Posts

Showing posts from January, 2021

வேண்டிக்கொண்டு..

 இப்போதெல்லாம் அரிதாகவே புன்னகைக்கிறாய் நீ... பாலைவனத்தின் நீர்ச்சுனை போல... ஒட்டகம் போல உள்ளிழுக்கிறேன் நான்... அடுத்த சுனை அருகிலிருக்க வேண்டிக்கொண்டு..

மூச்சுத்திணறுகிறது தன்மானம்...

 பேரன்பின் பிடியில் சிக்கும்போது சிலநேரங்களில் மூச்சுத்திணறுகிறது தன்மானம்...

என் கண்கள் விழிக்கும்வரை..

 உன் நினைவுகள் சுற்றித் திரிகின்றன பட்டாம்பூச்சிகளின் கூட்டம்போல... இறக்கைகளின் ஒவ்வொரு அசைவிலும் நிறங்கள் உதிர வண்ணங்களின் கலவையாகிறது இரவு... என் கண்கள் விழிக்கும்வரை...

காதுகள் கேட்பதேயில்லை...

 காற்று சுமந்து நிற்கும் கதைகளின் உண்மைகளை காதுகள் கேட்பதேயில்லை...

உன் நினைவுகள்...

 இளைப்பாற இடமின்றி நெடுந்தூரம் வலசை போகும் பறவைகள் இறங்கியதும் இரை தேடுவதுபோல என் உறக்கம் தேடும் உன் நினைவுகள்...

எழுதுகோல்...

 ஞாலம் உயர்த்தும் நெம்புகோல் நல்லதை மட்டும் நாளும் எழுதும் எழுதுகோல்...

சிதைந்து போகின்றது பாவம்...

 பெருவெடிப்பை அடுத்த நுண்நொடியில் பேரண்டம் விரிந்த வேகத்தில் விழுகின்றன உன் நினைவுகள்... சிலந்திவலை உறக்கம் சிதைந்து போகின்றது பாவம்...

கிணற்றுத்தவளை..

 கடலுண்டு என்று சொன்னேன் கற்பனைக்கு அளவில்லையென நகைக்கிறது கிணற்றுத்தவளை..

இரண்டுமே யுகங்கள்தான்...

 என்னிடமிருந்து தள்ளி நிற்பதென்று நீ முடிவெடுத்தபின் மணித்துளிகளுக்கும் மாதங்களுக்கும் வேறுபாடுகளேதும் விளங்கவில்லை எனக்கு... இரண்டுமே யுகங்கள்தான்...

கருகும் கனவுகள்...

 மனதின் வலி சுமந்து வழியும் விழிநீரின் வெப்பத்தில் கருகும் கனவுகள்...

தடுமாறும் கனவுகள்...

 உள்ளுக்குள் ஊறும் போதை நீ... பொழுதுகள் தவறாமல் பருகுகிறேன் நான்... சாய்ந்த பொழுதில் தளர்ந்த இரவில் தள்ளாடும் உறக்கத்தின்மேல் தடுமாறும் கனவுகள்...

இலக்கணம் சொல்லும் செடிகள்...

 வாடிய பூக்கள் உதிரும்போது வருந்துவதுமில்லை... புதிய மொட்டுக்கள் முகிழ்க்கும்போது மகிழ்வதுமில்லை... துறவின் இலக்கணம் சொல்லும் செடிகள்...

உன் நினைவுகள்....

 எத்தனைமுறை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் காதோரம் ரீங்காரமிடும் சிறுபூச்சியைப்போல என் உறக்கத்தைச் சுற்றும் உன் நினைவுகள்....

வாடுவதில்லை நிலம்...

வாடையும் கோடையும் வந்து வந்து போனாலும் வாடுவதில்லை நிலம்... சிறுமழை உண்டபோதும் செழிக்கிறது...

புதிதாக விடியட்டும்...

 முகத்தின் புன்னகையை மூடிவைத்த மோசமான நாட்கள் முடியட்டும்... கொஞ்ச வரும் குழந்தையைக்கூட சட்டெனக் தூக்கத் தயங்கிய துயரமான கணங்கள் முடியட்டும்... விரிந்த வெளியிருக்க வீடே சிறையாகிப்போன வேதனை நாட்கள் முடியட்டும்... எதிர்வரும் ஆண்டில் இறையருளால் இன்னல்கள் நீங்கி இன்பங்கள் பெருகி புதிதாக விடியட்டும்...

ஏனிந்த கோரப்பசி...

 உன் நினைவுகளுக்கு ஏனிந்த கோரப்பசி... ஒவ்வொரு நாளும் என் உறக்கம் தின்று செரிந்து கனவு ஏப்பங்களை காற்றில் கலக்கிறது...

பறக்கத் தொடங்குகிறேன்...

 என் தேடல்களின் பாதைகளெங்கும் பாறைகளால் மூடுகிறது வாழ்க்கை... பறக்கத் தொடங்குகிறேன் நான்...

பயணிக்கின்றன கனவுகள்...

 இடறாத உன் நினைவுகளில் பாதம் பதித்து இரவின் சரிவில் இறங்குகிறேன் ஒரு யானைபோல... என் மேல் பயணிக்கின்றன கனவுகள்...

பயணிக்கின்றன கனவுகள்...

 இரவின் சரிவில் இறங்குகிறேன் ஒரு யானைபோல... இடறாத உன் நினைவுகளில் பாதம் பதித்து... என் மேல் பயணிக்கின்றன கனவுகள்...

வேறென்ன இருக்கமுடியும்...

 இழந்த பொழுதுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியின் சிறுதுகள்களைத் தேடிச் சேகரிக்க சிறந்த இடம் கனவின்றி வேறென்ன இருக்கமுடியும்...

வழுக்குகிறேன் நான்...

 தொடர்மழையில் நனைந்த தரையில் பாசி போலவே நீ... நொடியில் நூறுமுறை வழுக்குகிறேன் நான்...

களைகிறேன்...

 பெருங்காடென விரிகிறது வாழ்வு... சிறு தீப்பொறியென தெறிக்கிறது சினம்... சினம் களைய இயலாமல் காய்ந்ததைக் களைகிறேன்...

இறங்குகிறாய்...

 சரிவுகளில் இறங்கும் நீர்போலவே என்னுள் நீ இறங்குகிறாய்... நெஞ்சினுள் தேங்கும் உன் நினைவுகளில் கனவலைகள் மட்டுமே சலனங்கள்...

ஒட்டிக்கொள்கிறது...

 குளிரள்ளி வீசும் காற்றில் நடுங்காமலிருக்க இருளோடு ஒட்டிக்கொள்கிறது இரவு..

பருகுகின்றன என்னை...

 பனித்துளிக்குள் சிறைப்பட்ட பரிதி பனித்துளியை உறிஞ்சுவதுபோல உன் நினைவுகளும் பருகுகின்றன என்னை...

இப்போதும்...

 என் இரவுகளை எடுத்து மைதீட்டுகிறாய்... என் பகல்களை எடுத்து முகம் ஒற்றுகிறாய்... நாட்களையெல்லாம் நீ எடுத்துக்கொண்டபின் நானெப்படி அகவைகளைக் கடப்பது... உன்னைப் பார்த்த நாளில்தான் நிற்கிறேன் இப்போதும்...

மெல்ல நழுவுகிறது

 இரை விழுங்கிய பாம்பு போல நாளிலிருந்து மெல்ல நழுவுகிறது இரவு வயிற்றுக்குள் என் உறக்கம் சுமந்துகொண்டு...

நீ மட்டுமே...

 நினைவுகளின் தொகுப்புதான் நானெனில் நானென்பது நீ மட்டுமே...

விழித்தே கிடக்கிறது...

 விழிகளுக்குள் உன்னைப் பொதிந்து என்னில் எறிந்து செல்கிறாய்... இதயமெல்லாம் கண்களாகி இரவும் பகலும் விழித்தே கிடக்கிறது...

என்ன செய்வது...

 அனலருகே மெழுகை வைத்துவிட்டு உருகாமல் பார்த்துக்கொள்ள சொல்லுகிறது வாழ்க்கை... எரியும் விரல்களை என்ன செய்வது...