Posts

Showing posts from December, 2019

கனவுகள்...

மெலிந்த விரல்களிலிருந்து நழுவும் மோதிரம்போல நலிந்த வாழ்க்கையிலிருந்து நழுவுகின்றன கனவுகள்...

மௌனமாக...

உன் இதழ்கள் உதிர்க்கும் வார்த்தைகள் சுமக்க உனக்கும் எனக்கும் இடையே காத்திருக்கிறது காற்று மௌனமாக...

கேட்பதில்லை...

தழும்புகள் தாங்கிய முதுகு சொல்லும் கதைகளை நட்பில் நனையும் என் இதயம் எப்போதுமே கேட்பதில்லை... இன்னுமொரு தழும்பு எண்ணிக்கையில் ஏறினாலும்....

தூரமில்லை...

உன்னைச் சுமக்கும்வரை நெஞ்சத்தில் பாரமில்லை... நீ இறங்கிவிட்டால் துயரெனக்கு தூரமில்லை...

தனித்தனியாக...

உடைந்த கண்ணாடியின் ஒவ்வொரு துண்டுகளிலும் ஒரே முகம் தனித்தனியாக...

ஈரமாகிறது மனது...

சிறுபாறைகளின் வழியாக நெளிந்தோடும் ஓடையென சலசலக்கும் நினைவுகளில் ஈரமாகிறது மனது...

நானும் காரணங்களும்..

ஒவ்வொன்றாக காரணங்கள் தேடுகிறேன் உன்னைப் பார்ப்பதற்கு... நீயோ காரணங்களின் மேலேறி கடந்து செல்கிறாய்... பிறகு மிச்சமிருப்பது நானும் காரணங்களும்...

கீழிறங்கவும்தான்...

முகடுகளுக்கு மேலே பறந்தாலும் பருந்துகளுக்கு நன்றாகவே தெரியும்... மேலெழும்ப மட்டுமல்ல கீழிறங்கவும்தான் இறக்கைகளென்று...

நடிக்கிறாய்...

என் தொலைந்த பொழுதுகள் எல்லாம் குவிந்து கிடக்கின்றன உன் மனதிலென தெரிந்தபின்னும் தேடுவதுபோல நான் நடிக்கிறேன்... தெரியாததுபோல நீ நடிக்கிறாய்...

வானம்...

நித்தமும் திறந்தே கிடக்கிறது நிலவுக்கான வானம்...

மெல்ல உடைகிறது...

பெருமழையெனப் பொழியும் உன் நினைவுகள் வெள்ளமெனப் பெருக்கெடுக்க மெல்ல உடைகிறது இரவின் கரை..

வராத உறவுகள்...

பசி தின்னும் வேளைகளில் கிடைக்காத உணவென மாறிப்போகின்றன வலிகளின்போது வராத உறவுகள்...

இடைவிடாது விழுகிறாய்...

அடைமழையின் தூறல்களென இடைவிடாது விழுகிறாய் எனக்குள்... நெஞ்சம் நிறைந்தபின் வழிகிறது நெஞ்சினுள்ளேயே...

உதிர்ந்த இலை...

எதிர்திசையில் நீந்தும் மீன்களுக்கு மேல் ஓடும் நீரின் போக்கில் மிதக்கிறது உதிர்ந்த இலை...

இறங்குகிறது மின்னல்...

பெருமழையைச் சுமக்கும் கருமேகங்களின் நடுவேயிருந்து பளீரென இறங்குகிறது மின்னல்... உன் கூந்தலில் ஆடும் பூச்சரத்தைப்போல...

கல்...

சலனமில்லா நிறைகுளத்தில் கல்லெறிகிறார்கள்... கரைநோக்கி செல்கின்றன அலைகள்... தரைநோக்கி செல்கிறது கல்...

தெரிந்தேதான் நனைகிறேன்...

அடைமழை எனத் தெரிந்தேதான் நனைகிறேன்... உனக்கு நனையப் பிடிக்கும் என்பதற்காக அல்ல... குறைந்தபட்சம் உன் நினைவுகளேனும் நனையட்டும் என்றுதான்...