Posts

Showing posts from November, 2017

இரவு...

தாய்மடி விட்டு தள்ளிக் கட்டிய கன்றின் கண்களில் இருள் நிரப்புகிறது இரவு...

இரவு...

இதயத்தின் துயரம் இமைகள் தொடும்போது உட்கார வழியின்றி உறக்கம் வெளியேறி நனைந்து நடக்க கசிந்து கடக்கிறது இரவு...

இரவு...

ஒளி இருளென விழி பகுக்க வழி மறிக்கும் மூடா இமைகளின்கீழ் எரியும் விழிகளை இன்றும் கடக்கிறது இரவு...

இரவு...

உறக்கம் போர்த்தியபின் இமைகளுக்குள் ஒளி விரித்து இமைகளுக்கு வெளியே இருள் விரிக்கிறது இரவு...

இரவு...

தொலைந்து போனவனின் இரவுகள் மட்டும் தொலைந்து போவதேயில்லை...

இரவு...

மலர் தொட்டு திறக்கும் தென்றலென இருள் தொட்டு திறந்து செல்கிறது இரவு...

இரவு...

நிலவில்லா வானத்தில் நீண்ட இருள்வெளியில் கணக்கில்லா விண்மீன்களோடு கதைத்து நகர்கிறது இரவு...

இரவு...

நிலவு நடக்க சமைத்த வீதியில் நினைவுகள் நடக்க நிழலென நீளும் கனவுகளை இருளில் மறைக்கிறது இரவு...

இரவு...

அழுத்திப் பிடிக்கையில் வழுக்கிச் செல்லும் கெழுத்தி மீனென உறக்கம் தொலைத்த விழிகளிலிருந்து நழுவிச் செல்கிறது இரவு...

இரவு...

பகல் விழுங்கியபின் இருளில் நெளிகிறது இரவுப் பாம்பு...

இரவு...

நினைவு மீன்களை கனவு மீன்கள் துரத்த கலங்கிய உறக்கக் குட்டையில் மூடிய இமைகளுக்குள் காட்சிகள் தேடுகிறது இரவு...

இரவு...

வேரில்லாப் பெருமரத்தின் விரிந்த கிளைகளின் விழுதுகளென விழும் தூரல்கள் பிடித்து விரைந்து மேலேறும் இரவு...

இரவு...

நீரின் சுமையால் தாழ்ந்த முகில்கள் தரைதொட அஞ்சி தண்ணீர் சிந்த பள்ளங்கள் நிறைத்து வெள்ளமான நீரோடு வழியும் வழியின் தடம்தேடி அலைகிறது இரவு...

இரவு...

வங்கக்கடல் நீரை வாரி எடுத்து விடாமல் வீசியெறியும் கருமேகங்களின் பெருங்கோபத்தில் நடுங்கிய நிலம் நீர் போர்த்திக்கொள்ள நீந்திக் கடக்கிறது இரவு...

இரவு...

நினைவு மேகங்கள் நின்று பொழியும் கனவு மழையில் கண்கள் நிறைந்து கரை புரளும் உறக்க வெள்ளத்தை ஓரமாய் நின்று உற்றுப் பார்க்கிறது இரவு...

இரவு...

முகில் கடலில் முழுநிலவு மூழ்க தளும்பி வழியும் நீரில் தரை நிறைந்து வெள்ளமாக குளிரில் நீந்துகிறது இரவு...