ஓடுகிறீர்கள்...

ஓடுகிறீர்கள்...
வேகமாகவே ஓடுகிறீர்கள்...

முன்னால் நகரும்
இலக்கு நோக்கி
மூச்சிரைக்க
நாவறள
நன்றாகவே
ஓடுகிறீர்கள்...

அள்ளியெடுத்து
அணைத்த கரங்கள்
நடுங்குகையில்
ஆதரவாய்ப் பற்ற
நேரமின்றி
நீண்ட ஓட்டம்
ஓடுகிறீர்கள்...

தத்தித் தவழ்ந்து
பற்றி எழுந்து
பழகும் நடையில்
விரல் பிடிக்க
நீளும் கரங்களை
நின்று பிடிக்க
நேரமின்றி
ஓடுகிறீர்கள்...

உடலையும் உள்ளத்தையும்
பகிர்ந்து கொண்ட உறவுக்கு
வலிக்கையில்
மருந்திட நேரமின்றி
மரத்துப் போய்
ஓடுகிறீர்கள்...

சுற்றி இருந்த சொந்தங்கள்
துயர் தணித்த நெஞ்சங்கள்
சோகத்தில் துவழ்கையில்
ஆறுதல் சொல்ல நேரமின்றி
அதிவேகமாய்
ஓடுகிறீர்கள்...

இதயத்தோடு
எதையும் பகிர்ந்து
இனிமை சேர்த்த
நட்புகள் உதிர
நாலு கால் பாய்ச்சலில்
நன்றாகவே
ஓடுகிறீர்கள்...

ஓடுங்கள்...
இன்னும் வேகமாக
ஓடுங்கள்...
இலக்கென்று
நீங்கள் நினைத்தை
எட்டிப் பிடிக்கும் வரை
ஓடுங்கள்...

துரத்திய இலக்கை
தொட்டுப் பிடித்த பின்
வெற்றிக் களிப்புடன்
சுற்றிலும் பாருங்கள்..
வெடிக்கும் மகிழ்ச்சியை
வெறுமையுடன்
பங்கிட்டுக் கொண்டாடி
மீண்டும்
ஒடத் தொடங்குங்கள்...




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...