Posts

Showing posts from 2019

கனவுகள்...

மெலிந்த விரல்களிலிருந்து நழுவும் மோதிரம்போல நலிந்த வாழ்க்கையிலிருந்து நழுவுகின்றன கனவுகள்...

மௌனமாக...

உன் இதழ்கள் உதிர்க்கும் வார்த்தைகள் சுமக்க உனக்கும் எனக்கும் இடையே காத்திருக்கிறது காற்று மௌனமாக...

கேட்பதில்லை...

தழும்புகள் தாங்கிய முதுகு சொல்லும் கதைகளை நட்பில் நனையும் என் இதயம் எப்போதுமே கேட்பதில்லை... இன்னுமொரு தழும்பு எண்ணிக்கையில் ஏறினாலும்....

தூரமில்லை...

உன்னைச் சுமக்கும்வரை நெஞ்சத்தில் பாரமில்லை... நீ இறங்கிவிட்டால் துயரெனக்கு தூரமில்லை...

தனித்தனியாக...

உடைந்த கண்ணாடியின் ஒவ்வொரு துண்டுகளிலும் ஒரே முகம் தனித்தனியாக...

ஈரமாகிறது மனது...

சிறுபாறைகளின் வழியாக நெளிந்தோடும் ஓடையென சலசலக்கும் நினைவுகளில் ஈரமாகிறது மனது...

நானும் காரணங்களும்..

ஒவ்வொன்றாக காரணங்கள் தேடுகிறேன் உன்னைப் பார்ப்பதற்கு... நீயோ காரணங்களின் மேலேறி கடந்து செல்கிறாய்... பிறகு மிச்சமிருப்பது நானும் காரணங்களும்...

கீழிறங்கவும்தான்...

முகடுகளுக்கு மேலே பறந்தாலும் பருந்துகளுக்கு நன்றாகவே தெரியும்... மேலெழும்ப மட்டுமல்ல கீழிறங்கவும்தான் இறக்கைகளென்று...

நடிக்கிறாய்...

என் தொலைந்த பொழுதுகள் எல்லாம் குவிந்து கிடக்கின்றன உன் மனதிலென தெரிந்தபின்னும் தேடுவதுபோல நான் நடிக்கிறேன்... தெரியாததுபோல நீ நடிக்கிறாய்...

வானம்...

நித்தமும் திறந்தே கிடக்கிறது நிலவுக்கான வானம்...

மெல்ல உடைகிறது...

பெருமழையெனப் பொழியும் உன் நினைவுகள் வெள்ளமெனப் பெருக்கெடுக்க மெல்ல உடைகிறது இரவின் கரை..

வராத உறவுகள்...

பசி தின்னும் வேளைகளில் கிடைக்காத உணவென மாறிப்போகின்றன வலிகளின்போது வராத உறவுகள்...

இடைவிடாது விழுகிறாய்...

அடைமழையின் தூறல்களென இடைவிடாது விழுகிறாய் எனக்குள்... நெஞ்சம் நிறைந்தபின் வழிகிறது நெஞ்சினுள்ளேயே...

உதிர்ந்த இலை...

எதிர்திசையில் நீந்தும் மீன்களுக்கு மேல் ஓடும் நீரின் போக்கில் மிதக்கிறது உதிர்ந்த இலை...

இறங்குகிறது மின்னல்...

பெருமழையைச் சுமக்கும் கருமேகங்களின் நடுவேயிருந்து பளீரென இறங்குகிறது மின்னல்... உன் கூந்தலில் ஆடும் பூச்சரத்தைப்போல...

கல்...

சலனமில்லா நிறைகுளத்தில் கல்லெறிகிறார்கள்... கரைநோக்கி செல்கின்றன அலைகள்... தரைநோக்கி செல்கிறது கல்...

தெரிந்தேதான் நனைகிறேன்...

அடைமழை எனத் தெரிந்தேதான் நனைகிறேன்... உனக்கு நனையப் பிடிக்கும் என்பதற்காக அல்ல... குறைந்தபட்சம் உன் நினைவுகளேனும் நனையட்டும் என்றுதான்...

நீ இல்லை...

விரல்கள் தொடும் தூரத்தில் நீ இல்லை... விழிகள் படும் தூரத்திலும் நீ இல்லை... ஆனாலும் 'அருகில்' என்பதன் பொருளை ஏன் அகராதியில் மாற்றுகிறாய்...

உள்ளிருந்து...

துயரங்களும் துரோகங்களும் முட்களென நெஞ்சம் கிழித்தாலும் மலரவே விடுகிறேன் புன்னகையை... முள்ளிலிருந்து அல்ல உள்ளிருந்து...

பாசாங்கு...

நான் பார்ப்பதை நீ பார்க்கிறாய்... நீ பார்ப்பதை நான் பார்க்கிறேன்... ஆயினும் விழிகளுக்கு இடையே திரையிடுகிறது பாசாங்கு...

இரவு வானம்...

Image
நிலவு நீங்கிய பின்னும் இருக்கவே செய்கிறது இரவு வானம்... பட்டமரம் நிற்பதைப்போல...

அழுக்கில்லை...

கால்களுக்கு கீழே குழிபறிக்கும் கரங்களே... என் பாதங்களில் அழுக்கில்லை... சேறு செறிந்திருக்கிறது உங்கள் கைகளிலும் மனதிலும்...

மனமும்கூட...

நீர் வழியும் பெரும்பாறை மட்டுமல்ல நீ வழியும் மனமும்கூட அருவியாகிறது...

மெதுவாகவே...

பொய்களைச் சுமந்தபடி ஒடுபவர்கள் ஓடட்டும் வேகமாக... நான் உண்மைகளைச் சுமந்தவாறே நடக்கிறேன் மெதுவாகவே...

கனவுகள்...

அடைகாக்கும் பறவையென அணைக்கிறேன் உறக்கத்தை... உன் நினைவுகளின் கதகதப்பில் பொரியக் காத்திருக்கின்றன கனவுகள்...

சலிப்பதேயில்லை...

தேன் வழியும் இதழ்கள்... திறக்கும்போது விரியும் குறுநகை... தலையாட்ட தாலாட்டும் அழகு... பார்க்க சலிப்பதேயில்லை மலரும் தேன் வழியும் இதழ்கள்... திறக்கும்போது விரியும் குறுநகை... தலையாட்ட தாலாட்டும் அழகு... பார்க்க சலிப்பதேயில்லை மலரும் மழலையும்......

மறந்தேன்...

மீளவே வழி இல்லா மாயச்சுழல் உன் சிரிப்பு... விழுந்தபின் நீச்சல் மறந்தேன் நான்...

வெறுமை...

போக்கும் வரத்தும் புகை கக்க மூச்சுத்திணறும் நெடுஞ்சாலை விசிறிவிட மரம் தேட விரிகிறது வெறுமை...

நினைவுகள்...

உதடுகள் தாண்டி உதிர்ந்துவிட்ட கனமான வார்த்தைகள் காதுகளுக்குள் உருள்வதுபோல நெஞ்சுக்குழியில் உருள்கின்றன நினைவுகள்...

குழந்தை...

உடைந்த பொம்மையிடமும் கதைபேசி சிரித்து விளையாட அழைக்கிறது குழந்தை...

துவட்டவே இல்லை...

குடையை விரிக்கும்முன் தலை நனைக்கும் பெருமழையின் முதல் தூறல்கள்போல எனை நனைக்கிறாய்... நான் துவட்டவே இல்லை...

மீன்கள்...

நிலவினை நிழல் கவ்வும்போது இழுபடும் பெருங்கடலில் எழுகின்ற அலைகளுக்கு கீழே அமைதியாகவே நீந்துகின்றன மீன்கள்...

காற்று...

இரத்தலுமில்லை ஈதலுமில்லை... மணம் சுமந்து செல்கிறது மலர் தழுவிய காற்று...

ஒவ்வொருமுறை...

ஒருமுறை தும்மும்பொழுது நீ நினைத்திருப்பாயோவென நான் நினைத்தேன்... இப்போதெல்லாம் ஒவ்வொருமுறை தும்மும்பொழுதும் உன்னை மட்டுமே நினைக்கிறேன்...

நிலவு...

காய்ந்த கதிர் சாய்ந்த பின்னர் பாய்ந்த இருளில் தோய்ந்த வானில் உடுக்களிடையே நழுவுகிறது நிலவு...

கிள்ளி எறிகிறாய்...

மழைக்கால காளானென என்னை நீ கிள்ளி எறிகிறாய்... என் வேர்களுக்கும் விழுதுகளுக்கும் நடுவில் நின்றுகொண்டு...

அலைகள்...

பெருங்கடல் ஒவ்வொரு முறையும் உள்ளிழுத்தாலும் கரை தேடியே ஓடுகின்றன அலைகள்...

ஏன்...

நீ சூடிக் களைந்த பூக்கள் ஓரத்தில் கிடக்க உன் கூந்தலை ஏன் சுற்றுகின்றன வண்டுகள்...

வாழ்க்கை...

அழுகின்ற குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டுகின்ற அன்னையைப்போல சில நிகழ்வுகளை கிலுக்கி நகர்கிறது வாழ்க்கை....

என்ன செய்வாய்...

ஏனென்று தெரியவில்லை என்னிலிருந்து நீ எட்டியே நிற்கிறாய்... பரவாயில்லை என் அருகிலேயே அமர்ந்திருக்கும் உன் நினைவுகளை என்ன செய்வாய்...

உணர்வதில்லை...

உறுத்தும் வலியை உணர்வதில்லை... ஒழுகும் குருதியை உணர்வதில்லை... அவர்கள் எருதின் புண் கொத்தும் காக்கைகள்...

காத்திருக்கிறேன்...

கூரிய கற்களும் குத்தும் முட்களும் செல்லும் வழியெங்கும் சிதறிக் கிடக்க உன் புன்னகைப் பூக்களால் கம்பளம் விரிக்கக் காத்திருக்கிறேன்...

அப்படியே இருக்கிறது...

இரவுகளும் பகல்களும் எண்ணற்றமுறை கடந்து சென்றபின்னும் அப்படியே இருக்கிறது வானம்...

ஒரு பாதியாய்...

பகல் ஒருபாதியாய் இரவு ஒருபாதியாய் பிரிந்த நாளின் பொழுதுகள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன உன் நினைவுகளுக்குள்...

வானவில்...

சூரியன் தூங்கினாலும் தூறல்கள் தூங்கினாலும் எழுவதேயில்லை வானவில்...

இல்லாத இரவு...

வெள்ளைப் பூக்கள் விரிந்த சோலையில் மெல்ல நடக்கும் தென்றலென நீ நடக்கிறாய் நினைவுகளில்... இரவென்பதே இல்லாமல் போனது இதயத்தில்...

இரவு...

பழிசொல்ல யாருமில்லை... வழிசொல்ல தேவையுமில்லை... ஒளியின் மேல் கவிழ்கிறது இருள்...

நினைவுகள்...

நீ காரணங்களேதும் சொல்லாமல் இதயங்களிடையே தொலைவைக் கூட்டுகிறாய்... நெருக்கமாகின்றன நினைவுகள்...

ஏதோ ஒன்று...

தேரோடிய வீதியில் சிதறிக்கிடக்கும் மலர்களுக்குக் கீழே கலைந்த கோலங்களின் கலவையான வண்ணங்களில் ஏதோ ஒன்று இறைவனின் வண்ணம்...

எங்கெங்கோ...

வெடித்துப் பறந்து வீசும் காற்றில் மிதந்து திரிந்து எங்கெங்கோ சென்று உயரத்திலிருந்து தரைக்கு வருகிறது எருக்கின் விதை...

மற்றும் நீ...

மனதின் காயங்களுக்கு வலிக்காமல் மருந்திட்டுச் செல்கின்றன சில புன்னகைகள்... மலர்... மழலை... மற்றும் நீ...

எங்கோ தொலைவில்...

வன்சொல்லால் என் இதயம் புண்ணாக இன்சொல்லால் மருந்திடத் திறக்கும் இதழ்கள் எங்கோ தொலைவில்...

காத்திருக்கிறேன்...

இதயம் துளைத்த வார்த்தை அம்புகளை பிடுங்கி எறிந்தபிறகும் நிற்காமல் வழிகிறது குருதி... கடைசிச்சொட்டும் வழியக் காத்திருக்கிறேன்...

நீ...

மழைமேகங்களை சுமந்து செல்லும் காற்றாக குளிர் தடவி செல்கிறாய் நினைவுகளில்...

நத்தையாகிறேன்...

கத்திமேல் நடக்கச் சொல்கிறது வாழ்க்கை... நத்தையாகிறேன் நான்...

பருகி பருகி...

பருகத்தீரா மதுக்குவளை மனம்... உன் நினைவுகளைப் பருகி பருகி நினைவிழக்கிறேன் நான்...

மெதுவாகவே...

வலுவான கால்கள்தான்... ஆனாலும் மெதுவாகவே நகர்கிறது வேங்கை... இரையை நெருங்கும்வரை...

எப்படி தெரியும்...

கவிதை எழுதிய காகிதத்தில் கப்பல் செய்து மிதக்கவிட்டேன்... நகரவேயில்லை என் வாசல் தாண்டி... மழைநீருக்கு எப்படி தெரியும் என் கவிதையில் கரைந்திருப்பது நீயென்று...

மழையில் நனைந்த சிறு குருவி...

மழையில் நனைந்த சிறு குருவி என் வீட்டு தாழ்வாரத்தில் உடல் சிலுப்ப குளிர்கிறது வீடு...

அறிந்தே இருக்கிறாய்...

நீ அறிந்தே இருக்கிறாய் உன் திருநாள் கொண்டாட்டங்களின் இரைச்சல்களுக்கு வெளியே ஒரு ஓரமாய் நிற்கும் என் மௌனத்தை...

மரம் வளரும்...

நீர்கண்ட இடம்நோக்கி நீள்கின்ற வேர்களாகின்றனர் பணம்கண்ட பக்கத்தில் சாயும் மனிதர்கள்... மரம் வளரும்... மனம்...?

நொண்டி அடிக்கின்றன நொடிகள்...

நீ ஒற்றைக்காலில் நிற்கிறாய்... நொண்டி அடிக்கின்றன நொடிகள்...

என்னை மட்டும்...

உன் விழிகள் போகும் வழிகளெங்கும் ஒளியின் கதிர்கள் கோலமிட என்னை மட்டும் ஏன் நிறுத்துகிறாய் இருளில்....

உப்புநீர்தான்...

காயம்பட்டவனின் கண்ணீரை விமர்சிப்பவர்கள் காயம்படும்வரை அவர்களுக்கு கண்ணீரென்பது வெறும் உப்புநீர்தான்...

சிலந்தி...

கைவிடப்பட்ட கட்டடத்தில் அடர்ந்திருக்கும் ஒட்டடையில் அமர்ந்திருக்கும் சிலந்தி அமைதியாகக் காத்திருக்கிறது பூச்சிகளுக்காக மட்டும்...

ஒதுக்குகிறாய்...

முகத்தில் விழும் முடிக்கற்றைகளை அனிச்சையாக ஒதுக்கும் விரல்களென ஒதுக்குகிறாய் என்னை... முடிதுறக்க மனமின்றி...

மலை...

அடிக்கும் வெயிலும் நடுக்கும் குளிரும் உராயும் காற்றும் ஓடும் நீரும் சிற்றுளி இல்லாமல் சிறுமணல் செதுக்க நிமிர்ந்தே நிற்கிறது மலை...

உன் நினைவுகள்...

ஏதோ பரபரப்பில் எனைமறந்த நிலையிலும் மெல்ல வருடும் உன் நினைவுகள்... உறங்கும் குழந்தையின் சிரிப்பைப்போல...

இரவும் பகலும்...

இமைகளுக்குள் உனைவரைந்து உறங்குகிறேன்... இருவிழிகளில் உனையெழுதி விழிக்கிறேன்... இப்படியாகக் கடக்கின்றன இரவும் பகலும்...

விண்மீன்கள்...

ஒருபொழுதுதான் இருளட்டுமே வானம்... இருண்டபின்னரே எழுகின்றன விண்மீன்கள்...

செம்புலப் பெயல்நீர்...

கருமுகில்கள் திறந்து பெருமழை பொழிய மண்தொட்ட வெட்கத்தில் சிவந்து ஓடுகிறது செம்புலப் பெயல்நீர்...

மழலையின் சிரிப்பு...

முட்களுக்கு வெளியே மலர்கிறது அரும்பு சிறு மழலையின் சிரிப்பைப்போல...

உன் நினைவுகள்...

மழையில் நனையும் இரவின் குளிரில் உறக்கம் தேடி உன் நினைவுகள் போர்த்துகிறேன்...

மீண்டும் மீண்டும்...

இலையுதிர்கால மரமென உதிர்க்கிறேன் உன்னை... வசந்தகால துளிரென என்னில் துளிர்க்கிறாய் மீண்டும் மீண்டும்....

வலியின் சுவை...

வலிநிறைந்த வார்த்தைகளால் செவிகளை நிரப்பும் நாவுகள் கடிபடும்வரை ருசிப்பதேயில்லை வலியின் சுவையை...

இப்போதும் வலிக்கிறது...

உன்னை நிரப்பி வைத்த மண்பானை மனதை உடைத்துவிட்டு சிதறிக் கிடக்கும் சில்லுகளின் மேல் நடந்து செல்கிறாய்... இப்போதும் வலிக்கிறது உன் பாதங்கள் வலிக்குமென்று...

பெருமழை...

கடல் குடித்து உடல் பருத்த கருத்த மேகங்கள் கரை தாண்டி தரை தொட நீர்க்கரங்கள் நீட்டிட பொழிகிறது பெருமழை...

இரவு...

துயர்கவ்வும் நெஞ்சின் விசும்பல்களை கேளாதிருக்க செவிகளை மூடிட நிறைகிறது இரவெங்கும் இருள்...

வழக்கம் போல...

என்றேனும் எனது தட்டில் புன்னகை எறிவாயென இப்போதும் கழைக்கூத்து ஆடுகின்றேன்... நீயோ மௌனத்தை வீசி செல்கிறாய் வழக்கம்போல...

கடைசிவரை கேட்பதில்லை...

கனிமம் தின்ன காடு கொல்லும் மிருகங்களின் காதுகளில் கடைசிவரை கேட்பதில்லை கருகும் உயிர்களின் கதறல்களும் காற்றின் கேவல்களும்...

மரவட்டை நினைவுகள்...

எத்தனைமுறை தள்ளிவிட்டாலும் பிடிவாதமாய் சுருண்டு கொள்கின்றன மரவட்டை நினைவுகள்...

வயிறுகள்...

உணவால் நிறைந்த வயிறுகள் உறக்கத்திலிருக்க விழித்தே இருக்கின்றன வறுமையால் நிறைந்த வயிறுகள்...

யானைக்கூட்டம்...

சிறுநகரமாக மாறிவிட்ட மலைவாழிடத்தில் ஆதிநினைவுகளில் பதிந்துகிடக்கும் வழித்தடம் தேடுகிறது யானைக்கூட்டம்...

மரக்கிறது மனது...

முறிந்த உறவுகள் குத்தும் வலி உணர்வுகள் துளைக்க மரக்கிறது மனது...

உன் நினைவுகள்...

காற்று தொட நீர் தாண்டும் கயல் கவ்வும் செம்பருந்தின் நகங்களைவிட கூரானது உன் நினைவுகள்...

சிலையா சிதறலா...

உளிபடும் இடமும் உடைபடும் விதமும் கற்களுக்கு சொல்கின்றன சிலையா சிதறலா என...

முயல்வதுமில்லை...

ஓடுவதற்கு முடிவதுமில்லை முயல்வதுமில்லை... மெதுவாகவே நகர்கின்றன ஓடு சுமக்கும் ஆமைகளும் கூடு சுமக்கும் நத்தைகளும்...

குறைகிறது தூரம்...

மவுனங்களால் நிரம்பிய இடைவெளியை புன்னகையால் கடக்கிறேன்... குறைகிறது தூரம்...

பெருமழை...

கடல் தேடி காணாமல் கருமுகில்கள் கலங்கி நிலம் நனைக்க பெய்கிறது பெருமழை...

மழலைகள்...

மழைநீரில் விடுகின்ற கப்பல்கள் மிதந்தாலும் கவிழ்ந்தாலும் சிரிக்கின்றன மழலைகள்...

யார் முதலில்...

ஒருகரையில் நீ... மறுகரையில் நான்... நதியென ஓடுகிறது மௌனம்... பரிசலில் யார் ஏறுவது முதலில்...

குழந்தைகளின் வழி

வீடெங்கும் சிதறிக் கிடக்கும் பொம்மைகளுக்கு தெரியும் குழந்தைகளின் வழி எதுவென்று...

மனிதர்கள்...

தலையில் தாங்கிய வார்த்தைகள் தரையில் விழுந்தபின் பாதம் மிதித்து நடக்கிறார்கள் பணம் தின்னும் மனிதர்கள்...

மனம்...

நீ உன்னை மவுனங்களால் நிரப்புகிறாய்... பாரமாகிறது என் மனம்...

வேர்கள்...

விதைகளை செடியில் விட்டு உதிரும் மலர்களின் புன்னகையில் நனைகின்றன வேர்கள்...

பணக்குளம் தேடி...

கொட்டியும் ஆம்பலுமாக ஒட்டியே இருக்கவேண்டிய கெட்டியான உறவுகள்கூட பறவைகளாகி இறக்கைகள் விரிக்கின்றன பணக்குளம் தேடி...

வாழ்க்கை...

முதல் வெயிலில் விழுகின்ற நெடுமரத்தின் நிழலென நீளும் ஆசைகள்... உச்சி வெயிலாய் தகிக்கிறது வாழ்க்கை...

வாழ்க்கை...

மனதின் காயங்களுக்கு மருந்து தேடும்போது வலிகளை பூசி நகர்கிறது வாழ்க்கை...

அலைபாய்கிறேன்...

ஈர நிலத்தில் இரை கொத்தும் சிறுகுருவியென இங்கும் அங்கும் அலைபாய்கிறேன்... உன் நினைவுகளில் நனைந்த மனதில் நடக்கும்போது...

உறங்கட்டும் மரங்கள்...

நிலத்தின் விரிசல்களை நீர்த்துளிகள் அடைக்கும்வரை விதைகளுக்குள் உறங்கட்டும் மரங்கள்...

சில நினைவுகளில்...

இரையைத் துரத்தும் சிறுத்தையென நினைவுகளின் ஊடாக விரையும் மனது சட்டெனத் தேங்குகிறது கடக்க இயலாத சில நினைவுகளில்...

சிறுநாவல்...

தேனில் தோய்த்தது என்றாலும் சிறுநாவல் நடுநாவில் தூவிச்செல்கிறது துவர்ப்பு...

வெயிலின் காதல்...

சிறுமணல்கள் பெருகிக்கிடக்கும் சுடும் பாலையில் கருகாமல் நிற்கும் கள்ளிச்செடியின் பூக்களுக்குத் தெரியும் வெயிலின் காதல்...

மரணிக்கிறது காரம்...

அறச்சீற்றம் மரணித்து அடிமைகளாய் மாறியபின் கடிக்கும் மிளகாயிலும் மரணிக்கிறது காரம்...

யார் சொல்வது...

இரைச்சலோடு செல்லும் இந்த வாகனங்களுக்கு யார் சொல்வது... தங்களின் சக்கரங்களுக்கு கீழே சமாதியாகியிருக்கின்றன வளர்ந்த மரங்களும் வண்ணப்பறவைகளின் கூடுகளுமென்று...

இரவு...

இரைக்கு மேலே பறக்கும் ஆந்தையின் கண்களென இருளுக்குள் விரிகிறது இரவு...

வாழ்க்கை...

காற்றில் மிதந்து கலவையான வண்ணங்கள் காட்டி கவனிக்கும் முன் காணாமல் போகும் வழலைக் குமிழென உடையும் விருப்பங்களின் ஊடாக நகர்கிறது வாழ்க்கை...

காற்றாகவே...

காற்றாகவே நான் இருக்கிறேன்... இசை தேடுபவர்கள் புல்லாங்குழலுக்குள் திணிக்கிறார்கள் என்னை...

வலி...

நொறுங்கிச் சிதறிய நம்பிக்கைகளின் மேல் நடந்து செல்லும் மனதின் காயங்களில் வழிகிறது வலி...

இனிப்பு...

அத்தனை அடிமைகளிடமிருந்தும் எடுக்கப்படுகிறது இனிப்பு... புத்திசாலி பூவாகிறான் அடிமுட்டாள் கரும்பாகிறான்...

வாழ்க்கை...

தொலைந்து போன கனவுகளைத் தேடும் தொலையாத நினைவுகளின் துரத்தல்களுக்கு நடுவே ஓடுகிறது வாழ்க்கை...

கனவுகள்...

உயிரற்ற ஈசல்களின் உடல்களென நிலத்தில் நினைவுகள் விழுந்தபின்னும் உயரப் பறக்கும் இறகுகளென உறக்கத்தில் பறக்கின்றன கனவுகள்...

போதை...

மது விற்பவன் கடவுளாகிறான்.... மருந்து தருபவன் சாத்தானாகிறான்... போதை கவிழ்க்க எழும் விரல்கள் ஏணிகளாகின்றன... பாதை காட்ட நீளும் விரல்கள் பாம்புகளாகின்றன... போதை அடிமைகளுக்கு புண்ணியமென்பது போதை மட்டுமே...