Posts

Showing posts from October, 2019

எப்படி தெரியும்...

கவிதை எழுதிய காகிதத்தில் கப்பல் செய்து மிதக்கவிட்டேன்... நகரவேயில்லை என் வாசல் தாண்டி... மழைநீருக்கு எப்படி தெரியும் என் கவிதையில் கரைந்திருப்பது நீயென்று...

மழையில் நனைந்த சிறு குருவி...

மழையில் நனைந்த சிறு குருவி என் வீட்டு தாழ்வாரத்தில் உடல் சிலுப்ப குளிர்கிறது வீடு...

அறிந்தே இருக்கிறாய்...

நீ அறிந்தே இருக்கிறாய் உன் திருநாள் கொண்டாட்டங்களின் இரைச்சல்களுக்கு வெளியே ஒரு ஓரமாய் நிற்கும் என் மௌனத்தை...

மரம் வளரும்...

நீர்கண்ட இடம்நோக்கி நீள்கின்ற வேர்களாகின்றனர் பணம்கண்ட பக்கத்தில் சாயும் மனிதர்கள்... மரம் வளரும்... மனம்...?

நொண்டி அடிக்கின்றன நொடிகள்...

நீ ஒற்றைக்காலில் நிற்கிறாய்... நொண்டி அடிக்கின்றன நொடிகள்...

என்னை மட்டும்...

உன் விழிகள் போகும் வழிகளெங்கும் ஒளியின் கதிர்கள் கோலமிட என்னை மட்டும் ஏன் நிறுத்துகிறாய் இருளில்....

உப்புநீர்தான்...

காயம்பட்டவனின் கண்ணீரை விமர்சிப்பவர்கள் காயம்படும்வரை அவர்களுக்கு கண்ணீரென்பது வெறும் உப்புநீர்தான்...

சிலந்தி...

கைவிடப்பட்ட கட்டடத்தில் அடர்ந்திருக்கும் ஒட்டடையில் அமர்ந்திருக்கும் சிலந்தி அமைதியாகக் காத்திருக்கிறது பூச்சிகளுக்காக மட்டும்...

ஒதுக்குகிறாய்...

முகத்தில் விழும் முடிக்கற்றைகளை அனிச்சையாக ஒதுக்கும் விரல்களென ஒதுக்குகிறாய் என்னை... முடிதுறக்க மனமின்றி...

மலை...

அடிக்கும் வெயிலும் நடுக்கும் குளிரும் உராயும் காற்றும் ஓடும் நீரும் சிற்றுளி இல்லாமல் சிறுமணல் செதுக்க நிமிர்ந்தே நிற்கிறது மலை...

உன் நினைவுகள்...

ஏதோ பரபரப்பில் எனைமறந்த நிலையிலும் மெல்ல வருடும் உன் நினைவுகள்... உறங்கும் குழந்தையின் சிரிப்பைப்போல...

இரவும் பகலும்...

இமைகளுக்குள் உனைவரைந்து உறங்குகிறேன்... இருவிழிகளில் உனையெழுதி விழிக்கிறேன்... இப்படியாகக் கடக்கின்றன இரவும் பகலும்...

விண்மீன்கள்...

ஒருபொழுதுதான் இருளட்டுமே வானம்... இருண்டபின்னரே எழுகின்றன விண்மீன்கள்...

செம்புலப் பெயல்நீர்...

கருமுகில்கள் திறந்து பெருமழை பொழிய மண்தொட்ட வெட்கத்தில் சிவந்து ஓடுகிறது செம்புலப் பெயல்நீர்...

மழலையின் சிரிப்பு...

முட்களுக்கு வெளியே மலர்கிறது அரும்பு சிறு மழலையின் சிரிப்பைப்போல...

உன் நினைவுகள்...

மழையில் நனையும் இரவின் குளிரில் உறக்கம் தேடி உன் நினைவுகள் போர்த்துகிறேன்...

மீண்டும் மீண்டும்...

இலையுதிர்கால மரமென உதிர்க்கிறேன் உன்னை... வசந்தகால துளிரென என்னில் துளிர்க்கிறாய் மீண்டும் மீண்டும்....

வலியின் சுவை...

வலிநிறைந்த வார்த்தைகளால் செவிகளை நிரப்பும் நாவுகள் கடிபடும்வரை ருசிப்பதேயில்லை வலியின் சுவையை...

இப்போதும் வலிக்கிறது...

உன்னை நிரப்பி வைத்த மண்பானை மனதை உடைத்துவிட்டு சிதறிக் கிடக்கும் சில்லுகளின் மேல் நடந்து செல்கிறாய்... இப்போதும் வலிக்கிறது உன் பாதங்கள் வலிக்குமென்று...

பெருமழை...

கடல் குடித்து உடல் பருத்த கருத்த மேகங்கள் கரை தாண்டி தரை தொட நீர்க்கரங்கள் நீட்டிட பொழிகிறது பெருமழை...

இரவு...

துயர்கவ்வும் நெஞ்சின் விசும்பல்களை கேளாதிருக்க செவிகளை மூடிட நிறைகிறது இரவெங்கும் இருள்...

வழக்கம் போல...

என்றேனும் எனது தட்டில் புன்னகை எறிவாயென இப்போதும் கழைக்கூத்து ஆடுகின்றேன்... நீயோ மௌனத்தை வீசி செல்கிறாய் வழக்கம்போல...

கடைசிவரை கேட்பதில்லை...

கனிமம் தின்ன காடு கொல்லும் மிருகங்களின் காதுகளில் கடைசிவரை கேட்பதில்லை கருகும் உயிர்களின் கதறல்களும் காற்றின் கேவல்களும்...

மரவட்டை நினைவுகள்...

எத்தனைமுறை தள்ளிவிட்டாலும் பிடிவாதமாய் சுருண்டு கொள்கின்றன மரவட்டை நினைவுகள்...

வயிறுகள்...

உணவால் நிறைந்த வயிறுகள் உறக்கத்திலிருக்க விழித்தே இருக்கின்றன வறுமையால் நிறைந்த வயிறுகள்...

யானைக்கூட்டம்...

சிறுநகரமாக மாறிவிட்ட மலைவாழிடத்தில் ஆதிநினைவுகளில் பதிந்துகிடக்கும் வழித்தடம் தேடுகிறது யானைக்கூட்டம்...

மரக்கிறது மனது...

முறிந்த உறவுகள் குத்தும் வலி உணர்வுகள் துளைக்க மரக்கிறது மனது...

உன் நினைவுகள்...

காற்று தொட நீர் தாண்டும் கயல் கவ்வும் செம்பருந்தின் நகங்களைவிட கூரானது உன் நினைவுகள்...

சிலையா சிதறலா...

உளிபடும் இடமும் உடைபடும் விதமும் கற்களுக்கு சொல்கின்றன சிலையா சிதறலா என...

முயல்வதுமில்லை...

ஓடுவதற்கு முடிவதுமில்லை முயல்வதுமில்லை... மெதுவாகவே நகர்கின்றன ஓடு சுமக்கும் ஆமைகளும் கூடு சுமக்கும் நத்தைகளும்...

குறைகிறது தூரம்...

மவுனங்களால் நிரம்பிய இடைவெளியை புன்னகையால் கடக்கிறேன்... குறைகிறது தூரம்...

பெருமழை...

கடல் தேடி காணாமல் கருமுகில்கள் கலங்கி நிலம் நனைக்க பெய்கிறது பெருமழை...