Posts

Showing posts from September, 2017

இரவு...

ஒளியின் மொழியறிந்த உயிர்களெல்லாம் கவிழும் இருள்புரியாமல் கண்ணயர இருளோடு உறவாடும் உயிர்களோடு உலாப் போகிறது இரவு...

இரவு...

உள்ளத்தின் கவலைகள் மெல்ல நகர்ந்து உள்இமைகளில் உட்கார்ந்து கொள்ள உட்கார முடியாமல் உலவும் உறக்கத்தோடு ஒன்றாக நடக்கிறது இரவு...

இரவு...

கனவுகளின் ஒளியில் கண்களுக்குள் இருள் தேடியபின் இமைகளுக்கு வெளியே எட்டிப் பார்த்தபோது மெல்லச் சிரித்தது இரவு...

இரவு...

வாடிய பூக்களின் வருத்தங்கள் சுமந்து ஓடும் பொழுதின் கால்கள் தொடர்கிறது இரவு...

இரவு...

விண்மீன்கள் சிதறிய வீதியின் வழியே வெண்ணிலவு நடக்க இருளால் விசிறுகிறது இரவு...

இரவு...

அந்திப் படியில் சந்திரப் பாசி வழுக்கி இருள் குளத்தில் விழுந்த பொழுது எழுந்து வருகிறது இரவாக...

இரவு...

காலதேவதையின் இருண்ட கூந்தலில் ஒளிப் பூக்கள் சூடிவிட்டு ஒய்யாரமாய் நடக்கிறது இரவு...

இரவு...

உடுத்திருந்த ஒளியாடை அவிழ்த்துவிட்டு இருளாடை எடுத்தணிந்து நிலவுக்கண்ணாடியில் அழகு பார்க்கிறது இரவு...

இரவு...

தடாகக் கண்களில் தாமரைக் கனவுகள்... மகரந்தம் சுமக்கும் வண்டாக கனவுகளைச் சுற்றும் இரவு...

இரவு...

விழுந்த பகலின்மேல் எழுந்த இருளின்கீழ் கடக்கும் நிலவின் கைபிடித்து நடக்கும் கனவுகளை கண்கள் சேர்க்கிறது இரவு...

இரவு...

பாதி நிலவின் ஒளியில் மீதி நிலவைத் தேடும் கோடி விண்மீன்களிடையே புகுந்து நகர்கிறது இரவு...

இரவு...

ஒளி உண்ணப் பறக்கும் நிலவு வண்டுக்கு விண்மீன் பூக்கள் விரித்துவைத்துக் காத்திருக்கிறது இருளுண்டு வளர்ந்த நெடுமர இரவு...

இரவு...

விளக்குகள் எரிந்த வெளிச்சங்களின் எச்சங்கள் தேடுகிறது இடிந்த வீட்டின் மேல் இருள் கவிழ்க்கும் இரவு...

இரவு...

ஒளி மங்கிய பொழுதில் விழி காணும் இருளில் ஒளிந்திருக்கும் கனவுகள் விழிதேடிச் செல்ல வழி சொல்லி இருளோடு செல்லும் இரவு....

மந்தைகள்

இந்த மந்தைகள் பழக்கப் படுத்தப்பட்டவை... மேய்ப்பனின் குரலுக்கேற்ப ஓடவும் சிறு குச்சியின் அடிகளுக்கேற்ப திசைமாறவும்.... இந்த மந்தைகள் சொல்லி வளர்க்கப்பட்டவை... பட்டிக்குள்ளேயே சுற்றுவதுதான் சுதந்திரமென்று... இந்த மந்தைகள் அறிவூட்டப்பட்டவை... அஞ்சி வாழ்வதும் அடிபணிந்து கிடப்பதுமே பிழைத்திருக்க ஒரே வழியென்று... இந்த மந்தைகள் விதிகள் பதியப்பட்டவை... ஒட்டக் கறப்பதற்கோ வெட்டப் படுவதற்கோதான் விற்கப்படுகிறோமென அறிந்தாலும் மறுப்பின்றி செல்வதே விசுவாசமென்று... இந்த மந்தைகளுக்கு நன்றாகவே தெரியும் கடுங்குளிரில் மேய்ப்பன் சுகமாய் போர்த்த கம்பளி செய்யவே தாங்கள் மயிர் வளர்க்கிறோமென்று... இந்த மந்தைகள் அறிந்தேயிருக்கின்றன தங்கள் கொழுப்பில் எரியும் விளக்கின் வெளிச்சம் மேய்ப்பனுக்கேயென்று... ஆனாலும் இந்த மந்தைகள் உரிமையுடையவை... தங்கள் மேய்ப்பனை தாங்களே தேர்ந்தெடுக்க... ஒரு தேர்வு நாளில் இந்த மந்தைகள் கூடிப் பேசின... தடிகொண்டு அடிக்கும் மேய்ப்பனை தள்ளி விட்டு வசீகர முகத்தோடும் வாஞ்சையான வார்த்தைகளோடும் வந்த புதிய மேய்ப்பனே புனிதனென்று மலர்மு

இரவு...

மூடிய இமைகளுக்குள் விழித்திருக்கும் விழிகள் உறக்கத்திற்கு காத்திருக்க கவலைச் சேற்றில் கால்கள் புதைந்து சிக்கித் தவிக்கும் உறக்கத்தை தாண்டிச் செல்கிறது இரவு...

இரவு...

ஒளி விடைபெற்று ஓய்வெடுக்கச் செல்ல இருள் கண்விழித்து எங்கும் பரவி நிறைய எழுந்து நடக்கிறது இரவு...