Posts

Showing posts from November, 2020

வேறென்ன தெரியும்..

 நீ கண்களுக்கு இடும் மையிலிருந்து எழும் என் இரவுகளின் கனவுகளுக்கு உன் கண்களைத் தவிர வேறென்ன தெரியும்...

விடியலுக்குக் காத்திருக்கிறது...

 கருமேகங்களுடன் சண்டையிடும் கடுங்காற்றின் சுழலுக்குள் சிக்கிக்கொண்ட இரவொன்று விடியலுக்குக் காத்திருக்கிறது...

வழிகின்றன கனவுகளாக...

 ஓவியனின் தூரிகையில் ஒட்டிக்கொண்ட வண்ணங்கள் ஓவியமாக வழிவதுபோல நெஞ்சோடு ஒட்டிக்கொண்ட உன் நினைவுகள் வழிகின்றன கனவுகளாக...

நினைப்பதேயில்லை...

 கொடுங்காற்று கொண்டுவரும் மேகங்கள் கொட்டித் தீர்க்கும் கனமழை நிலம் தாங்குமாவென நினைப்பதேயில்லை...

கவனத்தில் கொள்கிறாயா என்ன...

 உன் நினைவுகளில் நானிருப்பதை நினைக்காதது போலவே நீயிருக்கிறாய்... காற்றிருப்பதை ஒவ்வொரு கணமும் கவனத்தில் கொள்கிறாயா என்ன...

சேர்த்தே சுமக்கும்...

 துடுப்புகள் திசைமாற்றித் தள்ளும்போது மாறும் பாதையில் பயணிக்கும் படகு கரை சேரவில்லையெனில் பழியையும் சேர்த்தே சுமக்கும்...

முயற்சிக்கிறேன்...

 நீ புன்னகைத்த பொழுதுகளை எடுத்து நீ இல்லாத இரவுகளில் நிரப்பியபின்னும் மிச்சமிருக்கும் இரவை உறக்கத்தால் நிரப்ப முயற்சிக்கிறேன்...

சுற்றம்...

 ஆற்று மீனெடுத்து ஆழிநீரில் சேர்த்துவிட்டு துடிப்பதை நடிப்பென்றே சொல்லுகிறது சுற்றம்...

என்ன செய்வது...

 உன் நினைவுகளின் விரல்களைப் பிடித்தபடியே உறக்கத்தின் ஊடாக இரவைக் கடக்க எண்ணுகிறேன்... இடையிடையே நிறுத்தி கதைபேசும் கனவுகளை என்ன செய்வது...

செக்குமாடுகள்...

 நெடுநேரம் நடப்பதிலொன்றும் குறைவில்லை... ஆனாலும் வட்டத்தைத் தாண்டுவதில்லை செக்குமாடுகள்...

என்ன செய்யப் போகிறதோ...

 கொழுத்த தவளையென என் உறக்கம் கனைக்கிறது... என்ன செய்யப் போகிறதோ உன் நினைவுப் பாம்பு...

கரை திரும்புவதில்லை

 கலங்கள் மிதக்கின்றனவென ஒதுங்கிப் போவதில்லை அலைகள்... அலைகள் தடைகளென கரை திரும்புவதில்லை கலங்கள்...

கிறங்குகிறேன்...

 இரவுப் பொழுதில் இதயம் வருடும் இளையராஜாவின் இசை போலவே உன் நினைவுகளும்... முன்னதில் உறங்குகிறேன் பின்னதில் கிறங்குகிறேன்...

நகர்கிறது வாழ்க்கை...

 உழுவையென உறும நினைக்கும் வேளையில் உடைந்த பல்லை நினைவூட்டி நகர்கிறது வாழ்க்கை...

அதிர்கிறது...

தொலைவில் தொடர்வண்டி வரும்போதே தடதடக்கும் தண்டவாளமென உன் நினைவுகள் என்னைக் கடக்கும் முன்னரே கனவுகளால் அதிர்கிறது இரவு... 

சோர்ந்து போவதில்லை...

 நீண்ட நதிகள் கடல் சேரும்போதும் சோர்ந்து போவதில்லை தண்ணீர்..

நகர முடியாமல்....

 நீ அருகில் இருக்கும் போது காலில் சக்கரம் கட்டும் காலம் ஏனோ நீ தொலைவில் இருக்கும் போது சோர்ந்து போகிறது நகர முடியாமல்....

அறியாமலேயே...

 நீ சொற்களை விழுங்கிவிட்டு மௌனம் நிரப்புகிறாய் நமக்கிடையே... அந்த மௌனம் சொற்களால் நிரம்பிக் கிடப்பதை அறியாமலேயே...

மெய்யுணர்ந்தேன்...

 மெய்யான மெய்யெதுவென மெய்யாகத் தேடினேன்... மெய்யே மெய்யில்லையென மெய்யுணர்ந்தேன்...

என்னை எப்படி...

 என்னிலிருந்து ஏனோ உன்னை தள்ளி வைக்கிறாய்... இருக்கட்டும் பரவாயில்லை... உன்னிலிருந்து என்னை எப்படி தள்ளி வைப்பாய்...

நம்பவில்லை என்றாலும்கூட...

 காட்சிப்புலத்திற்கு அப்பாலும் காட்சிகள் இருக்கின்றன... கண்கள் நம்பவில்லை என்றாலும்கூட...

என் உறக்கமெங்கும்...

 நீள இரவின் கருமைக்குள் உன் நினைவுகளைப் பூசிச்செல்கிறாய்... என் உறக்கத்தில் அவை ஒட்டிக்கொண்ட பின் திட்டுத்திட்டாக கனவுகள் என் உறக்கமெங்கும்...

மறுபடியும்...

 வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் கடந்து சென்றபின் மொட்டையாகிப் போன பயிர்ப் பரப்பென சமயங்களில் மாறிப் போகிறது வாழ்க்கை... அதனாலென்ன மறுபடியும் முளைக்காமலா போய்விடும் பயிர்கள்...

நகர்வதேயில்லை...

 நீ நடந்த தடங்களில் நிரம்பும் மணல் துகள்களுக்கு மனதில் மலையென்று நினைப்பு... இடத்தைவிட்டு நகர்வதேயில்லை...

சிதறுவது போல

 சேர்த்து வைத்த சில்லறைகள் மண் உண்டியல் உடையும் போது சிதறுவது போல கனவுகள் மாறிப் போன பின்னும் கூட நீளவே செய்கிறது வாழ்க்கை...

நனைந்தபின்னும் காய்கிறேன்...

 ஒற்றைக் கருமேகம் கொட்டிச் செல்லும் கோடி தூறல்களென நீ தெளித்துச் செல்லும் நினைவுகளில் மொத்தமாக நனைந்தபின்னும் காய்கிறேன்...

நம்பிக்கையால்...

 இலையுதிர் காலத்தின் இறுதியில் மொத்த இலைகளும் உதிர்ந்த மரத்தில் துளிர்க்கும் ஒற்றை இலை மரத்தை நிறைக்கிறது நம்பிக்கையால்...

உன்னைப் போல...

 உள்ளங்கை ரேகைகள் ஒருபோதும் உருமாறுவதில்லை நினைவுகளில் ரேகைகளாய் படர்ந்திருக்கும் உன்னைப் போல...

உன்னைப் பூசுகிறது...

 உன் நினைவுகளின் மீது நிறங்கள் பூசுகிறது இரவு... என் கனவுகளில் வண்ணங்களாக உன்னைப் பூசுகிறது நினைவு...

அடங்கிய பிறகு...

 கல்லெறியக் கலங்கிய குட்டை தெளிகிறது... அலைகள் அடங்கிய பிறகு...

உன்னில் குவிகின்றன...

 செதுக்கிய சிலையில் கண் திறக்கும் கல்தச்சன் கவனமெல்லாம் உளியின் மேல் குவிவதுபோல உன்னில் குவிகின்றன என் நினைவுகள்...

அந்தப் பெருமரம்...

 வளையத் தொடங்குகிறேன்... வளைந்த பின்னும் உடையவில்லை... கிடைத்த இடங்களில் பற்றிப் படர்கிறேன்... என்னிலும் வேர்களும் இலைகளும் பூக்களும் கனிகளும் இருக்கின்றன... ஆனாலும் என் கனவுகளில் இருந்து மட்டும் கலையவேயில்லை அந்தப் பெருமரம்...

மறந்தே போகிறது...

 குடிக்கத் தொடங்கி கொஞ்ச நேரத்தில் குவளைகளின் கணக்கு மறந்து போவதுபோல உன் நினைவுகளில் மூழ்கத் தொடங்கியதும் மறந்தே போகிறது ஆழம்...

வெளிவரக் காத்திருக்கிறேன்...

 விடியலுக்கு முன்னரே வெளுக்கும் வானமென்று சொல்லியது இரவு... ஒளிக்கீற்றுகள் வெளிவரக் காத்திருக்கிறேன்... விடியும்...

விளங்கவேயில்லை...

 எனக்குள் இருக்கும் நானெடுத்து வெளியில் நிறுத்திய பின் நான் என்னைப் பார்க்கும்போது எனக்குள் நிரம்பியிருப்பது என்னவென்றுதான் விளங்கவேயில்லை...

இறுதியில் உன்னிடமே...

 நெடுவானின் கீழ் தொலைவுகளை இறக்கைகளால் அளக்கும் பறவையொன்று இரவில் கூடடைவதுபோல எங்கெங்கோ சுற்றிச் சுழன்றாலும் இறுதியில் உன்னிடமே ஒடுங்குகின்றன நினைவுகள்...

பந்தயத்தில் இழுத்துவிடுகிறது...

 காட்டுப்புரவி கடிவாளம் வெறுப்பதுபோல துயர்களை வெறுக்கிறேன் நான்... பந்தயத்தில் இழுத்துவிடுகிறது வாழ்க்கை...

நிரப்பிக்கொள்கிறாய்...

 உன் நினைவுகள் முழுவதும் என்னை மட்டுமே நிரப்பிக்கொள்கிறாய்... வழியும் கனவுகளை மட்டுமேன் வடிகட்டப் பார்க்கிறாய்...

வாழ்க்கையும் கடல்தான்...

 நீந்தாமல் நெடுந்தூரம் கடக்கின்றன நீரோட்டமறிந்த ஆமைகள்... வாழ்க்கையும் கடல்தான்...

பசுமையாகிறேன் நான்...

 நிலமென சலனமின்றி கிடக்கிறேன்... அருகென வேர்ப்பிடிக்கும் உன் நினைவுகள்... பசுமையாகிறேன் நான்...

சமயங்களில்...

 கடும் வெயிலுக்குப் பிறகான அந்தியில் பொழிவதுபோல கூடிய பின் தூறிக் கலையும் மேகங்கள் விட்டுச்செல்லும் புழுக்கமான இரவைப் போல சமயங்களில் மாறிப்போகிறது வாழ்க்கை...

வற்றிப் போவதில்லை...

 கையள்ளி இறைப்பதால் கடல் வற்றிப் போவதில்லை... பிறகெப்படி உன் நினைவுகள் மட்டும் தீர்ந்துபோகும் தினமும் இரவு கொஞ்சம் தின்பதால்...

மனது...

 கடந்துபோன கணங்கள் திரும்பாதெனத் தெரிந்த பிறகும் அதைநோக்கி நடக்க விழைகிறது மனது...

வெடிக்கும் உன் நினைவுகள்...

 காய்ந்த கனகாம்பரச் செடியில் நீர் பட்டதும் பட்டென வெடிக்கும் விதைகள்போல இரவு தொட்டதும் வெடிக்கும் உன் நினைவுகள்... சிதறும் கனவுகள் ஒவ்வொன்றிலும் கொத்துக்கொத்தாக உன் நினைவுகள்...

பலி ...

 காற்றில் கரிபூசும் வண்டிகளுக்கு கறுப்புக்கம்பளம் விரிக்க பலி கொடுக்கப்படும் உயிர்வளி உமிழும் பசுமைகள்...

கானல்நீர்...

 நாவரள நடந்தபின்னும் கானல்நீர் காட்டுகிறது பாலை... ஊற்றுக்கு செல்லும்வரை உயிர்த்திருக்குமோ கால்கள்...

உன் நினைவுகள்...

 இருளில் நடக்கும் கனவுகளின் தோள்களில் இறக்கைகள் பூட்டுகின்றன உன் நினைவுகள்... பிறகென்ன வானமாகிறது இரவு...

வழிகாட்டிவிட்டு...

 என்ன செய்வது வேறு வழியில்லை  என்று சொல்லியபடியே எல்லாம் செய்துவிட்டு நிற்பவரைப்போல வழிகாட்டிவிட்டு நிற்கிறது வாழ்க்கை...

எஞ்சுவதில்லை...

 என் சோகங்கள்மீது உன் நினைவுகளைப் பூசிக்கொள்கிறேன் காயங்களின் மேல் பூசுகின்ற களிம்பைப்போல... வடுக்கள்கூட எஞ்சுவதில்லை...

என்ன செய்யுமென்று தெரியவில்லை...

 இரவுகளின் மறுபக்கத்தில் மறைந்திருக்கும் பகல்கள் போல துன்பங்களின் பின்னால் ஒளிந்திருக்கின்றன இன்பங்கள்... இந்த மேகங்கள் என்ன செய்யுமென்று தெரியவில்லை...

நினைவுகளில் நனைகிறேன்...

 மழையில் நனையும் குருவியென உன் நினைவுகளில் நனைகிறேன்... உடல் சிலிர்க்க சிதறும் கனவுகளில் நனைகிறது இரவு...

யாருமில்லை...

 உடைந்து துண்டுகளாக மாறிய பின்னரும் உருவம் காட்டத் தவறுவதில்லை கண்ணாடி... பார்ப்போர்தான் யாருமில்லை...

நகர்வதேயில்லை நொடிகள்...

 நீ இல்லாத நாட்களும் நகரவே செய்கின்றன... உன் நினைவுகள் இல்லாமல் நகர்வதேயில்லை நொடிகள்...

வானம்...

 இரவுகளும் பகல்களும் இருளும் ஒளியுமாக கடந்து செல்கின்றன உலகத்தை... அப்படியேதான் இருக்கிறது வானம்...

அறியாமலேயே...

 எனக்கும் உனக்குமான இடைவெளியை அதிகமாக்க எண்ணங்களை இழுக்கிறாய்... இடைவெளியை உன்னிதயம் என் நினைவுகளாலேயே நிரப்புமென்பதை அறியாமலேயே...

சிறு புன்னகை போதும்...

 துளித்துளியாய் வழியும் விழிநீரில் கவலைகள் கரைவதில்லை கடலளவு அழுதாலும்... கடந்து செல்ல சிறு புன்னகை போதும்...

நிரம்பிக் கிடக்கிறது காலம்...

 உயிர்க் கடிகையின் நொடி முள்ளில் அமர்ந்திருக்கும் உன் நினைவுகள் நகரும் போதெல்லாம் உதிர்த்துச் செல்லும் கனவுகளால் நிரம்பிக் கிடக்கிறது காலம்...

ஊரும் உறவும்...

 ஊரென்ன சொல்லுமோ உறவென்ன சொல்லுமோ என்ற சிந்தனை கலையும் முன்னரே கடந்து சென்றுவிடும் ஊரும் உறவும்...

அறியாமலேயே...

 கனமழையெனப் பொழியும் உன் நினைவுகளில் நனையாதிருக்க ஏதேதோ எண்ணங்களால் குடை விரிக்கிறேன்... பெருங்காற்றாக உருமாறும் உன் நினைவுகளென அறியாமலேயே...

வைவதால் பயனென்ன...

 பனிமலையின் இடையே வெந்நீர் ஊற்றுகளும் பாலையின் நடுவே நன்னீர் ஊற்றுகளும் வைக்கவே செய்கிறது இயற்கை... வழிமாறிப் பயணித்தபின் வைவதால் பயனென்ன...

ஒளிர்கின்றன கனவுகள்...

 ஆழியின் அடிவயிற்றில் சிப்பிகளென குவிந்துகிடக்கும் நினைவுகளில் உன்னைச் சுமப்பவை இரவில் திறக்க ஒளிர்கின்றன கனவுகள்...

வெந்நீரில்லை...

 வெண்பரிதி அள்ளித் தெளிக்கும் வெப்பம் குடித்த கடலும் நதிகளும் கருமுகில்களாகிப் பொழியும் மழையில் வெந்நீரில்லை...

நினைவெல்லைக்குள் விழுந்த பின்...

 நிகழ்வெல்லைக்குள் விழுந்துவிட்ட பருப்பொருளென மீளும் வழியற்றுப் போகிறேன் உன் நினைவெல்லைக்குள் விழுந்த பின்...

கழிகிறது காலம்...

 ஒற்றைப் பூட்டில் நிம்மதியைப் பூட்டிவிட்டு ஓராயிரம் சாவிகளை இறைக்கிறது வாழ்க்கை... சரியான சாவி தேடுதலில் கழிகிறது காலம்...

இதயத்திலிருந்து வழிவதில்லை...

 நிரம்பிய குடத்தில் நீரூற்ற வழிகிறது... ஏனிந்த இதயத்திலிருந்து வழிவதில்லை உன் நினைவுகள்...

விளைந்த பின்...

 வேர் தாங்கவும் நீர் தேங்கவும் இடம் கொடுத்த நிலம் காண விளைந்த பின் குனிகிறது நெற்கதிர்...

கனவுகள் பதித்து...

 சரிவில் இறங்கும் வேழமென என் இரவில் இறங்குகின்றன உன் நினைவுகள்... கால் தடமென கனவுகள் பதித்து...

நனையும் முன்னரே...

 பொழிவதா வேண்டாமாவென தயங்கி நகரும் மேகமென சமயங்களில் மகிழ்ச்சி தூவிச் செல்கிறது வாழ்க்கை... நனையும் முன்னரே காய்ந்ததும் விடுகிறது...

என்ன செய்கிறாய்...

 என்னை நீ என்ன செய்கிறாய்... இதயத்தை எடுத்துக்கொண்டாய் இருவிழிகளிலும் உனை வரைந்தாய் செவிகளிரண்டிலும் உன்பெயரை மட்டும் ஒலிக்கச்செய்தாய் சிந்தையில் உனைமட்டுமே செதுக்கிவிட்டாய்... இன்னுமென்ன மிச்சமிருக்கிறது...

வாழ்க்கை நீரோட்டத்தில்...

 பெருநதியில் கலக்கும் சிற்றோடையொன்று சுயமிழந்து போவதுபோல என்னை இழக்கிறேன் வாழ்க்கை நீரோட்டத்தில்...

மருந்தென அப்பிக்கொள்கின்றன...

 இருளுக்குள் மூழ்கும் இரவில் என் இதயத்தின் காயங்களை எப்படிப் பார்த்தனவோ உன் நினைவுகள் மருந்தென அப்பிக்கொள்கின்றன...

தொலைவில் எறிகிறது...

 நெஞ்சத்தை எடுத்து நெருஞ்சி முட்கள்மீது வைத்துவிட்டு செருப்புகளைத் தொலைவில் எறிகிறது வாழ்க்கை...

வெளியே நிற்கின்றன...

 உறக்கம் தின்று செரிக்காத இரவுகள் உன் நினைவுகளோடு நடைபயில எரியும் விழிகளுக்கு வெளியே நிற்கின்றன கனவுகள்...

தவறுவதில்லை புவி..

 அழுத்தமும் வெப்பமும் அதீதமாக கொதிக்கும் குழம்பை அடிவயிற்றில் சுமந்தபோதும் பனிமலைகள் தாங்கத் தவறுவதில்லை புவி..

விழுவதேயில்லை...

 பாறை பற்றியேறும் உடும்பென இதயம் பிடித்தேறும் உன் நினைவுகள் இரவெப்படி இழுத்தாலும் விழுவதேயில்லை...

அறியாமையின் விலையை...

 தெருவிளக்கை சுற்றிப் பறக்கும் சிறுபூச்சிகளின் உதிர்ந்த இறகுகள் அறிகின்றன அறியாமையின் விலையை...

காற்றாகின்றன கனவுகள்...

 இரவுப்படகு பாய்மர இருளை விரிக்க உன் நினைவின் அலைகளைக் கடக்க காற்றாகின்றன கனவுகள்...

ஒளிந்திருக்கிறது...

 மலர் கொய்யும்போது கீறும் முட்களில் இல்லாத வலி மண்ணில் நடக்கும்போது கீறும் முட்களுக்குள் ஒளிந்திருக்கிறது...

துளிர்க்கும் கனவுகள்...

 நடக்கும்போது ஒட்டிக்கொள்ளும் நாயுருவி விதைகளென இரவோடு ஏறிக்கொள்ளும் உன் நினைவுகள் உதிரும் இடத்தில் துளிர்க்கும் கனவுகள்...

பொதிந்திருக்கிறது பாடம்...

 தீரும்வரை பொழிகிறது மேகம்... திகட்டும்வரை நனைகிறது நிலம்... நெகிழ்ந்த மண்ணை நெட்டித்தள்ளும் முளைக்கும் விதைக்குள் பொதிந்திருக்கிறது பாடம்...

நிரம்புகின்றன கனவுகள்...

 ஈரமண்ணில் பதியும் காலடித் தடங்களென இரவில் பதியும் உன் நினைவுகளின் தடங்களில் நிரம்புகின்றன கனவுகள்...

கனவுகளோடு..

 நுகத்தடியில் பூட்டிய காளைகளென இரவை இழுத்துச் செல்கின்றன உன் நினைவுகள்... ஏறி அமர்ந்து பயணிக்கும் கனவுகளோடு..
 விண்மீன்களை விதைக்கிறது இரவு... விளையும் வெளிச்சத்தை அறுக்கும் முன் விடிந்தே விடுகிறது...

மெல்லத் திரள்கிறது...

 இடமும் வலமும் தயிருக்குள் சுழலும் மத்தாக மாறிப்போகும் உன் நினைவு உறக்கம் கடைய மெல்லத் திரள்கிறது கனவு வெண்ணெய்...

ஒதுங்கித் திரும்புவதில்லை...

 கடல்தேடி ஓடும் நதி ஒருபோதும் ஒதுங்கித் திரும்புவதில்லை உப்புக்கரிக்கும் நீரென்று..

என் உறக்கம்...

 இரவின் கரைகள் உடைத்துப் பாயும் உன் நினைவுகளின் நதியில் மிதக்கும் கனவுகளின்மேல் தள்ளாடுகிறது என் உறக்கம்...

காட்டுத்தீ...

 திரியில் எரியும் சிறுசுடர் மென்காற்றில் அசையும்... அணையும்... பெருங்காற்றும் தின்று எரியும் காட்டுத்தீ...
 உன் உதடுகள் உச்சரிக்கவுமில்லை... என் செவிகள் கேட்கவுமில்லை... ஆனாலும் இதயங்கள் இரண்டும் எழுதிக்கொண்டன சொல்லாத சொற்களை...

நிரப்புகிறது மௌனம்...

 உணர்வுகளின் மேல் உருளும் சொற்கள் உருப்பெறும் முன் உடைந்துபோகும் கணங்களை நிரப்புகிறது மௌனம்...

கனவுகளின் கதகதப்பில்...

 ஓட்டினுள் உறங்குகிறேன் உன் நினைவுகளோடு... நத்தைபோல நகர்கிறது இரவு... கனவுகளின் கதகதப்பில்...

சரிவதில்லை...

 வேர்கள் பரவ நெகிழும் நிலம் சரிவதில்லை...

வழிகின்றன கனவுகள்...

 ஒரு கலம் பிளவுற்றுப் பெருகி உயிராக உருவாவதுபோல உன் நினைவுகள் ஒவ்வொன்றும் கனவுகள் பெருக்க உறக்கத்திற்கு வெளியிலும் வழிகின்றன கனவுகள்...

பூக்காமலா இருக்கிறது தீவு...

 திசைகள் நான்கிலும் கரிக்கும் கண்ணீரென கடல்நீர் சூழ தனித்தே இருந்தபோதும் பூக்காமலா இருக்கிறது தீவு...

மெல்ல ஏறுகிறது துரு..

 திடமான முடிவோடு திரும்பாமல் இருந்தேன் இரும்பென... ஈரக்காற்றென உன் நினைவுகள்... மெல்ல ஏறுகிறது துரு...

எரிகிறது வாழ்க்கை...

 எரிமலையின் உருகிய குழம்பு இறுகும்வரை எரிவதுபோல உள்ளம் இறுகும்வரை எரிகிறது வாழ்க்கை...

ஒளிர்கிறது உறக்கம்...

 அந்திமக்கால விண்மீனொன்று விசிறியடிக்கும் கதிர்வீச்சென உன் நினைவுகள் அள்ளித்தெளிக்கும் வண்ணச் சிதறல்களில் ஒளிர்கிறது உறக்கம் உள்ளுக்குள்...

எப்போதுமே ...

 குளத்தின் கரைகள் கோணல்தான்... ஒற்றைக் கல் எழுப்பும் அலைகள் மட்டும் எப்போதுமே வட்டமாக...

இரவெப்படி விடியும்....

 முடிவில்லாப் பின்னங்கள் செய்யும் முழுஎண்கள் இரண்டாக உன் நினைவுகளும் கனவுகளும் மாறிப்போனபின் இரவெப்படி விடியும்....

நிலம்போலவே...

 கடந்து செல்லும் மேகங்களெல்லாம் பொழிந்து விடுவதில்லை... பொழிகின்ற மேகங்களெல்லாம் கடக்காமல் நிற்பதில்லை... வாழ்க்கையும் நிலம்போலவே வானம் பார்த்துக் கிடக்கிறது...

காத்திருக்கின்றன இரவில்...

 இருவிழிகளால் இதயம் உழுது நினைவுகளை விதைக்கிறாய் பகலில்... கனவுகள் கதிராகி அறுவடைக்குக் காத்திருக்கின்றன இரவில்...

வலி நீக்கும் வழி...

 பெருங்காற்றில் முறிந்த மரங்கள் வலி... பிழைத்த செடிகளுக்கு நீர்வார்த்தல் வலி நீக்கும் வழி...

படுகையாகிறது...

 பனிமலை உருகிட பெருகிடும் நதியென உன் நினைவுகள் உருகிட பாயும் கனவுகளுக்கு படுகையாகிறது என் உறக்கம்...

உணரவில்லை...

 விழுவதும் எழுவதும் பரிதிக்கொன்றும் புதிதல்ல... பாவம் நாள்தான் அதனை உணரவில்லை...

சேமிக்கிறேன் பத்திரமாக...

 பெருந்தோகையிலிருந்து பீலிகள் உதிர்க்கும் மயிலென நீ விட்டுச்செல்லும் நினைவுகளை என் நினைவுகளின் பக்கங்களுக்கு இடையே சேமிக்கிறேன் பத்திரமாக... என் நினைவடுக்குகளைப் புரட்டும் உறக்கத்தின் கைகளெங்கும் கனவுகளின் வண்ணங்கள்...

நசுக்குகின்றது கனவுகளை...

 கனவுகளின் கல்லறைமீது காலூன்றி நிற்கும் யதார்த்தத்தின் அழுத்தம் இப்போதும் நசுக்குகின்றது கனவுகளை...

எரிகின்றன விழிகள்...

 அகல் விளக்கு ஏந்தி வரும் அணங்கென உன் நினைவுகள் ஏந்தி நடக்கும் கனவுகள் காலிடறி என் உறக்கத்தில் உருண்டுவிழ தீப்பற்றிக்கொண்டு திண்டாடுகிறது உறக்கம்... எரிகின்றன விழிகள்...

சலனமில்லை...

 சலனமில்லா நீரின்மீது தாவியபின் சலனமில்லை தவளையிடம்...
 மகரந்தத்தில் விழுந்த வண்டு மறுபடியும் பறக்கும்போது மஞ்சளாக மாறுவதுபோல உன் நினைவுகளில் புரண்டெழுந்தபின் நீயாகவே மாறிப்போகிறேன் நான்...

அறிந்தேயிருக்கிறது...

 வீசும் காற்றில் விரித்த தலையோடு ஆடும் பனைமரம் அறிந்தேயிருக்கிறது ஒடியாமல் வளைவதற்கு...

நெஞ்சின் ஆழத்தில்...

 வற்றிப்போன ஆற்றின் வறண்டுபோன மணற்பரப்பின் கீழே ஒளிந்திருக்கும் ஊற்றுநீரென உன் நினைவுகள் நெஞ்சின் ஆழத்தில்... எத்தனை தொலைவில் நீ இருந்தாலும்...

என்ன தேடுகின்றன...

 நிலவில்லா இரவு... இருள்வழியும் பொழுது... வெள்ளிமீன்களின் ஒளிச்சிதறல்களின் ஊடாக என்ன தேடுகின்றன இந்த மேகங்கள்...

இன்னும்கூட இடமிருக்கிறது...

 ஒருசில சொற்களை உதிர்த்துச் செல்கிறாய் ஒவ்வொன்றாய் எடுத்துக் கோர்க்கிறேன்... சிறுசிறு புன்னகைகள் சிதறிச் செல்கிறாய் சேர்த்தெடுத்து வைக்கிறேன்... நினைவுகளின் அடுக்குகளில் இன்னும்கூட இடமிருக்கிறது...

எதிர்த்து நீந்துகின்றன...

 இறந்த இலைகள் மிதந்து செல்கின்றன நதியோடு... வாழும் மீன்கள் எதிர்த்து நீந்துகின்றன விதியோடு...

கனவு வண்டுகள்...

 மொட்டொன்று கட்டவிழ்வதைப்போல மலர்கிறது இரவு... அடுக்கடுக்காய் விரியும் இதழ்களென உன் நினைவுகள்... மொய்க்கின்றன கனவு வண்டுகள்...

பறக்கிறேன் நின்றபடியே...

 இரு கைகள் விரிக்கிறேன் இறக்கைகளென... முகில் நோக்கி முகம் தூக்குகிறேன் நிலமென... முத்து முத்தாக மொத்தமாய் பெய்கிறாய்... இப்போது பறக்கிறேன் நின்றபடியே...

மன்றாடுகிறேன் நான்...

 துளித்துளியாய் வாழ்க்கையைப் பருகுகிறது மரணம் மது சுவைப்பதுபோல... மன்றாடுகிறேன் நான் மருந்தென ஒரே மிடறில் விழுங்கிவிட...

நினைவுகளின் அச்சில்...

 விடியாமல் நீளும் இரவொன்றில் முடியாமல் தொடரும் கனவொன்றில் நிற்காமல் சுழல்கிறாய் நீ நிலையான நினைவுகளின் அச்சில்...

நகர்கிறது பக்குவமாக...

 முட்டும் பாறைகளில் மோதி ஆர்ப்பரிக்கும் நதியொன்று பட்டு மணற்பரப்பு தொட்டதும் நகர்கிறது பக்குவமாக...

ஏனென்று தெரியவில்லை...

 ஏனென்று தெரியவில்லை... என்னிலிருந்து உன்னை நீ தொலைவில் வைத்துக் கொள்கிறாய்... அதனாலென்ன எப்போதும்போல உன் நினைவுகளை நெஞ்சத்தில் தைத்துக் கொள்கிறேன்...

வாழ்க்கை இலையில்...

 தழைத்த இலையைக் கடித்துத் தின்று காலி செய்யும் கம்பளிப் புழுக்களென நெளிகின்றன கவலைகள் வாழ்க்கை இலையில்...

கண்ணாடிச்சுவர்...

 உன் விழிகள் தேடுவதை நான் பார்க்கிறேன்... என் விழிகளில் ஏக்கத்தை நீ பார்க்கிறாய்... பின்னும் ஏனிந்த கண்ணாடிச்சுவர் நமக்கிடையே...

கழிகிறது காலம்...

 விடையில்லாக் கேள்விகளின் கடலில் விடைகள்தேடி நீந்துவதில் கழிகிறது காலம்...

எனக்கு வியர்க்கிறது...

 உனக்குள் என்னைப் பொதிந்துகொண்டு ஏதேதோ போர்வைகளால் போர்த்திக்கொள்கிறாய்... எனக்கு வியர்க்கிறது...

வேறெதுவும் மிச்சமில்லை...

 ஒவ்வொரு அடுக்காக உரிக்கிறேன்... விழிநீர் தவிர வேறெதுவும் மிச்சமில்லை... வெங்காய வாழ்க்கை...

கைகூடும்வரை...

 உன்னோடு கதைத்த பொழுதுகளுக்குள் புதைந்து கிடக்கும் மகிழ்ச்சி குவியலை உன்னோடு கதைக்காத பொழுதுகளில் தேடியபடியே கடத்துகிறேன் நேரத்தை உன்னோடு கதைக்கும் பொழுதுகள் கைகூடும்வரை...

அப்படியேதான் இருக்கிறது...

 வளர்பிறையும் தேய்பிறையும் வந்து வந்து போனாலும் அப்படியேதான் இருக்கிறது நிலவு...