Posts

Showing posts from October, 2017

இரவு...

இருள் ஜன்னலில் சிரிக்கும் நிலவை முகில் துகிலால் முகம் மறைக்க முகம் கருத்த விண்மீன்களை தடம் தெரியாமல் கடக்கிறது இரவு...

இரவு...

கருமுகில்கள் தரும் துளிகள் வரும் வரையில் வான்பார்த்து நின்ற நிலமகளின் முகம் நனைக்கும் முகில் துளிகளில் உடல் சிலிர்க்கிறது இரவு...

இரவு

முகில்கள் சிதறிய சிறுதூறல் துளிகளில் முகம்நனைத்து சிலிர்த்த இருளோடு சிரித்து நடக்கிறது இரவு...

இரவு...

ஓட்டினுள் உடலை உள்ளிழுத்து ஒளியும் நத்தையென முகிலுக்குள் முழுவதுமாய் மறைந்த நிலவைத்தேடி நாற்றிசையும் பார்த்தபடி நகர்ந்து செல்கிறது இரவு...

இரவு...

இருள் கம்பளம் விரித்து விண்மீன் பூக்கள் தூவி மேக கவரி வீசி நிலவை வரவேற்கிறது இரவு...

இரவு...

உறங்கும் நினைவுகளில் நிலவொளி கல்லெறிய விழித்த கனவுகளோடு விளையாடி நகர்கிறது இரவு...

இரவு...

இருள் தூளியில் நிலவு மழலை நிம்மதியாய் உறங்க தென்றலால் விசிறுகிறது இரவு...

இரவு...

இருள் தூளியில் நிலவு மழலை நிம்மதியாய் உறங்க தென்றலால் விசிறுகிறது இரவு...

இரவு...

உறக்கப் பெருமரத்தின் விழிக்கிளைகளில் மலர்ந்து சிரிக்கும் கனவுப் பூக்களை கண்டு ரசித்தபடி வேர்களில் நீரூற்றுகிறது இரவு...

இரவு...

வெளியில் தொடங்கி விழியில் முடியும் அடர்ந்த இருளின் உறைந்த மௌனத்தில் நிறைந்து வழிகிறது இரவு...

இரவு...

முதிர்ந்த பகல் உதிர்ந்த பின்பு முகிழ்த்த இருளில் செழித்த விண்மீன்களை ரசித்து நகர்கிறது இரவு...

இரவு...

கலங்கிய நீரின்மேல் கலைந்து ஆடும் பிம்பம் போல கலவையான நினைவுகளின்மேல் நடனம் ஆடும் கனவுகளுக்கு காவலாக உறக்கம் வைக்கிறது இரவு...

இரவு...

விண்மீன் மத்தாப்புகளின் முகில் புகையில் இருள் மூழ்க தீபாவளி கொண்டாடுகிறது இரவு...

இரவு...

முகில்அலைகளின் அடியில் இருள்கடலின் ஆழத்தில் விண்மீன் முத்துக்கள்... முக்குளிக்க மூழ்குகிறது இரவு...

இரவு...

விண்மீன் வைரங்களை பட்டைதீட்டிச் செல்லும் இருளோடு கைகோர்த்து நடைபழகி நகர்கிறது இரவு...

இரவு...

கனவுகள் சுமக்கும்போதும் களைப்பு உணராத விழிகளுக்கு வெளியே விரியும் இருளில் தேயும் நிலவில் காயும் இரவு...

இரவு...

பகலினை விழுங்கிய இருள்பாம்பு நிலவொளியில் நெளிய நிசப்தமாய் நகர்கிறது இரவு...

இரவு...

நினைவுகளைச் சுமக்கும் கனவுக் குதிரைகள் கண்களுக்குள் விட்டுச் சென்ற குளம்படித் தடங்களை விடியும்முன் வேகமாக இருள்கொண்டு துடைக்கிறது இரவு...

இரவு...

விண்மீன் அடியார்கள் இருள்வடம் பிடித்திழுக்க அசைந்து நகர்கிறது நிலவுத் தேவதையின் இரவுத் தேர்...

முரண்...

நெடுங்கிளைகள் ஒடித்தெறியும் பெருந்துதிக்கையில் சிறு அங்குசம்... கற்பாறைகளை இடறித்தள்ளும் கால்களில் கட்டிய சங்கிலி.... பெருமரங்கள் பெயர்த்தெறியும் மத்தகத்தின் பின்னால் பிழையாக ஒரு மனிதன்... பிச்சையெடுக்கிறது பெருங்களிறு...

சே...

சலவைகாணா உடை சவரம்காணா முகம் ஆயினும் அழுக்கில்லா புன்னகை... அவன்தான் சே... மண்ணை வென்றவர்கள் மறைந்து போகலாம் மனங்களை வென்றவர்கள் மரணிப்பதே இல்லை... ஐம்பது ஆண்டுகள் ஆனாலென்ன ஆயிரம் ஆண்டுகள் போனாலென்ன தங்கத்தில் ஒருபோதும் துரு ஏறுவதில்லை... அடிமைச் சங்கிலியின் மேல் விழும் ஒவ்வொரு அடியிலும் உன்குரல் ஒலிக்கும்... அடக்குமுறைகளை ஒடுக்க முனைகையில் உன்சினம் தெறிக்கும்... பயந்தவன் கோழையாகிறான் துணிந்தவன் வீரனாகிறான் துணிவின் ஒளியில் இப்போதும் நீ வாழ்கிறாய் சே...

இரவு...

வெளியும் காலமும் வளைந்த கணத்தின் உட்குழிவில் சிக்கிய பொழுதென முடிவின்றி நீள்கிறது உறக்கம் தொலைந்த இரவு...

இரவு...

ஒளியின் கரையில் உறங்கும் இருளின் கர்ப்பத்திலிருந்து எழுந்த கனவுகள் இமைகளுக்குள் இடம்பெயர உறக்கத்தின் விரல் பிடித்து கனவுகள் கடக்கிறது இரவு...

இரவு...

பாயும் உறக்க நதியில் தாவும் கனவு மீன்களை வாரி அள்ள இருள்வலை விரிக்கிறது இரவு...

இரவு...

உடைந்த இருளின் விரிசல்கள் வழியே கசியும் நிலவொளியில் கழுவிய கனவுகளை இமைகளின் மேல் எடுத்துப் போர்த்தி இறுக்கமான உறக்கத்தை இலேசாக்கிச் செல்கிறது இரவு...

இரவு...

சிறு மழைக்குப் பின் தேங்கிய நீரில் மிதக்கும் நிலவினை மெல்லக் கடக்கிறது இரவு...

இரவு...

தேர்ந்த சிற்பியின் கையில் விளையாடும் சிற்றுளி ஒன்று மாயம் செய்வதுபோல் இருள் கொண்டு உறக்கம் செதுக்குகிறது இரவு...

இரவு...

எழுந்தது தொடங்கி விழுந்தது வரை எரித்த சூரியனின் தகித்த வெப்பத்தில் சொட்டுச் சொட்டாய் உருகிய பகல் உறைந்தபோது இரவானது...

இரவு...

வண்ணம் தொலைத்த கனவுகள் எல்லாம் வாசல் அடைக்கும் இமைகள் தாண்டி இருளில் உறையும் உறக்கம் கொல்ல சாட்சியாய் நிற்கிறது இரவு...

இரவு...

வெயிலில் காய்ந்து வியர்வையில் நனைந்து வெந்த பகலினை இருளால் துவட்டியபின் ஈரம் பூசுகிறது இரவு...

இரவு...

உறக்கம் கசியும் இமைகளின் ஓரத்தில் உள்ளே செல்ல வழி தேடிக் காத்திருக்கும் கனவுகளுக்கு இருள் திறந்து வழி கொடுக்கிறது இரவு...

இரவு...

அந்திச் சுவருக்கு அப்பால் சென்று மறைந்த பகலை இருள் பிடித்தேறி தேடிப் பார்க்கிறது இரவு...

இரவு...

கண்கள் உறங்கக் காத்திருக்கும் கனவுகளோடு கரங்கள் கோர்க்கிறது நினைவுகளில் நனையும் இரவு...

இரவு...

இருளுக்குள் இருந்து இமைகளுக்குள் இடம்பெயரும் கனவுகளின் காலடித் தடத்தில் நடந்து செல்கிறது இரவு...

இரவு...

விழிகளை நிறைத்த வண்ணங்கள் வழிந்தபின் வெற்றிடம் நிரப்ப உறக்கத்தின் ஊடாக ஓடிவரும் கனவுகளை இருள் பிடித்தேறி எட்டிப் பார்க்கும் இரவு...

இரவு...

உதிரும் பூக்களின் உடல் நனைத்துப் போகும் வளரும் நிலவின் ஒளியில் இருள்செடியில் மலர்கிறது இரவு...