Posts

Showing posts from February, 2021

வளர்பிறையா தேய்பிறையா...

தேயும் திங்களென கரைகிறது இரவு... வளரும் மதியென பெருகுகின்றன உன் நினைவுகள்... வளர்பிறையா தேய்பிறையா எனத் தெரியாமல் திண்டாடுகிறது என் உறக்கம்...

குற்றம் புற்களிலில்லை...

முள் வழியில் நடந்து பழகிய கால்கள் புல்வெளியில் நடக்கும்போதும் மென்மை உணரவில்லையெனில் குற்றம் புற்களிலில்லை...

ஒதுக்கிச் செல்கிறாய்...

சருகொன்று காற்றில் மிதப்பதுபோல கனவுகளில் மிதக்கிறேன் நான்... கடைசியில் தரை சேர்ந்ததும் குப்பையென்று ஒதுக்கிச் செல்கிறாய் நீ...

நாட்கள் ஒதுக்குகிறது...

உள்ளம் புரியாமல் உடனிருக்கும் உறவுகள் முள்ளால் கீறிச்செல்ல முகம் சுளிக்காமல் நகர கற்றுத்தர நாட்கள் ஒதுக்குகிறது வாழ்க்கை...

ஆவதென்ன...

இருகரை வழிய பாய்ந்தோடும் பெருநதியென உன் நினைவுகள் என்னை இழுத்துச் செல்லும்போது எதிர்த்து நீந்துவதால் ஆவதென்ன...

தமிழுக்கு மட்டுமே...

 தாய்மொழி என்றொன்று எல்லோருக்குமுண்டு... மொழியே தாயாகி முக்காலமும் நிலைக்கும் பெருமை முதிர்ந்தாலும் மூப்பில்லா தமிழுக்கு மட்டுமே என்றுமுண்டு...

காற்றில் விசிறுகிறது...

அடுக்கடுக்காக உன் நினைவுகள் அடுத்தடுத்துப் பூத்திருக்க கனவுகளை காற்றில் விசிறுகிறது சரக்கொன்றை இரவு...

உணரச் செய்கின்றன...

என்னுள் எப்போதோ படிந்துபோன உன் நினைவுகளின் படிமங்களுக்கு இப்போதும் உயிர் உண்டென உணரச் செய்கின்றன இரவுகளின் கனவுகள்...

கரைகிறேன்...

நீரில் மிதக்கும் பனிப்பாறையென மிதக்கிறேன் உன் நினைவுகளில்... சிறுகச் சிறுக உருகுகிறேன் உன் நினைவுகளின் வெப்பத்தில்... உருக உருக கரைகிறேன் உன் நினைவுகளின் வெள்ளத்தில்...

மாறித்தான் போகிறது...

மழையாகி மலை கடந்து நதியாகி நிலம் கடந்து கடல்சேரும் காலத்தில் மாறித்தான் போகிறது நீரின் சுவை...

இறுக்கமாகவே இரு..

பாறையிடுக்கில் தேங்கும் நீர்போல உன் மனதில் தேங்குகிறேன்... நீ இறுக்கமாகவே இரு... மழையெனப் பொழிந்து வெயிலெனக் காய்ந்து பனியெனப் பெய்யும் என் நினைவுகள் விரிசல்கள் செய்யும்வரை நீ இறுக்கமாகவே இரு..

அப்பா...

 கடந்த நொடியெனவே காலம் காட்டுகிறது ஆண்டுகள் ஐந்து அடங்கிய பின்னரும்... இன்றைக்கும் உறங்கியெழும் வேளையில் உங்கள் குரலே செவி தட்டுகிறது... ஊரடங்கி உறங்கச் செல்லும் வேளையிலும் உங்கள் விரல்களே தலை வருடுகிறது... அப்பா... எப்போதும் அளவில்லா அன்பின் உச்சாணி... இப்போதும் எங்கள் வாழ்வின் அச்சாணி...

நீ...

 சுழியத்தில் தொடங்கி முடிவிலியாக நீளும் இயலெண்களப் போலவே உன் நினைவுகளும்... எண்களை எண்ணால் வகுத்தேன் ஈவும் மீதமுமாக எண்ணே வந்தது... உன் நினைவுகளை என்னால் வகுத்தேன் ஈவும் நீ மீதமும் நீ...

ஏனிந்தப் பசி...

என்னைத் தின்னும் உன் நினைவுகளுக்கு இரவுகளில் மட்டும் ஏனிந்தப் பசி...

இனிப்பதில்லை தேனீக்களுக்கு...

ஆயிரமாயிரம் மலர்களில் அமர்ந்தெழுந்து செய்த தேனடை பிழிந்தபின் தேனும் இனிப்பதில்லை தேனீக்களுக்கு...

எப்படித்தான் நடக்கின்றனவோ...

உறக்கமில்லா இரவுகளின் சுமைகள் இமைகளை அழுத்த திறக்க இயலா இமைகளினுள் எரியும் விழிகளில் எப்படித்தான் நடக்கின்றனவோ உன் நினைவுகள்...

உயரம் குறைவதில்லை...

ஒன்றிரண்டு பாறைகள் உருண்டு விழுவதால் ஒருபோதும் உயரம் குறைவதில்லை இமயம்...

எப்போதும் பொழியும்...

இரவு வானின் இருள் பின்னணியில் எப்போதேனும் பொழியும் எரிகற்களின் மழைபோல எப்போதும் பொழியும் கனவுகள் உன் நினைவுகளிலிருந்து...

காணாமல் போகிறது மகிழ்ச்சி...

நெடுநாள் நீர்காணா நிலத்தில் விழுந்த முதல் துளியென வாழ்க்கை தொட்டதும் வந்த வேகத்தில் காணாமல் போகிறது மகிழ்ச்சி...

வேர்களில் இருக்கிறேன்...

 நீயோ பூக்களில் என்னைத் தேடுகிறாய்... நானோ உன் வேர்களில் இருக்கிறேன்...

அடவியாகிறது இரவு...

கனிகள் நிறைந்த மரமொன்று காற்றிலசைய உதிரும் கனிகளென விழுகின்றன உன் நினைவுகள்... ஒவ்வொன்றும் முளைக்க கனவுகளின் அடவியாகிறது இரவு...

யோசிப்பதற்குள்...

இரவும் கனவும் என்னை உறங்கச் சொல்ல நீயும் நினைவுகளும் என்னை விழிக்கச் சொல்ல என்ன செய்வதென்று யோசிப்பதற்குள் விடிந்து விடுகிறது...

சமமாகவே வாய்ப்பளிக்கிறது...

 அலகு தீட்டி காத்திருக்கிறது கழுகு... பஞ்சாரம் தாண்டாமல் பார்த்திருக்கிறது கோழிக்குஞ்சு... சமமாகவே வாய்ப்பளிக்கிறது வாழ்க்கை...

உன் நினைவுகள் என்னோடு...

 பிடியொன்றின் கால்களுக்கிடையில் நடக்கும் கன்றென உன் நினைவுகள் என்னோடு...

மௌனமாகின்றன பெரும்பாலும்...

மலையிலிருந்து கீழிறங்கும்போது சலசலக்கும் சிற்றோடைகள் நதியாகும்போது மௌனமாகின்றன பெரும்பாலும்...

எதிரே நிற்கிறது என் உறக்கம்...

மதநீரொழுக தினவெடுத்துத் திரியும் வேழமென உன் நினைவு... என்ன செய்வதெனத் தெரியாமல் எதிரே நிற்கிறது என் உறக்கம்...

நிலம் வருந்துவதில்லை..

இடிமுழங்க கடந்து செல்லும் எல்லா மேகங்களும் பொழிவதில்லையெனப் புரிந்த நிலம் வருந்துவதில்லை..

உன்னைக் கடந்து...

என்னைச் சூழ்ந்திருக்கும் உன்னைக் கடந்து நண்பகல் சுடுவதுமில்லை நள்ளிரவு குளிர்வதுமில்லை...

கனவு முத்துக்கள்..

உன் நினைவுப் பெருங்கடலின் கரையில் என் உறக்கம் எடுக்கும் ஒவ்வொரு சிப்பிக்குள்ளும் கனவு முத்துக்கள்..

கவனிக்கப்படுவதில்லை...

 வெளிச்சம் உமிழ்ந்தபோதும் விண்மீன்கள் கவனிக்கப்படுவதில்லை பகலில்...

ஈரமாகிப் போகிறது இரவு...

இறைக்கக் குறையாமல் நீரூறும் கிணறென நினைவூறும் நெஞ்சம்... இறைத்து இறைத்து ஊற்றுகிறேன்... ஈரமாகிப் போகிறது இரவு...

கனக்கிறது உறக்கம்...

 கற்பாறையென கடினமாகவே இருக்கிறது இரவு... நினைவுளியால் செதுக்குகிறாய் நீ... கனவுச் சிலைகளால் கனக்கிறது உறக்கம்...

சரவெடியென...

 திரி கிள்ளப்பட்ட சரவெடியென உன் நினைவு... நெருப்போடு காத்திருக்கும் இந்த இரவு... செவிடாகித்தான் போனாலென்ன என் உறக்கம்...

தேடுவதற்காக...

 பேராறு ஒன்று கரைபுரள பெருவெள்ளம் பாய்ந்தோட தேங்கும் மணற்துகள்கள் வரைகின்றன நதியின் தடத்தை... பின்னொரு நாளில் தேடுவதற்காக...

கடந்து செல்வதேயில்லை...

 நீயில்லாத பொழுதுகளும் உன்னைச் சுமக்கும் நினைவுகளும் நகர்ந்து சென்றாலும் கடந்து செல்வதேயில்லை...

உவகையடைகிறது பாவம்....

 பெருங்காற்றில் மேலெழும்பும் சிறு சருகு உயரங்கள் தாழ்ந்ததாக உவகையடைகிறது பாவம்....

மெல்ல நகர்கிறது இரவு...

 நீ என்னோடு பேசாத பொழுதுகளின் கனம் செறிந்த கணங்கள் இரவை அழுத்த சுமை தாளாமல் மெல்ல நகர்கிறது இரவு...

அன்பை மட்டுமே விதைப்போம்...

வாழ்க்கை நிலம்போல... ஒன்றை விதைக்க ஓராயிரம் விளையும்... அன்பை விதைப்போம்... அன்பை மட்டுமே விதைப்போம்...

சமநிலை தவறுவதில்லை என் இரவு...

 இரவுத் தராசின் ஒரு தட்டு உன் நினைவுகள் ஏறிக்கொள்வதால் கீழிறங்க மற்றொரு தட்டில் கனவுகள் ஏறி மேலிழுக்க சமநிலை தவறுவதில்லை என் இரவு...

உறங்குவதெப்படி தெரியவில்லை...

 இதோ இரவு மலர்கிறது... உன் நினைவுத் தேனீக்களின் ரீங்காரத்திற்கிடையே உறங்குவதெப்படி தெரியவில்லை...

ஊட்டுகிறது இரவு...

வாய்நிறைய உணவு சுமந்து கூடுதிரும்பும் தாய்ப்பறவை வயிறுநிறைய குஞ்சுகளுக்கு ஊட்டுவதைபோல உன் நினைவுகளை கனவுகளுக்கு ஊட்டுகிறது இரவு...

என் உறக்கம்தான்..

 மண் கிளறும் கோழியென மனம் கிளறும் உன் நினைவுகள்... காயப்பட்டுப் போவதென்னவோ என் உறக்கம்தான்...

ஒளிர்கிறது நிலவு...

 இரு கைகளில் மையள்ளி முகம் பூசிய மழலையென இரவு வானம்... புன்னகையென ஒளிர்கிறது நிலவு...

கனவுகள் இசையாக...

 விரல்கள் தொட்டிழுக்க அதிரும் வீணையின் தந்தியென உன் நினைவுகள் வருடும்போது அதிரும் உறக்கத்தில் சிதறுகின்றன கனவுகள் இசையாக...

துணிவதில்லை ஆலமரம்...

வேர்களை மட்டுமே நம்பி விரிந்து படரத் துணிவதில்லை ஆலமரம்...

கண்ணீரில் சுவர் கரையும்...

 மௌனச் சுவரின் இருபுறமும் நீயும் நானும் நிற்கும்போது சுவரின் கண்ணீரில் சுவர் கரையும்...

தொடுவதில்லை வெளிச்சம்...

 சிறு குட்டையில் தேங்கிய நீரில் பாசி படர்ந்தபின் அடியாழம் தொடுவதில்லை வெளிச்சம்...

சத்தங்கள் மறக்கின்றன..

 பறவைகளின் கீச்சொலி தொலைத்த மரங்களில் இலைகளும் கிளைகளும் சத்தங்கள் மறக்கின்றன..

என் உறக்கம்...

 நீ இல்லாத பகல்களில் இதயத்தில் உலவும் உன் நினைவுகள் இரவானதும் இமைகளுக்குள் இடம்பெயர இடமின்றி இறங்குகிறது என் உறக்கம்...

நிரப்பாமலா விடப்போகிறாய்...

என்னிலிருந்து நீ தள்ளி இருப்பதால் என்னதான் மாறிவிடப் போகிறது... பகல்களை உன் நினைவுகளாலும் இரவுகளை உன் கனவுகளாலும் நிரப்பாமலா விடப்போகிறாய்...

ரசிக்கும்போதே...

 வழலைக் குமிழியென வண்ணங்களை எதிரொளித்தவாறே பறக்கும் வாழ்க்கை ரசிக்கும்போதே உடைந்து போகிறது...

பாவம் நீ...

 உன் நினைவுகள் என் பக்கமாக திரும்புவதைத் தடுக்க ஏதேதோ செய்கிறாய் பாவம் நீ... காற்றிழுத்து கயிற்றில் கட்டுகிறாய்..

வரையத் தவறுவதில்லை...

 என் இரவுகளின் முற்றத்தில் கனவுகளை வண்ணக் கோலங்களாக வரையத் தவறுவதில்லை உன் நினைவுகள்...

தமிழ்த் திமிர்...

 வாடிவாசல் கடந்து வால் சுழற்றி சினம் தெறிக்க சீறிவரும் காளைகளின் கூர்கொம்பு தாண்டி திமிலணைக்கக் குவிந்திருக்கும் கூட்டத்தில் செறிந்திருக்கிறது தமிழ்த் திமிர்... #என்றும் வீழோம்👍🏻

தீ வைக்கிறது இரவு...

 அகலில் தளும்பும் எண்ணெயில் நனைந்த பஞ்சுத்திரியென உன் நினைவுகளில் ஊறிக்கிடக்கும் உள்ளத்தில் மெல்லத் தீ வைக்கிறது இரவு...

உடையாதிரு மனமே...

 கடலில் மிதக்கும் கலமும் மூழ்கித்தான் போகிறது உடைந்த பிறகு... உடையாதிரு மனமே...

இமைகள்...

 உன் நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையே எல்லைக்கோடாக மாறிப்போகின்றன இமைகள்...

நதியின் தாகம்...

 அல்லும் பகலும் அடர்ந்து பெய்யும் மழையின் பெருக்கில் அணைகள் தாண்டும் நீரின் வேகத்தில் தணிகிறது நதியின் தாகம்...

இழுத்துச் செல்கிறாய்...

 கரைதொட்டுத் திரும்பும் கடலலைகள் காலடி மணலை அரித்துச் செல்வதுபோல நீ ஒவ்வொருமுறை பார்த்துத் திரும்பும்போதும் இழுத்துச் செல்கிறாய் என் மனதை...

காலணியின் தேவை மட்டுமா...??

 காலாற புல்வெளியில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் முள்ளொன்று சொல்லுவது காலணியின் தேவை மட்டுமா...??

விதைக்கிறாய்...

 இதென்ன உன் நினைவுகள் மேகங்களாகத் திரள்கின்றன... மின்னல்களாக ஒளிர்கின்றன... பெருமழையாய் பொழிகின்றன... நீயோ சேறாகிப்போன மனதில் ஏரோட்டி உன் நினைவுகளையே விதைக்கிறாய்...

சுமந்துகொண்டு...

 நோவாவின் பேழையாகிறது மனது... முழுவதுமாக உன் நினைவுகளைச் சுமந்தபடி... பேரூழிக்காலத்திற்கு பின்னரும் பேழை இருக்கும்... புதிய உலகிலும் உன் நினைவுகளையே சுமந்துகொண்டு...