Posts

Showing posts from December, 2017

இரவு...

பனி சுமந்து பவனி வரும் குளிர் காற்றில் உடல் குறுக்கி உறக்கம் போர்த்த விரிகிறது கனவுகளோடு இரவு...

இரவு...

இமைகளுக்குள் அடங்காமல் விழிகளின் மேல் நடந்து செல்கிறது நீண்ட இரவு...

இரவு...

மெல்லிய பனிக்காற்றில் மிதக்கும் மேகங்களில் கதிரவன் கண்ணயர ஓடிய பகலின் நிழலென நீள்கிறது குளிர் போர்த்திய இரவு...

இரவு...

ஒளி இருளில் கரைய விழி உறக்கத்தால் நிறைய கனவுகளோடு கைகோர்த்து நடக்கிறது இரவு...

இரவு...

வான வீதியின் விளக்குகளை இருள் அணைக்க தடுமாறிய மேகங்கள் தடம் மாறாமல் வழி காட்டுகிறது இரவு...

இரவு...

ஈரத்தரையில் வளை தோண்டும் சிறு எலியென இருள் தோண்டி மெல்ல நகர்கிறது இரவு...

இரவு...

நீண்டுகொண்டே செல்லும் இருட்சாலையில் எங்கேனும் வெளிச்சத் திருப்பம் வருமென்றே நடக்கிறோம் நானும் இரவும்...

இரவு...

கதிர் கடந்தபின் கருத்த வானில் வெளிச்ச மொட்டுக்கள் விரியும் என்று இருளில் காத்திருக்கிறது இரவு...

இரவு...

இருள் கடலின் கருமை அலைகளில் கைப்பிடி அள்ளி கண்களுக்குள் ஊற்றி உறங்கச் சொல்கிறது இரவு...

இரவு

விரியும் வெளியையும் வெளியின் பொழுதையும் விழிகளுக்குள் சுருக்கி உறக்கத் தாழிடுகிறது இரவு...

இரவு...

விண்மீன் மல்லிகை விரிந்து சிரிக்க இருள் கொடியில் மணக்கிறது இரவு...

இரவு...

இருள் வந்து இமை வருடி விழி போர்த்த விழித்த கனவுகளின் வழித்துணையாகிறது இரவு...

இரவு

காலம் என்ற புல்லாங்குழலில் காற்றெனப் புகுந்தது பொழுது... இருள் துளைகளில் இசையாய் வழிகிறது இரவு...

இரவு...

இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே நிரப்ப உறக்கம் சுமந்து இருள்வெளியில் நத்தையென நகர்கிறது இரவு...

இரவு

புயல் காற்றில் கொந்தளிக்கும் பேரலைகளென துயர் காற்றில் மன ஆழியில் எழும் அலைகளில் நீந்தத் திணறுகிறது இரவு...

இரவு...

துயர் கசிந்து சோர்ந்த விழிகளை துவண்ட இமைகள் மெல்ல மூட உறக்கம் எரித்து இமைகள் திறக்கிறது இரவு...

இரவு...

இரையைத் தொடரும் எரிவிழி வேங்கையென இருளைத் தொடர்கிறது இரவு...

இரவு...

விடியல் வருமென்று உறங்கும் விழிகளை மூடிய இமைகளை மெல்ல கடக்கிறது இரவு...

இரவு...

கனவுகளும் கற்பனைகளும் கலைந்த பிறகு ஒப்பனை கலைத்த காலம் எதார்த்தத்தை களைத்த கண்ணில் காட்ட இறுக மூடிய ஈர இமைகளின் உள்ளும் புறமும் இருள் நிறைக்கிறது இரவு...

இரவு...

நனைந்து நடுங்கும் நிலத்தில் விழும் துளிகளென விழிகளில் இருந்து நழுவிச் செல்லும் உறக்கத்திற்கு அணை போட முயலும் இரவு...

இரவு...

கொழுந்துவிட்டெரியும் கொடுந்தீயின் நாவுகளென சுழன்று கனலும் நினைவுகளின் மேல் அடர்புகையென எழும் கனவுகளின் கருமையில் நிறைகிறது இரவு...