு...

ஒளியில் பகல் எழுதிய கவிதையை இருளில் மொழிபெயர்க்கிறது இரவு...

இரவு...

தடம் மாறிப் போனதோ நிலவுப் படகென்று இருட்கடலில் விழுந்து நிறம் மாறிப் போன வானில் தேடி வருந்தி அலைகிறது இரவு...

இரவு...

ஒளியின் மேல் கவிழும் இருளில் உறக்கம் தேடும் கண்களுக்குள் ஒளியக் காத்திருக்கும் கனவுகளில் கரையக் காத்திருக்கிறது இரவு...

இரவு...

மலர்கள் உதிர்க்கும் மரங்களென கனவுகள் சிந்தும் உறக்கம் தாங்கி இருள்மேல் நிற்கிறது இரவு...

இரவு...

விழி வீட்டில் குடியேறிய உறக்கம் நினைவுப் பலகணி திறந்து வைத்து கனவுகளை ரசிக்கையில் கடந்து போகிறது இரவு...

இரவு...

கருமேகங்கள் தூவிச்செல்லும் சிறு தூரல்களில் குளித்த இலைகள் ஒரு காற்றில் உதிரும்போது ஒவ்வொரு இலையிலும் நிலவு தூங்குவதை வியந்து பார்த்து நனைந்து நகர்கிறது இரவு...

இரவு...

உருளும் பொழுது உருட்டி வந்த இருண்ட வானில் விண்மீன்கள் விதைத்து வெளிச்சம் வளர்க்கும் இரவு...

இரவு...

வெப்பத்தில் துவண்ட வெயில் பகலின் எரியும் விழிகளை மூடும் இருள்இமைகளின் மேல் நடந்து செல்கிறது இரவு...

இரவு...

இருளுக்குள் ஒளிந்த இருளைத் தேடி இருளுக்குள் இருள் நடக்க வெளிச்சம் தேடி இருள் கடக்கிறது இரவு...

ஒரு கோப்பைத் தேநீரில்...

அது ஒரு அந்திப் பொழுது... ஒரு கோப்பைத் தேநீரில் ஒரு மிடறு விழுங்கினேன்... தொண்டைக் குழியை கடந்தது கரைந்த காடு... இரைப்பைக்குள் நிலைகொள்ள இயலாமல் தவித்தது கடந்தகால காடு... இறந்த காட்டில் இருந்த உயிர்களின் கூக்குரல் செவிப்பறைகள் கிழித்து வெளியேறியது... எரியும் தாவரங்களின் அடர்புகையால் நுரையீரல்கள் நிரம்பி நாசித்துளைகள் புகைக்கூண்டுகளாயின... பெருமரத்தின் நெடுங்கிளைகள் தப்பி நீண்டது வாயின் வழியே... அடர்வனத்தின் ஆழத்திலிருந்து கடைசியாய் வந்தது உயிர்க்காற்று நிலைகுத்திய கண்களின் வழியே... இப்போதெல்லாம் தேநீர்க் கோப்பைகளை நான் தொடுவதேயில்லை...

இரவு...

காட்சி மொழிக்கு கண்களுக்கு தடைபோட்டு இமைகள் திரையிட கனவு மொழியில் கதைகள் சொல்கிறது இரவு...

இரவு...

முகில் திரை விலக்கி முகம் காட்டும் மின்னல் ஒளியில் நிலம் கண்டு விழும் நீர்துளியில் நனையாமல் நடக்கிறது இருள் நனைந்தபடியே கடக்கிறது இரவு...

இரவு..

இருள் மரம் கிளை பரப்ப இலைகளான விண்மீன்களை நிலவொளியில் நனைத்து நகர்கிறது இரவு....

இரவு...

நினைவுகளும் கனவுகளும் இணையாகவும் எதிராகவும் பயணிக்கும் புதிரான சாலை இரவு...

இரவு...

அடர் இருளில் வெள்ளி முத்துக்களை அள்ளித் தெளித்து எண்ணி எடுக்கச் சொல்லி வெண்நிலவை அனுப்பி வேடிக்கை பார்க்கிறது இரவு...

இரவு...

விடை தெரியா வினாக்களால் நிரம்பிய வினாத்தாளென விரிந்த வானத்தை வாசித்தபின் புரியவே இல்லையென இருள் எழுதிச் செல்கிறது இரவு...

ஆதார் அட்டை

மகனும் மகளும் வந்தாச்சு பேரன் பேத்தியெல்லாம் பாத்தாச்சு பாலும் ஊத்தியாச்சு பாவம் கிழவி உசிரு இன்னும் போகல பாசக் கயிரோட வாசல்ல நின்னு பாத்துக்கிட்டே இருக்காரு எமதர்ம ராசா ரெண்டு நாளா என்னனு விசாரிச்சா இப்பதான் தெரிஞ்சுது கிழவிக்கு இல்லையாம் ஆதார் அட்டை...

இரவு...

கனத்த நினைவுகள் கண்களுக்குள் கனலாக இமைகளுக்கு வெளியே இருளாய் உருகுகிறது இரவு...

இரவு..

வெள்ளிகளாய் பூத்து வெண்ணிலவாய் காய்த்து இருளெனப் பழுத்தபின் கனவு விதைக்கிறது இரவு...

விடியல்

இரவோடு முடியட்டும் இன்னல்கள் பொழுதோடு விடியட்டும் இன்பங்கள் நாளெல்லாம் தொடரட்டும் நன்மைகள்...

இரவு...

உறைந்த மௌனத்தின் ஊடாக நடுங்கும் இருளில் நகர்கிறது இரவு...

விடியல்

மெல்லிய பனியில் சோம்பல் முறிக்கும் சூரியன்... அகம் குளிர அழகாக ஆரம்பமாகிறது நாள்...

விடியல்

இளங்காலையில் எழும் ஞாயிறு இருள் அகற்றட்டும்... வானில் மட்டுமல்ல வாழ்விலும்...

நிலவு...

இருள் மூடிக்கிடக்கிறது இரவு வானம்... இமைகளுக்குள் எங்கேயோ ஒளிந்திருக்கிறது நிலவு...

விடியல்

இருள்போர்வை எடுத்தெறிந்து இளம்பரிதி எழுந்து வந்து உலகெங்கும் ஓளிநிரப்பும் உன்னத நாள் தொடங்குகிறது... உற்சாகமாய் தொடருங்கள்...

இரவு...

களைத்த விழிகள் கண்ணயர உழைத்த கைகள் களைப்பாற ஓடிய கால்கள் ஓய்வெடுக்க இருள் விரித்து காத்திருக்கிறது இரவு...

அம்மா

அம்மா... இரு சுமைகளை ஒருசேர சுமந்தவள்... கருவை வயிற்றிலும் கருவின் கனவை கண்களிலும்...

சூரியன்

கார்மேகங்கள் கூடிநின்று கதிருக்கு திரைபோட்டாலும் வெளிச்சம் வீசிச்செல்கிறான் வினைதவறா பகலவன்...

இரவு...

கருமுகிலுக்கும் கனத்த தூறலுக்கும் இடையே இருள்குடையை பிடித்தபடி நடக்கிறது இரவு...

விடியல்

பொன்னிறத்தில் வான்சிரிக்க புள்ளினங்கள் இறக்கை விரிக்க பூக்களெல்லாம் இதழ்கள் விரிக்க இன்றைய நாள் இனிதே தொடங்குகிறது...

விடியல்

வெண்ணிலவும் வீதிஉலா வரவில்லை விண்மீன்களோ கார்கால விடுமுறையில்... வெளிச்சமில்லா இரவு வேகமாய் நகர்கிறது விடியலை நோக்கி...

விடியல்

மேகத்தடுப்புக்கள மெல்ல திறக்க மெல்லிய காற்று சாமரம் வீச மின்னும் புன்னகையோடு கீழைச் சூரியன் கிளம்பிவிட்டான்...

இரவு...

அந்திச்சூரியனுக்கும் அதிகாலை வெளிச்சத்திற்கும் இடையே இருளால் நெய்யப்பட்டது இரவு...

விடியல்

கதிரவனைக் காணாமல் கருத்துப்போன வான்மகளின் கன்னத்தில் வெட்கரேகைகளாய் வெளிச்சக்கீற்றுக்கள்...

இரவு...

பகலைத் துரத்தி களைத்து அமர்ந்து இருளில் இளைப்பாறுகிறது இரவு...

சூரியன்

வங்கக்கடலில் குளித்தெழுத்து வானவாசலில் கதவுகள் திறந்து ஒளித்தேரில் உலா கிளம்புகிறான் உற்சாக சூரியன்

இரவு...

விரிந்த வானில் பிறந்த விண்மீன்களின் சிற்றொளி பிடித்து இருளைக் கடக்கிறது இரவு...

செவ்வாய்...

வெள்ளியும் திங்களும் வீட்டிற்கு போய்விட விண்ணில்  ஞாயிறு வெளிச்சமேற்ற சோகங்களுக்கு விடைகொடுத்து சுகமாய் தொடங்கட்டும் செவ்வாய்...

இரவு...

சிறு சிறு தூறல்களுக்கும் சில்லென்ற காற்றுக்குமிடையே மேகத்தில் நிலவு துயில்கொள்ள மெல்ல நகர்கிறது இரவு...

சூரியன்

வான வயலில் விண்மீன்களை விதைத்தது நிலவு நேற்றைய இரவு... என்ன ஆச்சரியம்...! முளைத்தது சூரியன்...

இரவு...

இருகரை உடைத்து இருள்நதி பாய நிலவு நீந்துவதை நின்று ரசிக்கிறது இரவு...

விடியல்

ஒளிக்கதிர்கள் ஊடுருவ வானம் வண்ணம்மாற வளமான நாள் தொடங்குகிறது வாய்ப்புகளை வழங்கியபடி...

இரவு...

விண்மீன் பூங்காவில் வெண்ணிலவு தேவதை ஒய்யாரமாய் உலாவர உட்கார்ந்து வியக்கிறது இரவு...

விடியல்

விண்ணிறைத்த இருள் வெட்கி மறைய வெளிச்ச அலையில் விண்மீன்கள் கரைய இளம் வெப்பத்தொடு தொடங்கும் இன்றையநாள் நிரம்பட்டும் இன்பங்களால்...

இரவு...

ஓய்வுக்கு கெஞ்சும் உடம்பு... உறக்கத்திற்கு கெஞ்சும் கண்கள்... ஊர்வலத்திற்கு காத்திருக்கும் கனவுகள்... ஆழ்ந்த உறக்கத்திற்கு ஆசிர்வதிக்கும் இரவு...

விடியல்

இதயத்தில் எழுந்து இமைகள் திறந்து எங்கும் பரவி பிரகாசிக்கட்டும் ஓளி...

இரவு...

நீர்சுமக்கும் கார்மேகங்கள் நிலவையும் சுமந்துசெல்ல எங்கே நிலவென்று இருட்டுக்குள் தேடுகிறது இரவு...

விடியல்

தென்றல் தாலாட்டும் இரவுகளுக்குப் பின் மட்டுமல்ல புயல் கடந்து போனபின்னும் புலரும் பொழுது...

இரவு...

நிற்பதற்கு நேரமின்றி நில்லாமல் ஓடும் காலத்தின் கை பிடித்து இருள் கடக்கிறது இரவு...

இரவு...

காட்சிகளின் களைப்பு கண்களில் இருந்து அகலட்டும்... இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் நிரம்பட்டும் உறக்கம் மட்டும்...