Posts

Showing posts from July, 2018

இரவு...

விழிகளில் உதிரும் கனவுகள் இமைகள் நிறைத்து வழிகையில் கதைகள் பேசி கடக்கிறது இரவு...

தகப்பன் அன்பு...

நீர் சுமந்து போகும்போதும் நிழல் விரித்துச் செல்லும் மேகம்போல் கண்டுகொள்ளப்படாமலே கடக்கப்படுகிறது தகப்பன் அன்பு...

இரவு...

பெருநதியின் நீர்ச்சுழலென நினைவுகளை உள்ளிழுக்கும் உறக்கத்தில் நீந்தி கரை நெருங்கும் கனவுகளுக்கு கை நீட்டுகிறது இரவு...

இரவு...

இமைகள் மூடியபின் இருளுக்குள் விழுந்த விழிகளின்மேல் ஒளி தடவும் கனவுகள் வலி தடவிச்செல்ல வார்தைகளின்றி மவுனிக்கிறது இரவு...

இரவு...

உடைந்த நிலாத்துண்டுகள் விரவிக்கிடக்கும் வானிலிருந்து வலிகள் சுமந்து வழியும் ஒளியை துயருடன் சுமக்கிறது இரவு...

இரவு...

நகரும் பெருந்தேரின் கீழ் நசுங்கும் சிறுகல்லென அலுப்புகளை அழுத்தி இமைகளின்மேல் உருள்கிறது இரவு...

இரவு...

மணல்வெளியில் ஊர்ந்து செல்லும் பாம்பென நெளியும் நினைவுகளில் பகல் கழிந்தபின் கனவுத் தடங்களை காற்றால் வருடுகிறது இரவு...

இரவு...

கடலென விரிந்த இருளில் படகென மிதக்கும் நிலவில் கனவுகள் பயணிக்க துடுப்பசைக்கிறது இரவு...

இரவு...

குழந்தை சுமந்து திருவிழாவில் நடக்கும் தகப்பனென இருள் சுமந்து உடுக்களிடையே நடக்கிறது இரவு...

இரவு...

நொறுங்கிய நினைவுகளின் சிதறல்களின் மீது நடக்கும் கனவுகளின் கால்களில் கசியும் ஈரம் இமைகள் நனைக்க வெளியேறும் உறக்கத்தின் விரல் பிடிக்கிறது இரவு...

இரவு...

இங்கே சில பகல்களே கருத்துக் கிடக்கையில் இருளாகவே இருந்துவிட்டு போகட்டும் இரவு...

புலன்...

மேலைக் காற்றில் மேலெழும் தூசுகள் மெல்ல படிந்தபின் தெளிவாகிறது புலன்...

காலம்...

காலம் கடத்திச் செல்கிறது... நினைவுகளை உதிர்த்துவிட்டு நிஜங்களை... காலம் கடத்தித்தான் செல்கிறது... உதிர்ந்த நினைவுகளின் வாசம் சுழன்றுகொண்டே இருக்கிறது நாசிக்குள்...

இரவு...

தூறல் தழுவிய தூய காற்று தேறலின் மயக்கத்தை தேகத்தில் போர்த்த உறக்கத்தில் மிதக்கிறது இரவு...

இரவு...

விழிகளிலிருந்து நழுவும் உறக்கத்தை இருள் விரல்கள் இழுத்துப் பிடிக்க இமைகளுக்குள் தள்ளும் கனவுகளைத் தாங்குகிறது இரவு...

மவுனம்...

நமக்கு வேண்டியவர்களுக்கு நாம் வேண்டாதபோது உணர்வுகளை நிரப்புகிறது மவுனம்...