Posts

Showing posts from February, 2018

இரவு...

நெடுமரத்தின் சிறுஇலைகள் காற்றோடு கதைக்க மௌனக்குளத்தில் கல்லெறிகிறது இரவு...

இரவு...

விழிகளிலிருந்து நழுவி இருளுக்குள் விழுந்த உறக்கத்தை எட்டுத்திசைகளிலும் தேடிச் செல்கிறது இரவு...

காட்டுமிராண்டி

இங்கே காடு காத்தவன் காட்டுமிராண்டி. காடழித்தவன் பேரரசன்... காடு காத்தவனுக்கு விளைபொருளே கடவுள்... பேரரசின் பெருங்குடிகளுக்கோ கடவுளே விலைபொருள்தான்(எழுத்துப் பிழை இல்லை)

இரவு...

சூரியன் சுமந்த பகல் தூரத்தில் விழுந்துவிட இருட்குதிரை ஏறி வருகிறது இரவு...

இரவு...

சுடர்விடும் கதிரின் ஒளி ஒருபாதி நனைக்க இருளெடுத்து மறுபாதி மூடுகிறது இரவு...

இரவு...

ஒளிநதி ஓடிய பகலின் கரையில் இருள் வளர்க்கிறது இரவு...

இன்றில்லை...

இமைகள் மூடித் திறக்கும் முன் கழிந்து போயின இரண்டு ஆண்டுகள்... விதையாக நான் விழுந்தபோது எனைத் தாங்கிய நிலம் இன்றில்லை... வேர்ப்பிடித்து நான் வளர்ந்தபோது எனை நனைத்த நீர் இன்றில்லை... இலைகளோடு நான் இரையாக நின்றபோது எனைக் காத்த நெருப்பு இன்றில்லை... கிளைத்து நான் செழித்தபோது எனை வருடிய காற்று இன்றில்லை... கனிசெழிக்க நான் உயர்ந்தபோது எனை நோக்கிய வான் இன்றில்லை... என் ஐம்புலன்களும் தேடும் ஐம்பூதங்கள் என்று வரும்...? #தந்தைக்கு...

இரவு...

மூடிய இமைகளுக்குள் முகிழ்க்கும் காட்சிகளின் இடையே நடக்கும் நினைவுகளின் கைபிடித்து உலா போகிறது நிலா இல்லாத இரவு...

இரவு...

உறக்கத்தின் மேல் விதைத்த நினைவுகளில் முளைத்த கனவுகளுக்கு இருள் பாய்ச்சுகிறது இரவு...

இரவு...

தேனுண்டு பறக்க இறக்கை விரிக்கும் வண்ணத்துப்பூச்சியென துளித்துளியாய் இருள் பருகி கனவு இறக்கைகள் விரித்துப் பறக்கிறது இரவு...

இரவு...

மென்பனி துகிலெடுத்து மேலெல்லாம் போர்த்தி நிலமகள் துயில்கொள்ள இருள்பாய் விரிக்கிறது இரவு...

இரவு...

மேகப்பூக்களின் தூறல் புன்னகைகளை இருள்மணம் கமழ எடுத்து வருகிறது இரவு...

நதியாகவே...

நதி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது... பெருக்கெடும்போது பெருகி வற்றும்போது அருகிப்போகும் மீனுக்கும் பாயும்போது பக்கத்தில் வந்து காயும்போது எட்டிச்செல்லும் மானுக்கும் ஒரே தண்ணீரோடு... நான் நதியாகவே இருந்துகொள்கிறேன் மீனுக்கும்... மானுக்கும்...

இரவு...

இமைகளின் மேல் சுமைகளின் கனம்... இதயத்தினுள் துயர்களின் ரணம்... சுமைகள் நீக்கி உறக்க மருந்து சுமந்து வருமா இருளில் விழிக்கும் இரவு...

இரவு...

அழுத்தும் சுமைகளின் பாரம் தாங்காமல் வளையும் மனம் ஒடியும் முன்னரேனும் விடியுமாவென வினவி நிற்கிறது உள்ளும் புறமும் இரவு...

இரவு...

பனியில் நனைந்த தரையில் பாதம் பதிக்கும் நிலவொளியின் தடங்கள் தொடர்கிறது இரவு...

இரவு...

நினைவுக் கூண்டுகள் கதவு திறந்து கனவுகள் சிறகடிக்க விண்ணில் பறக்கிறது இரவு...