மந்தைகள்

இந்த மந்தைகள்
பழக்கப் படுத்தப்பட்டவை...
மேய்ப்பனின்
குரலுக்கேற்ப ஓடவும்
சிறு குச்சியின்
அடிகளுக்கேற்ப
திசைமாறவும்....

இந்த மந்தைகள்
சொல்லி வளர்க்கப்பட்டவை...
பட்டிக்குள்ளேயே
சுற்றுவதுதான்
சுதந்திரமென்று...

இந்த மந்தைகள்
அறிவூட்டப்பட்டவை...
அஞ்சி வாழ்வதும்
அடிபணிந்து கிடப்பதுமே
பிழைத்திருக்க
ஒரே வழியென்று...

இந்த மந்தைகள்
விதிகள் பதியப்பட்டவை...
ஒட்டக் கறப்பதற்கோ
வெட்டப் படுவதற்கோதான்
விற்கப்படுகிறோமென
அறிந்தாலும்
மறுப்பின்றி செல்வதே
விசுவாசமென்று...

இந்த மந்தைகளுக்கு
நன்றாகவே தெரியும்
கடுங்குளிரில்
மேய்ப்பன்
சுகமாய் போர்த்த
கம்பளி செய்யவே
தாங்கள்
மயிர் வளர்க்கிறோமென்று...

இந்த மந்தைகள்
அறிந்தேயிருக்கின்றன
தங்கள் கொழுப்பில்
எரியும் விளக்கின்
வெளிச்சம்
மேய்ப்பனுக்கேயென்று...

ஆனாலும்
இந்த மந்தைகள்
உரிமையுடையவை...
தங்கள் மேய்ப்பனை
தாங்களே தேர்ந்தெடுக்க...

ஒரு தேர்வு நாளில்
இந்த மந்தைகள்
கூடிப் பேசின...

தடிகொண்டு அடிக்கும்
மேய்ப்பனை
தள்ளி விட்டு
வசீகர முகத்தோடும்
வாஞ்சையான
வார்த்தைகளோடும் வந்த
புதிய மேய்ப்பனே
புனிதனென்று
மலர்முடி சூட்டின...

பாவம்
இந்த மந்தைகள்...
முகத்தைப் பார்த்தவை
முதுகை மட்டுமல்ல
முட்சவுக்கையும் பார்க்கவில்லை...

மேய்ப்பனின் கரங்களில்
குருதி வழியும்
முள் சாட்டை...

இப்போதும்
இந்த மந்தைகள்
பழகிக்கொண்டேதான் இருக்கின்றன...
ஒவ்வொரு சொடுக்கலிலும்
மேற்தோல் கிழிந்து
உட்சதை பிளந்து
ஒழுகும் குருதி
நிலம் நினைத்தபோதும்
சிறு கனைப்போடும்
சிந்தும் கண்ணீரோடும்
எதிர்ப்புகள் ஏதுமின்றி
மந்தையாய் செல்வதற்கு...

இப்படியே
பழகிப்போன மந்தைகள்
இப்போது மட்டுமல்ல
எப்போதுமே
இயேசுக்களை
தேர்வு செய்வதில்லை
மேய்ப்பனாக...

குறிப்பு:
--------------
வாசிப்போர் செய்யும் உருவகங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது... 😊

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...