Posts

Showing posts from April, 2018

இரவு...

சிறுஇலைகள் அசைக்கக்கூட திறனற்ற மென்காற்றை சூடாக்கி துயரேற்றுகிறது கருப்பு வெயிலில் காய்ந்து தகிக்கும் இரவு...

பகல்...

அனலின்மேல் நடக்கும் பகலினுள் உலவாமல் ஒளிந்திருக்கும் தென்றலின் முகவரி தேடி அலையும்போது வியர்வையில் நனைகிறது பொழுது...

இரவு...

விழிகளிரண்டிலும் வழியும் கனவுகள் கண்ணீரின் தடங்களை கழுவிச்செல்ல இருளாய் புன்னகைக்கிறது இரவு...

இரவு...

சூடான காற்றில் சுவாசிக்கத் திணறி இருள் போர்வையை எடுத்தெறிய இயலாமல் வெப்பத்தில் புழுங்குகிறது இரவு...

இரவு...

வாழ்ந்துகெட்ட வீட்டின் கொல்லையில் வளர்ந்த தேக்குமரத்தின் சருகுகளை சத்தமின்றிக் கடக்கிறது இருளும் இரவும்...

இரவு...

சேறு தாண்டும் சிறுமியென தயங்கி வீசும் மென்காற்று சுமந்து செல்லும் வேப்பம்பூக்களின் மணத்தைத் தொடர்கிறது இளவேனிலில் நகரும் இரவு...

இரவு...

வெளியில் அடித்த வெயில் விழிகளுக்குள் காய இருளெடுத்து இமை நீவுகிறது இரவு...

இரவு...

நொடிகளின் மேல் நடந்த காலம் மணிகளின் மேல் நகர்கையில் கனவுகளில் கரைகிறது இரவு...

பகலிலும் கருப்பு...

கொடும் கோடையில் காய்ந்த மூங்கில்கள் காதலோடு உரச கனன்ற பொறியில் காடு பற்றியது போல நெருப்பென பரவியது கருப்பு பகலிலும்...

நிரம்பி வழிகிறது...

துருப்பிடித்த கலப்பையை தூர வைத்துவிட்டு நீர்கசியும் விழி்களோடும் நெஞ்சறுக்கும் துயரோடும் நின்று பார்க்கையில் நீர் நின்ற கழனியெங்கும் நிரம்பி வழிகிறது எரியெண்ணெய்...

கதை பேசி...

கதை பேசிக்கொண்டே களித்திருப்போம்... கைப்பிடி அரிசிக்கு கழுத்தைப் பிடிக்கும் காலமொன்று வரும்... அதுவரை கதை பேசிக்கொண்டே களித்திருப்போம்... பி.கு: காவிரி

ஒவ்வொரு நாளும்...

உப்புநீரில் நெல் விளையுமெனில் கடல்நீர் கூட தேவையில்லை... எங்கள் கண்ணீரே போதும்... கடைமடை விவசாயி கலங்கிச் சொல்கிறான் "மரணம் ஒருநாள் கொல்லும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கொல்லும்..."

இரவு...

நினைவலைகளின் மேல் எழும் கனவு நுரைகளை இருள் கரையில் குவித்து வைக்கிறது இரவு...

இரவு...

இருளில் நகரும் யானைக் கூட்டமென கனவில் நகர்கிறது இரவு...

இரவு...

நீள்நிலத்தை நெடுங்கடல் தின்றபின்னும் மாளாத தமிழ்குடியை மாய்த்திடுமோ மாயவலை... இருளுக்கு வெளியே எப்போதும் நீள்வதில்லை இரவு...

இரவு...

அடுப்பென்று நினைத்து உருவி எறிய விறகு தேடுகிறான்... கரும்புள்ளிகள் கண்டு இருளென்றே எண்ணுகிறான்... சூரியனில் ஏதடா இரவு...

இரவு...

நீல வானம் நிறை இருளால் நிறம்மாறிப் போனது நீதியைப் போலவே... விடியக் காத்திருக்கிறது இனமும்... இரவும்....

சாத்தானைக் காணவில்லை...

குழந்தைக்கு தேவதை கதை சொல்லி முடித்தபின் மனதிற்குள் உட்கார்ந்திருந்த சாத்தானைக் காணவில்லை....